Home » Politics » குஜராத் 2002 கலவரம்

குஜராத் 2002 கலவரம்

சில மாதங்களாக சி. சரவணகார்த்திகேயன் அவர்களின் இணையதளத்தை வாசித்து வருகிறேன். இப்புத்தகத்தைப் பற்றிய அவருடைய இணையப் பதிவுகளைப் படித்தபோதே புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்றிருந்தேன். புத்தகத்தின் கடைசி அட்டைப் பக்கத்தில் புத்தகத்தின் உள்ளடக்கத்திலிருந்து ஒரு சிறு பகுதி (excerpt) கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுபகுதியே (ஆசிரியரின் நிலைப்பாட்டில் அமைந்த) முழு புத்தகத்தின் உள்ளடக்கத்தை வாசகனுக்கு மிக எளிதாகக் கடத்திவிடுகிறது.

குஜராத் 2002 கலவரம், சி. சரவணகார்த்திகேயன், கிழக்கு பதிப்பகம், ரூ. 150

சி. சரவணகார்த்திகேயன் அவர்களால், 2002-ல் குஜராத்தில் நடந்த இனக்கலவரத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் 27 தலைப்புகளைக் (167 பக்கங்கள்) கொண்டுள்ளது. தலைப்புகள் தனி அத்தியாயங்கள்/பாகங்களாகப் பிரிக்கப்பட்டிராவிட்டாலும் முதல் 7 தலைப்புகள் (50 பக்கங்கள்) கலவரத்திற்கான பின்புலம் மற்றும் காரணத்தைப்பற்றி பேசுகிறது. 8-லிருந்து 19 வரையிலான தலைப்புகள் கலவரத்தையும், கலவரத்தில் நடந்த நிகழ்வுகளையும், அது திட்டமிடப்பட்டவிதம், செயல்படுத்தப்பட்ட முறை, எங்கெங்கு நடந்தது போன்ற பல விஷயங்களை பேசிச் செல்கிறது.

20-லிருந்து 27 வரையிலான தலைப்புகள் கலவரத்திற்குப் பின்னான விளைவுகள், விசாரணைகள், தீர்ப்புகள், நடவடிக்கைகள் பற்றி சொல்கிறது. 25-வது தலைப்பு குஜராத் கலவரம் குறித்த உண்மைகளை திறம்பட செயல்பட்டு வெளிக்கொணர்ந்த அமைப்புகள், தனிமனிதர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் தருகிறது. 26-வது தலைப்பில் குஜராத் கலவர நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த புத்தகம், திரை மற்றும் ஆவணப்படங்கள் பற்றி குறிப்பிடுகிறது. 27 அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும்/வலுப்படுத்தும் விதமாக 6 பின்னிணைப்புகளில் தரவுகள் தரப்பட்டுள்ளது. 6-வது பின்னிணைப்பில் இந்தப் புத்தகத்தைத் தாண்டி மேலும் வாசிக்க/பார்க்க/கேட்க/அறிந்துகொள்ள பல புத்தகங்கள், இணையதளங்கள், சுட்டிகள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பின்னிணைப்புகள் மூலம் தனது கருத்தை வாசகன் மேல் ஏற்றாமல் மேலும் வாசித்து ஒரு முடிவுக்கு வர வாய்ப்பைத் தந்துள்ளார் ஆசிரியர்.

2002 பிப்ரவரி 27-ல் ஆரம்பித்து மார்ச் 3 வரை நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் அப்படியே கண்முன் நிறுத்துகிறது இவரின் எழுத்துகள். சபர்மதி எக்ஸ்பிரஸின் S6 கோச்சில் 27-ல் பற்றிய அல்லது பற்ற வைக்கப்பட்ட தீயானது பற்றிப் பரவி கொழுந்துவிட்டு எரிந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை அழித்து முடியும்வரை அணையாமல் பலராலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் நம்மை சங்கடப்படுத்துகிறது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் அதனோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் கலவரத்தின் போது சொன்ன பல கருத்துகள், அந்நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்ததோடல்லாமல் எண்ணெய் வார்த்து வளரச்செய்திருக்கிறது.

தலைப்புகள் 1 – 7: அறிமுகத் தலைப்பு ‘An evil deed committed anywhere in India is the concern of every other Indian’ என்கிற காந்தியின் மேற்கோளுடன் ஆரம்பித்து நடந்த தீய நிகழ்வுகளுக்கு நம் அக்கறையின்மை ஒரு காரணம் என்பதோடு Genocide என்கிற பதத்தையும் தாண்டி Pogram என்கிற வார்த்தையைப் பிரயோகித்து நிகழ்ந்த 2002 குஜராத் கலவரத்தின் தன்மையைச் சொல்லிவிடுகிறார்.

இந்து – முஸ்லீம் – இந்தியா தலைப்பு: இந்து முஸ்லீம் சண்டையின் பூர்வாசிரமக் கதையிலிருந்து இன்றுவரை உள்ள பிரச்சனைகளை, உரசல்களை விளக்குகிறது. முகமது பின் காசின், கஜினி முகமதுவில் ஆரம்பித்து வங்கப்பிரிவினை, இந்தியப்பிரிவினை, 1992 அயோத்தி மசூதி இடிப்பு, 2001 நாடாளுமன்றத் தாக்குதல் வரை விளக்குகிறது.

கோத்ரா இரயில் எரிப்பு தலைப்பு: கோத்ரா இரயில் நிலையத்தில் பிப்ரவரி 27, 1992 அன்று நடந்த நிகழ்வுகள் அப்படியே காட்சியாக விரிகிறது. படித்துக்கொண்டிருக்கும்போதே இதயத்துடிப்பு எப்பொழுது என்ன நேருமோ என்ற பதைபதைப்பில் 100-ஐத் தாண்டி எகிர ஆரம்பித்துவிடுகிறது. கடைசியாக சிக்னல் கிடைத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா இரயில் நிலையத்தை விட்டு நகர ஆரம்பித்தபோது ஒரு ஆசுவாசம் உண்டானது. அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை, இந்தத் தலைப்பைப் படித்து முடிக்கும்போது அந்த இரயில் அப்படியே எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாமல் போயிருக்கக் கூடாதா… என்று மனம் கனத்துவிடுகிறது. இந்த ஒரு நிகழ்வுதானே ஒட்டுமொத்த குஜராத் கலவரங்களுக்கும், உயிர்ப்பலிகளுக்கும் காரணம். அந்த இரயில் அப்படியே போயிருக்கக்கூடாதா…

தலைப்புகள் 7 – 19: கலவரங்கள் குறித்தான இத்தலைப்புகளைப் பற்றி விளக்கி எழுதவெல்லாம் என்னால் ஆகாது, மனத்திடம் உள்ளவர்கள் புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளுங்கள். தலைப்பு 12 கலவரங்கள் – குல்பர்க் சொஸைட்டி – ன் கடைசிவரி இப்படி முடிகிறது, ‘நியாயம் கிடைக்க காத்திருக்கின்றன குல்பர் சொஸைட்டியின் எரிந்த வீடுகள்’ இதைப் படிக்கும்போதே நம் வயிற்றை ஏதோ பிசைகிறது. படிப்பதற்கே ஏதேதோ நமக்கு ஆகிறதே, நிகழ்வில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்குமோ… என்னென்னவெல்லாம் அந்த க்ஷணத்தில் அவர்தம் எண்ணத்தில் தோன்றியிருக்குமோ..?

தலைப்பு 14 கலவரங்கள் – பெண்கள், குழந்தைகள் – கொடூரத்தின் உச்சம் என்பார்களே அதுதான் நிகழ்ந்துள்ளது, இத்தலைப்பினை என்னால் படிக்கவே முடியவில்லை skip செய்துவிடு, செய்துவிடு என்றே மண்டைக்குள் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. ‘பெண் உடலை விளையாட்டு மைதானம்போல, சோதனை எலி போல, குழந்தையின் பொம்மைபோல பயன்படுத்தினர்’ இந்த ஒருவரி போதும் பெண்கள் மேல் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளின் கொடூரத்தை உணர்த்த. கலவரங்கள் தொடர்பான இந்தத் தலைப்புகளில் படிக்கிற பக்கமெல்லாம் 70 பேர் பலி, 120 பேர் பலி என நீளும் பலி தொடர்பான தகவல்களைப் படிக்கும்போதே பயமாயிருக்கிறது.

ஏன் எரித்துக் கொல்கிறீர்கள் என்று கேட்கும்போது, முஸ்லீம் மத வழக்கப்படி மரணித்தவரின் உடலை புதைப்பதன் வழியாகவே ஒரு முஸ்லீம் தன் வாழ்க்கையை முஸ்லீமாக வாழ்ந்து முடித்து முடிவை எய்துவதாக ஆகிறது. அதற்கு, வாய்ப்பளிக்காமல் அவர்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களை மேலும் பலவீனர்களாகவும், பாதுகாப்பற்றும் உணரச்செய்ய வேண்டி இது நிகழ்த்தப்பட்டுள்ளது, என்ன ஒரு கொடூரம். முஸ்லீம்களில் மிக உச்சமான புண்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று “காஃபிர்” – என்றால் ‘நீ ஒரு முஸ்லீம் அல்ல’ என்று ஏசுவது. இந்த ஒரு வார்த்தையையே இஸ்லாத்தை தம் உயிர் என பாவிக்கும் ஒரு முசல்மானைக் கொல்ல போதுமானது என்பார்கள். அந்த வார்த்தைக்கு உயிரளித்து ஒரு முஸ்லீமை காஃபிராக்கி அழிப்பதைத்தான் கலவரத்தில் பல இடங்களிலும் செய்திருக்கின்றனர். புத்தகத்தின் ஒரு இடத்தில் போஹ்ரா இன முஸ்லீம்கள் அதிக வட்டிக்கு ஆதிவாசிகளுக்கு கடன் கொடுத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால், இஸ்லாத்தில் ‘ஹராம்’ அதாவது செய்யக்கூடாத, விலக்கவேண்டிய பாவங்கள் என்று குறிக்கப்பட்டுள்ள விஷயங்களில் வட்டிக்குவிடுவது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரம் நடந்த காலத்திலிருந்து இன்றுவரை கலவரம் குறித்த பெரும்பாலான தரவுகள் காட்சி ஊடகங்களின் மூலமே தமிழ் மக்களைச் சென்று சேர்ந்துள்ளது. இதிலும் சில பல தகவல்கள் (ஒரு பக்க) சார்புள்ளதாகவே இருந்துள்ளது. இரு பக்க உண்மைகளையும் தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கொண்டு சேர்ப்பதில் இந்தப் புத்தகத்தின் பங்கு நிச்சயமாக இருக்கும். சேர்ந்தாற்போல் ஒரு 2 மணிநேரம் கிடைத்தால் வாசித்துமுடித்துவிடக்கூடிய புத்தகம்.

புத்தகம் : குஜராத் 2002 கலவரம்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு : ஜனவரி 2014
பக்கங்கள் : 168
ISBN : 978-93-5135-168-9

குறைகள்:

கலவரங்கள் குறித்த அத்தியாயங்களில் தரவுகள் மட்டுமே அதிகம் உள்ளதுபோல் ஒரு உணர்வு ஏற்படுவதால் ஒரு சில இடங்களில் படிப்பதில் ஆயாசம் ஏற்படுகிறது. ஆனால், கலவரங்கள் குறித்த இப்பகுதிகளின் அளவைக் குறைத்தால் அது நடந்த கலவரத்தின் வீரியத்தை வாசகனுக்கு கடத்தத் தவறிவிடும் அபாயமும் உள்ளது.

கலவரத்தின் பின்புலத்தைப் பற்றிப் பேச 50 பக்கங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பிடத்தக்க பகுதியை மிகப்பழைய இந்திய (முகலாய) வரலாறு எடுத்துக்கொண்டுள்ளது. இப்பகுதியை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

பின்குறிப்பு:

புத்தகத்தைப் படிக்கும்போது அவ்வப்போது கண்ணில் பட்ட எழுத்து/இலக்கணப் பிழைகள்:

[XபிழைX (சரி)]

1. முதல்பக்கம் – ஆசிரியர் பற்றிய அறிமுகம்.
– 9 ம் வரி Xஎன்கிறX (ஆகிய (அ) முதலிய) கவிதைத் தொகுதிகள்

2. 10ம் பக்கம் கடைசி வரி Xசமர்பதிX (சபர்மதி) எக்ஸ்பிரஸ்

3. 23ம் பக்கம் 11-12 ம் வரி X1970-ல் குஜராத் தலைநகர் ஆனது காந்திநகர்X

4. 40ம் பக்கம் 14 ம் வரி கிடைத்த Xஆதரங்களின்X (ஆதாரங்களின்) அடிப்படையில்

5. 45ம் பக்கம் 22-23 ம் வரி அடையாளம் சரியாக Xஅடையாளம்X காணப்படாத

6. 46 ம் பக்கம் 17-19 ம் வரி எந்த உத்தரவாதத்தையும் விஷ்வ ஹிந்து பரிஷத்
Xவழங்கப்படவில்லைX (வழங்கவில்லை)

7. 47ம் பக்கம் கடைசி 3வது வரி ஆதரவை Xஅறிவித்ததிருந்ததுX (அறிவித்திருந்தது)

8. 88ம் பக்கம் 2 ம் வரி Xவண்புணர்வுச்X (வன்புணர்வுச்) சம்பவங்கள்

9. 94 ம் பக்கம் 17ம் வரி XகலாசாரX (கலாச்சார) அடையாளம்

10. 97 ம் பக்கம் 1ம் வரி Xகலவரஙகள்X (கலவரங்கள்) நடந்து

11. 102 ம் பக்கம் 17 XஆதாரவாகX (ஆதரவாக) வலுவாகக் குரல்

12. 112 ம் பக்கம் கடைசி வரி வீடுகள், Xகலைகள்X (கடைகள்) மீது கற்களையும்

13. 131ம் பக்கம் கடைசி 6வது வரி அவர் கேட்டுக் Xகொன்டார்X (கொண்டார்)

14. 135ம் பக்கம் 22ம் வரி முஸ்லீம்கள் Xதன்X (தம்) பணிகளில் இருந்து

15. 149ம் பக்கம் 15 ம் வரி Xகண்னாடித்X (கண்ணாடித்) துண்டுகளும்

16. 154 ம் பக்கம் 10 ம் வரி கோத்ரா டவுனில் பதற்றத்தை Xபதற்றத்தைX ஏற்படுத்தி

17, 154ம் பக்கம் கடைசி வரி Xவதத்திகள்X (வதந்திகள்) கோத்ராவில்

18. 158 ம் பக்கம் கடைசி 4வது தேசவிரோதிகளின் Xஉணவங்களையோX (உணவகங்க)

19. 159 ம் பக்கம் 12 ம் வரி தேசத்தைப் Xபாதுக்காக்கும்X (பாதுகாக்கும்) ஆளுக்கு

புத்தகத்தின் சில இடங்களில் VISA ஆனது விஸா என்றும் சில இடங்களில் விசா என்றும் உள்ளது. அதுபோலவே BBC சில இடங்களில் பிபிசி (BBC தமிழ் இணையதளத்தில் பிபிசி என்றுதான் உள்ளது). எனவும் சில இடங்களில் பிபிஸி எனவும் உள்ளது.

கார்த்திகேயன் கிருஷ்ணமூர்த்தி

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-168-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: