Home » Biography » நேரு: உள்ளும் புறமும்

நேரு: உள்ளும் புறமும்

ஜவஹர்லால் நேரு. ஏகப்பட்ட புகழுரைகள். ஓராயிரம் விமர்சனங்கள். இன்றைய குறைபட்ட ஜனநாயகத்தோடு குடிமக்களாகிய நாம் வாழப் பழகிக்கொண்டதற்கான அடித்தளம் இட்டவர். இன்றளவும் இங்கு ஜனநாயகம் சிதைந்துவிடாமல் ஏதோ ஒரு வடிவத்திலாவது நிலைத்திருப்பதற்குக் காரணம் இவர்தான். இப்படி எப்போதுமே இரு துருவ நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் வைத்து விமர்சிக்கப்பட்டும் வழிபடப்பட்டும் வந்தவர் ஜவஹர்லால் நேரு. உலகம் இரட்டைத் தன்மையோடு இரு பெரும் வல்லரசுகளுக்கிடையில் இயங்கிய காலகட்டத்தில் இரு வல்லரசுகளின் பக்கம் சாய்ந்துவிடாமல் தனித்ததொரு பாதை போட்டு இரு சித்தாந்தங்களுக்கு இடைப்பட்ட பாதையில் நடந்து சென்றவர். நேற்றுவரை இந்தியாவின் அயல்நாடுகளுடனான உறவுகளுக்கான இந்தியாவின் கருதுகோளை வடிவமைத்த நேருவின் அரசியல் வாழ்க்கை, வெளியுறவுக் கொள்கையின் உருவாக்கம் போன்றவற்றை அவரது வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த Jawaharlal Nehru: Civilizing a savage world என்ற நூலின் தமிழாக்கம் “நேரு: உள்ளும் புறமும்”.

நேரு: உள்ளும் புறமும், நயன்தாரா சகல், கிழக்கு பதிப்பகம், ரூ. 200

புத்தகத்தின் தலைப்பை எப்படி ராமச்சந்திர குகாவின் புத்தகத்தால் கவரப்பட்டு பெயர் சூட்டினாரோ, அவரைப் போலவே புத்தகம் பேசும் கருவோடு தொடர்புடையவர்களின் மேற்கோள்களைக் காட்டி அது தொடர்பான நிகழ்வுகளையும் விளக்குகிறார்.

முதல் அத்தியாயம் முழுக்க நேரு குடும்பம் பற்றியதாக இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த அத்தியாயத்தில் இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதம் ஒன்றில், “நம்முடைய இந்த உலகத்தின் கதையைப் பற்றிச் சிறிதேனும் நாம் தெரிந்துகொள்ள விரும்பினால், நாம் பிறந்திருக்கும் ஒரு சிறிய நாட்டைப் பற்றி மட்டும் நினைத்தால் போதாது, இந்த உலகத்தில் உள்ள எல்லா நாடுகளைப் பற்றியும் எல்லா மக்களைப் பற்றியும் நாம் நினைக்க வேண்டும்” என்கிறார்.

முதல் அத்தியாயம் முழுக்க குடும்பக் கதை என்பதாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தாலும் இத்தகைய மேற்கோள்கள் நேரு என்ற மனிதர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்ட கருத்தாக்கங்களில் ஆரம்பத்திலிருந்தே வளர்த்திருக்கிறார் என்பது புரிகிறது. குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்தத் துறையில் பிற்காலத்தில் பங்களித்ததையும் நாம் புத்தகத்திலேயே பார்க்கிறோம்.

அடுத்த சில அத்தியாயங்களில், சோவியத்தில் விஜயலட்சுமி (நூலாசிரியரின் தாயார்) வெளியுறவுத்துறை அலுவலராக இருந்த சமயத்திலும், அமெரிக்காவில் இருந்த சமயத்திலும் அவர் நேருவுக்கு எழுதிய கடிதங்கள் துவக்கக் கால வெளியுறவுத்துறை தொடர்பான கருத்தாக்கங்கள் உருவான விதமும், புதிதாக உருவான ஒரு நாட்டின் மீதான இரு வல்லரசுகளின் பார்வையும் எப்படி இருந்தன என்பதை இந்தக் கடிதங்கள் விளக்குகின்றன. இந்தப் புத்தகத்தின் ஒட்டு மொத்த நோக்கமுமே பனிப்போரின் துவக்க காலத்தில் இரு வல்லரசுகளுக்கிடையில் நேருவின் பார்வை இந்தியாவின் வெளியுறவுத் துறையை எப்படி வழி நடத்திச் சென்றது என்பதாகத்தான் இருக்கிறது.

சூயஸ் கால்வாய் பிரச்சினை, காமன்வெல்த் அமைப்பு தொடர்பான சிக்கல்கள், அகதிகள் தொடர்பான சிக்கல்கள், அணி சேரா நாடுகள் போன்ற பல சிக்கல்களில் நேருவின் நிலைப்பாடுகள், அத்தகைய நிலைப்பாடுகளுக்கு அவர் காரணமாக இருந்தவை குறித்த அவருடைய மேற்கோள்கள், அவை தொடர்பான அவருடைய கடிதப் போக்குவரத்துகள் ஆகிய பலவும் விவரிக்கப்படுகின்றன. நேருவின் மிகப்பெரும் தோல்வியாகவும் சொதப்பலாகவும் கருதப்படும் காஷ்மீர் சிக்கலைப் பற்றி இந்தப் புத்தகம் எதுவுமே பேசவில்லை. இதைப் பற்றிப் பேசுவதற்குத் தனியாக ஒரு புத்தகமே எழுத வேண்டுமென்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் இந்தப் புத்தகத் தலைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பிலேயே எனக்குப் பெரும் சிக்கல். ராமச்சந்திர குகாவின் Savaging the Civilized – Verrier Elwin, His Trials & India என்ற நூலின் தலைப்பிலிருந்தே இப்புத்தகத்துக்கு ஆங்கிலத் தலைப்பை நூலாசிரியர் சூட்டினார். அது பொருத்தமான தலைப்பும்கூட. ஆனால், தமிழ் மொழிபெயர்ப்போ நேருவின் உளவியலை ஆய்வு செய்தது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது. அதையும் ஒரு வகையில் ஏற்றுக்கொண்டால் கூட தமிழின் பிரிக்க முடியாத தொகைகளில் ஒன்றான அகம் புறம் என்பது நினைவில் வந்து போகிறது. அகமென்னும் கனியிருக்க காய்கவர்ந்ததைப் போன்று தோன்றுகிறது.

புத்தகத்தின் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை சில இடங்கள் இடறுகின்றன. மூன்றாம் பெற்றோர், சில இடங்களில் பெல்லோ போன்ற வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது போன்று இன்னும் அதிகமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லலாம். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக புத்தகத்தின் பின்னட்டை நூலாசிரியருக்கு நேருவை தாத்தாவாக ஆக்கியதையும் சொல்லலாம்.

ஒட்டுமொத்தமாகப் புத்தகம் நேருவை உயர்த்திப் பிடித்தாலும், சில இடங்களில் அமெரிக்க இதழ்கள், சோவியத் இதழ்களின் நேருவைப் பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கிறார், உடனே அங்கிருந்தே கிடைக்கும் புகழுரைகளையும் சுட்டிக்காட்டிவிடுகிறார். நேருவைப் பற்றிய புத்தகம் வழியே இந்தியக் குடியரசின் முதல் இரு பத்தாண்டுகளின் வரலாறும் அதன் கோட்பாடுகளாகவும் வெளியுறவுக் கொள்கைகள் உருப்பெற்றதையும், உள்நாட்டுச் சிக்கல்கள் சிலவற்றை அவர் கையாண்ட விதமும் அது தொடர்பானவற்றையும் அறிகிறோம்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பொருத்தப்பாடு அற்றவையாகத் தோன்றும் காலகட்டத்தைச் சேர்ந்த நம் தலைமுறையில் இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கைகள் உருவாக்கம் பெற்றதை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் அறிமுகமாக அமைகிறது.

— மாமூலன்

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-152-8.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: