Home » History » குஜராத், இந்துத்துவம், மோடி

குஜராத், இந்துத்துவம், மோடி

”……எதிர்வரும் தேர்தலில் (இது நாடளுமன்ற தேர்தலுக்கு முன் வந்த புத்தகம்) மோடி வெற்றி பெற்றால் என்னாகும் என்பதைவிட தோல்வியடைந்தால் என்னாகும் என்று நினைத்தே அதிகம் வருந்துகிறேன். அவரும் அவருடைய காவி நண்பர்களும் அந்தக் கோபத்தை முஸ்லீம்கள் மீது அல்லவா திருப்புவார்கள்” என்று பியூசிஎல் அமைப்பின் துணைத் தலைவரும், எழுத்தாளருமான பண்டுக்வாலாவின் அபிப்பிராயத்தோடு இந்தப் புத்தகம் முடிகிறது.


குஜராத் ஹிந்துத்துவம் மோடி, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 150

நல்ல வேளை தேசிய ஜனநாயக முன்னணி கட்சி வெற்றி பெற்று மோடி அரியணை ஏறியதால் குறிப்பிடும்படியான அல்லது கோத்ரா போன்ற கலவரமோ / அசம்பாவிதமோ நடக்கவில்லை. மருதன் எழுதி கிழக்குப் பதிப்பக வெளியீடாக இவ்வருடம் ஜனவரி மாதம் வெளியான புத்தகம் `குஜராத், இந்துத்துவம், மோடி’.

குஜராத் மாநில வரைபடத்துடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம் 1) குஜராத்: சாதி, மதம், சமூகம், 2) இந்துத்துவம், 3) குஜராத் ஒளிர்கிறதா?, 4) குஜராத்:வகுப்புவாதமும் கலவரங்களும், 5) நரேந்திர மோடி: இந்துத்துவ அரசியலின் முகம் என ஐந்து பகுதிகளில் இருபது அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு முன்பாக பாஜகவும், அது சார்ந்த ஊடகங்களும் குஜராத் மாடலைக் நாடு முழுவதும் கூவிக்கூவி விற்றனர். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது அதில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் `இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்த’ மாயைதான் என்பது தெளிவாக விளங்கும். நரேந்திர மோடியின் அசாத்தியமான நிர்வாகத் திறன் குறித்து புளகாங்கிதம் அடையாத தொழிலதிபர்கள் இல்லை. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் துணையுடன் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை ஆராய்ந்த போது அவற்றில் வெறும் 25 சதவிகிதம் மட்டுமே நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது தெரியவந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

குஜராத் மாடல் குறித்து பொருளாதார நிபுணர் ஜகதீஷ் பகவதிக்கும், அமர்த்தியா சென்னுக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான விவாதத்தை தேசிய அளவிலான பத்திரிகைகள் வெளியிட்டு அவர்களுடைய கருத்துக்களுக்கு அரசியல் முலாம் பூசப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்து யார், இந்துத்துவா என்றால் என்ன, நரேந்திரமொடியின் வளர்ச்சி, அங்கு நடந்த வகுப்புக் கலவரங்கள், அந்த நேரத்தில் காவல் துறை எப்படி செயல்பட்டது என்பது குறித்து விலாவாரியாக மருதன் விவரித்திருக்கிறார்.

சாவர்க்கர் ஓர் அறிமுகம் பகுதியில், அவருக்கு பத்து வயதாக இருக்கும் போது மகாராஷ்டிராவிலும், பம்பாயிலும் இனக்கலவரம் மூண்டதாகவும் அப்போது அவர்  தன் பள்ளித் தோழர்கள் சிலர் அடங்கிய குழுவுக்குத் தலைமையேற்று கிராமத்திலுள்ள மசூதியை நோக்கிச் சென்று கல்மாரி பொழிந்து, ஓடுகளையும், சன்னல்களையும் உடைத்த பின் வெற்றியோடு (!) திரும்பியதாகவும் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

இந்து மதம் குறித்தும் பிராமணர்கள் குறித்தும் அம்பேத்கார் முன் வைத்த கூர்மையான விமர்சனங்களை மறைத்துவிட்டு, இஸ்லாமும், கிறிஸ்துவமும் இந்தியாவுக்கு அந்நியப்பட்ட மதங்கள் என்பதாலேயே அம்பேத்கார் பெளத்தமதத்திற்கு மாறினார் என்று பிரச்சாரம் செய்து `ஓபிசி’களின் ஓட்டுக்காக அம்பேத்காரை தங்கள் பக்கம் இந்துத்துவவாதிகள் இழுத்துக் கொண்டனர் என்கிற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் சிறிது வளர்ச்சி அடைந்திருந்தாலும் சமூகம் சம்பந்தப்பட்ட வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது பட்டியலின் கடைசி சில மாநிலங்களில் ஒன்றாகத்தான் குஜராத் இருக்கிறது. உதாரணத்திற்கு, 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி குஜராத்தில் உள்ள 1.2 கோடி வீடுகளில் 64 லட்சம் வீடுகளில் சாக்கடை வசதி இல்லை. 52 லட்சம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்பது தெரிய வந்தது. இங்கு கையால் மலம் அள்ளுபவர்களின் எண்ணிக்கை 12,506. வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த இவர்களை நோக்கி உரையாற்றும் போது மோடி, ‘நம் நகரத்தின் பூசாரிகளே’ என்றும், மற்றவர்களின் அழுக்குகளைச் சுத்தப்படுத்தும் வால்மீகிகளின் பணி என்பது `ஒரு வித உள்ளார்ந்த ஆன்மீக அனுபவம்’, இது, `தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் பணியும் கூட’ என்று கூறி வர்ணாசிரம முறையை 21 ஆம் நூற்றாண்டிலும் வலியுறுத்தி வருபவர் இப்போது நாட்டைத் தூய்மையாக்கும் (சுவாச் பாரத்) திட்டத்தை அறிமுகப்படுத்தியது நகைமுரணாகவேத் தோன்றுகிறது. இதை அவர் முதல் மந்திரியாக இருந்த போது குஜராத்தில் ஏன் செய்யவில்லை என்பது ஒரு கேள்விக்குறி. காலம் கடந்த ஞானதோயமாக இருக்கலாம்.

சமூக வரலாற்றுப் பின்னனி என்கிற அத்தியாயத்தில் பசி, மனிதவளர்ச்சி, வேலைவாய்ப்பு, அந்நிய நேரடி முதலீடு, சமூகம், மதம் என பலதரப்பட விஷயங்கள் குறித்து புள்ளிவிபரங்களுடன் ஆசிரியர் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது குஜராத் வளர்ச்சி என்பது ஒரு மாயை என்றும், வகுப்புவாதத்தின் அடிப்படையில்தான் மாநிலத்தை ஆள்பவர்கள் பிரச்சனைகளை அணுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாட்டின் பிரதமர், மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்தபோதும் அதற்கு முன்பும் அந்த மாநிலம் எப்படியிருந்தது, அங்கு நிலவிவரும் சமூகப் பொருளாதார நிலைமை என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் பயணக்குறிப்புகள், நேர்காணல்கள், நம்பகமான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நூலைப் படித்துப் பார்க்கலாம்.

– சித்தார்த்தன் சுந்தரம்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-162-7.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: