Home » Novel » லஜ்ஜா

லஜ்ஜா

1992 டிசம்பர் 6, உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியா எனும் இடத்தில் இருந்த சுமார் 400 வருட பழமையான பாபர் மசூதி இந்து அடிப்படைவாதிகளாலும் மதவாதிகளாலும் இடித்து தகர்க்கப்படுகிறது. இது நாடு முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்திலும் மத இணக்கங்களில் பூசல்களை ஏற்படுத்துகிறது.

தஸ்லிமா நஸ்ரினின் ‘லஜ்ஜா’ நாவல் பாபர் மசூதி சம்பவதிற்கு எதிர்வினையாய் வங்க தேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும், மதவாத கும்பலாலும் ஏவப்பட்ட வன்முறைகள் மாபெரும் ‘அவமானம்’ என ஆவணப்படுத்துகிறது.


லஜ்ஜா, தஸ்லிமா நஸ்ரின், தமிழில்: ஜவர்லால், கிழக்கு பதிப்பகம், ரூ 200

வங்க தேசத்தில் வசிக்கும் இந்து சிறுபான்மையினரின் நிலை அவலமான ஓன்று. இந்தியப் பிரிவினைக்கு பின் ஒரு கோடி இந்துக்கள் அகதிகளாகின்றனர். கிழக்கு பாகிஸ்தான் வங்க தேசமாக மாறிய பின் ஆட்சி அதிகாரம் இஸ்லாம் மதவாதிகளின் கையில் வருகிறது. விளைவாக முஸ்லிம்களுக்கு நிகரான இந்துக்களின் விகிதாசாரம் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கிறது. எஞ்சிய இந்துக்களும் தங்களை இந்துக்களாக வெளிக்காட்டிக்கொள்வதில் உள்ள அசௌகர்யத்தை அறிந்தவர்களாகவே உள்ளனர். நாவலின் ஆரம்ப பகுதிகள் வங்க தேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களின் நிலையை தெளிவாக ஆவணப்படுத்துகிறது.

சுதாமை ஓர் இந்து மருத்துவர். ஒரு சிறுபான்மையினன் என்ற காரணத்திலால் மிரட்டப்பட்டு மைமென்சிங் எனும் ஊரிலிருந்து சொத்துக்களையெல்லாம் சொற்ப விலைக்கு விற்று டாக்காவில் ஒரு சிறு வாடகை வீட்டில் மனைவி கிரன்மயி, மகன் சுரஞ்சன் மற்றும் மகள் மாயாவுடன் வசிக்கிறார். இந்துக்களின் சுமுகமான வாழ்க்கையின் நிச்சயமின்மையினால் சுதாமையின் உறவினர்கள் பலர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த பின்னரும் ஒரு நாள் இந்த நிலை நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை அவரை தாய்நாட்டிலேயே வைத்திருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு சம்பவதிற்கு பிறகு இந்துக்களின் நிலை மேலும் மோசமடைகிறது. வீட்டைவிட்டு வெளியே வரமுடியா நிலை. இந்துக்களுக்கு எதிரான வன்முறை மெல்ல தீவிரம் அடைந்து மசூதி இடிப்புக்கு பதிலாக கோயிகள் பல தரைமட்டமாக்கப்படுகின்றன. வன்முறையை கட்டுப்படுத்த வேண்டிய அரசும் காவல்துறையும் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர்.

சுரஞ்சன், தான் ஒரு இந்து என்பதாலேயே உரிமைகள் மறுக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரி. மதங்களை அடியோடு வெறுப்பவன். ஒவ்வொரு முறை இந்துக்களுக்கு எதிரான கலவரங்களும் வன்முறைகளும் நிகழும் போதும் முஸ்லிம் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் அடைதல் அவமானம் என எண்ணுகிறான். பாதுகாப்பான இடத்துக்கு போகவேண்டிய அவசியத்தை மாயா சொல்லும் போதும் மவுனமாக புறக்கணிக்கிறான்.

ஆனால் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளும் அராஜகங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பாபர் மசூதியின் இடிப்புக்கு எதிர்வினையாக வங்க தேசத்தில் ஓராயிரம் கோயில்களும், இந்துக்குகளின் கடைகளும் வீடுகளும் உடைமைகளும் சூரையாடப்படுகின்றன மற்றும் இந்துப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என நாவல் நீண்ட தரவுகளை பட்டியலிடுகிறது. மத ஒற்றுமை, ஒருமைப்பாடு என அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தாலும் வேற்று மத துவேஷமும் காழ்ப்பும் சிறுபான்மையினரின் கண்ணீருக்காக வெறிக் கொண்டு அலையதான் செய்கிறது. ஒரு பக்கம் பாபர் மசூதி திரும்ப கட்டப்பட வேண்டும் எனவும் மத நல்லிணக்கம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் கோசங்களும் ஊர்வலங்களும் நடந்தாலும் அப்பாவி சிறுபான்மையின மக்கள் அஞ்சி ஒடுங்கும் நிலையே நீடிக்கிறது.

ஒருகட்டத்தில் மதசார்பின்மை மதநல்லிணக்கம் எல்லாம் வெறும் பம்மாத்து என உணர்ந்து இந்து மதவெறியனாக தன்னை காட்டிக்கொள்ள துடிக்கும் சுரஞ்சன் ஒரு மசுதியையாவது தீயிட்டு கொளுத்த வேண்டும் என நினைக்கிறான். ஆனால் அது நிச்சயம் முடியாத காரியம். ஒரு இஸ்லாமிய விலைமகளை வீட்டுக்கு அழைத்து வந்து மிருகம் போல வன்புணர்கிறான். இது தன்னை வஞ்சித்த ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்குமான எதிர்வினை என தன்னை சமாதானம் செய்துக்கொள்கிறான். அந்த விலை மகளும் தன்னைப் போல இச்சமுகத்தால் வஞ்சிக்கப்பட்டவள் என உணரும் அவன் அவளிடம் மன்னிப்பு கேட்க எண்ணுகிறான்.

1992 வாக்கில் வங்க தேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைகளையும் கலவரங்களையும் கண்டும் காணாததுமாக இருந்த அரசையும், அரசியல் கட்சிகளையும் அதன் ஓட்டு அரசியலையும் விமர்சிக்கும் இந்நாவல் சமூக அமைதிக்கு கேடு விளைவிப்பதாக கூறி தடை செய்யப்பட்டது. தஸ்லிமா நஸ்ரினும் நாடு கடத்தப்பட்டார். மதசார்பிற்கு அப்பாற்பட்டு சிறுபான்மையினர் வகுப்புவாததினாலும் மத அடிப்படைவாததினாலும் எதிர்க்கொள்ளும் அவலங்களையும் இன்னல்களையும் ஆவணப்படுத்திய விதத்தில் லஜ்ஜா ஒரு முக்கியமான படைப்பு.

கே.ஜி. ஜவர்லாலின் மொழிப்பெயர்ப்பு தொடக்கத்தில் சோர்வை தந்தாலும் ஒட்டுமொத்தமாக மூலப்பிரதிக்கு நியாயம் செய்வதாகவே உள்ளது.

– பாலாஜி.சி

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-158-0.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: