Home » Religion » த்வைதம்

த்வைதம்

உலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மதங்களில் சில மதங்களைத் தவிர மற்றவை பெரிதும் அறியப்படாதவை. அதேபோல், மிகவும் அறியப்பட்ட இந்து மதத்தின் கிளை மதங்களிலும் சிலவையே மிகவும் பிரசித்தமானவை. இந்துமதத் தத்துவங்களிலும் கூட, அத்வைதம் நமக்கெல்லாம் மிகவும் கேள்விப்பட்ட ஒன்று, ஆனால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத தத்துவம். த்வைதம் என்பது அதிகம் வழக்கில் இல்லாத சொல். ஆனால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த இரண்டென்னும் தத்துவத்தையும், அத்தத்துவத்தை அருளிய மகான் மத்வாச்சாரியாரின் சரிதத்தையும் மிகவும் எளிமையாகப் புரிந்துக்கொள்ளும் வகையில் தந்துள்ளார் ஸ்ரீ. எஸ். இராமச்சந்திர ராவ்.

த்வைதம், ஸ்ரீ இராமசந்திர ராவ், கிழக்கு பதிப்பகம், ரூ 90

மொத்தம் பதினேழு அத்தியாயங்களில் ‘மாத்வம்’ என்னும் மதத்தின் வரலாற்றையும், அதன் கொள்கைகளையும் கதையும் கட்டுரையும் கலந்து தொடுத்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர். தெய்வப்பிறவியான ஸ்ரீமாத்வாசார்யாரின் திரு அவதாரத்தில் தொடங்கி, அவரது திருவிளையாடல் என ஒரு மகானின் சிறப்பை எவ்வளவு துல்லியமாக விவரிக்க முடியுமோ அவ்வளவு விரிவாகக் தந்துள்ளார். சிறு வயதில் பசிக்க தமக்கை கொடுத்த அண்டா நிறைய கொள்ளைத் தின்றதும், தன் தந்தை வாங்கிய கடனுக்காக புளியங்கொட்டைகளைக் கொடுத்து கடன்கொடுத்தவரை ‘செல்வந்தராவீர்கள்!’ என்று தீர்க்க தரிசனத்துடன் ஆசீர்வதித்தது போன்ற கதைகள் நம்மைப் புல்லரிக்க வைக்கின்றன. மாத்வாசார்யாரின் குருகுலவாசம், குருவின் வேண்டுகோளுக்கிணங்க சந்நியாசம் போன்ற தகவல்களை விரிவாகத் தந்துள்ளார் ஆசிரியர்.

சந்நியாசம் ஏற்று த்வைத சித்தாந்தத்தைத் தோற்றுவித்து, அத்வைத, விஷிஷ்டாத்வைத கொள்கைகளை வாதத்தால் வென்றது, பத்ரிகாச்ரமத்தில் வேதவியாசரை சந்தித்தது, உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தை எழுப்பியது போன்ற நிகழ்வுகள் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு.

த்வைத சித்தாந்தம் உருவாகக் காரணம் என்ன, அத்வைதத்தில் ஆதிசங்கரரின் மாயாவாதத்திலிருந்தும், விசிஷ்டாத்வைதத்தின் கருத்துக்களில் இருந்தும் த்வைத சித்தாந்தம் எப்படி வேறுபடுகிறது என்பதை விளக்கியுள்ள விதம் மிகவும் அருமை. த்வைத சித்தாந்தத்தின் உயிர்க் கருத்துக்களான இறைவனுக்கும், ஜீவர்களுக்கும் உள்ள வேற்றுமை, இறைவனுக்கும் ஜடத்துக்கும் உள்ள வேற்றுமை, உயிருக்கும் ஜடத்துக்கும் உள்ள வேற்றுமை, இரு ஜடங்களுக்கு உள்ள வேற்றுமை, இரு உயிர்களுக்கு உள்ள வேற்றுமை என ஐவித பேதங்களையும் விரிவாக விளக்கியதற்கு ஆசிரியருக்கு சிறப்புப் பாராட்டுக்கள். ‘மோக்ஷத்தின் சூட்சுமம்’ என்ற அத்தியாயத்தில் யார் யாருக்கு முக்தி கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதை விளக்கியுள்ள ஆசிரியர் மற்ற சித்தாந்தங்களில் கூறப்பட்டுள்ள மோட்சம் குறித்த கருத்துக்கள் எதனால் தவறானவை என்பதையும் கூறியுள்ளார். இவற்றால் த்வைத மதமே முத்திக்கு சிறந்த வழியைக் கொடுக்கும் என்ற கருத்து மிகச் செவ்வனே விளக்கப்பட்டுள்ளது. அடுத்த அத்தியாயங்களில் பகவானின் எட்டு கிரியைகளும், மாத்வர்கள் விலக்க வேண்டிய நவதோஷமும், பகவானை பக்தி செய்யும் நவ வித பக்தியும் விளக்கப்படும் விதம் மிக அருமை. அத்துடன் ஸ்ரீ மத்வர் இயற்றிய நூல்களும், அவர் எழுதியுள்ள பாஷ்யங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீமாத்வ பாரம்பர்யத்தின் ஆசார்யர்கள் வரலாறும், அவர்கள் ஸ்தாபித்த மடங்களின் விவரங்களையும் ஆசிரியர் விரிவாகக் கொடுத்துள்ளார்.இவற்றுள் நமக்கெல்லாம் அறிமுகமான, எல்லா சமுதாயத்தினருக்கும் மிகவும் பக்தி செய்கின்ற ஸ்ரீ ராகவேந்திரரின் சரிதத்திற்கு ஒரு முழு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது இப்புத்தகத்திற்கு ஒரு கிரீடம் போல் அமைந்துள்ளது. மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்களும் த்வைத சித்தாந்தத்தை அவர் பரப்பிய விதமும் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. இவர்களெல்லாம் போக கீர்த்தனத்தின் மூலமாக மாத்வ மத்த்தைப் பரப்பிய ஸ்ரீ புரந்தரதாசர், ஸ்ரீ கனகதாசர் அவர்கள் ஆற்றிய தொண்டும் விளக்கப்பட்டுள்ளது. இறுதியாக, இக்காலச் சூழலில் மாத்வ சமுதாயத்தினர் குறைந்தபட்சம் கடைப்பிடிக்க வேண்டிய கர்மானுஷ்டானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘மாத்வராயப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்பதை இப்புத்தகத்தின் மூலம் ஆசிரியர் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார். மாத்வருக்கு மட்டுமின்றி த்வைத சித்தாந்தத்தை ஆழமாக அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

– வெ. ஷங்கரநாராயணன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-179-5.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: