Home » Novel » பாகிஸ்தான் போகும் ரயில்

பாகிஸ்தான் போகும் ரயில்

மானுடகுல வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் மக்கள் இடம்பெயர்ந்தது, இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போதுதான் என்கிறார்கள். சுமார் 15 மில்லியன் மக்கள் தங்களின் உடமைகளை கைவிட்ட துயரத்துடனும் கூடவே உயிர்பயத்துடனும் பாதுகாப்பான இடங்களுக்கு பரஸ்பரம் இடம்மாறினார்கள். இந்த பயணத்தின் இடையில் லட்சக்கணக்கான இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஒருவரையொருவர் மூர்க்கமுடன் வெட்டிக் கொண்டு செத்தார்கள். (ஏறத்தாழ பத்து லட்சம் பேர்) குழந்தைகள் உட்பட முன்பின் அறியாத ஒருவரை எவ்வித குற்றவுணர்வுமின்றி வெட்டிச் சாய்ப்பதற்கும் பெண்களை வன்கலவிக்குள்ளாக்குவதற்கும் மதம் என்கிற கற்பிதமும் பழிவாங்கும் உணர்ச்சியும் காரணமாய் இருந்தது. குவியல் குவியாக மனித உடல்கள் கிடக்கிற கறுப்பு -வெள்ளைப் புகைப்படங்களைப் பார்த்தால் ரத்தம் உறைந்து போகிறது. இத்தனை பெரிய வரலாற்றுப் பயங்கர சம்பவத்தின் ஒரு சிறிய பனிக்கட்டியின் நுனியைக் கொண்டு நாவல் ஒன்று எழுதியிருக்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் குஷ்வந்த் சிங். ‘பாகிஸ்தான் போகும் ரயில்’ எழுதப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும் சூழலும் மதஅரசியலும் பகைமையும் அப்பாவி மக்களிடம் திணிக்கப்படும் அவலம் இன்னமும் இந்தியாவில் மாறாதிருப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது எனும் சமயத்தில் இது போன்ற படைப்புகளின் தேவைகளை சமகால சூழல் இன்னமும் கோருவது நம் கலாசார வீழ்ச்சியையும் சுட்டி நிற்கிறது.


பாகிஸ்தான் போகும் ரயில், குஷ்வந்த் சிங்; தமிழில் ராமன் ராஜா, கிழக்கு பதிப்பகம், ரூ 220

இந்திய எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாநிலத்திலுள்ள மானோ மாஜரா எனும் சிறிய கிராமம். மத அரசியலின் கரிய நிழல் இன்னமும் படாத அமைதிப் பிரதேசம். பெரும்பாலான நிலங்களை வைத்திருக்கும் சீக்கியர்களும் அவர்களின் பணியாளர்களாக முஸ்லிம்களும் எந்தவொரு பிரச்சினையுமின்றி காலங்காலமாக பரஸ்பர நேசத்துடன் வாழ்கிறார்கள். அந்தக் கிராமத்தின் ஒரே இந்துவான ராம்லால் கொல்லப்பட்டு வீடு கொள்ளையிடப்படும் மங்கலகரமான அத்தியாயத்தோடு இந்த நாவல் துவங்குகிறது. ஜக்காசிங் எனும் ரவுடி தான் காதலிக்கும் முஸ்லிம் பெண்ணுடன் சரசமாடுகிறான். சீக்கியனா, முஸ்லிமா, இந்துவா என அறியப்படாத பூடகமான அடையாளத்தைக் கொண்ட ஓர் இடதுசாரி அந்நியன் அந்த பிரதேசத்தில் நுழைகிறான். அதிகார போதையிலும் சுகத்திலும் ஊறித் திளைக்கும் ஹூகம் சந்த் எனும் மாஜிஸ்ட்ரேட் பணத்தை இறைத்து தன்னுடைய மகள் வயதிலிருக்கும் ஏழை முஸ்லிம் பெண்ணை படுக்கையில் வீழ்த்தி ஒருபுறம் குற்றவுணர்ச்சியையும் இன்னொரு புறம் அதை துடைத்துக் கொண்டு இன்பத்தையும் அடைகிறான்.

அதிகாரத்தை தங்களின் கைகளில் வைத்திருக்கும் நபர்கள் ஆதாய அரசியலுக்காகவும் முரட்டுப் பிடிவாதத்திற்காகவும் மூடிய அறைகளில் எடுக்கும் முடிவுகள், அதற்கு பெரிதும் தொடர்பில்லாத லட்சக்கணக்கான அப்பாவிகளின் வாழ்க்கையில் இடியென இறங்குகின்றன. இந்தியா எனும் பிரதேசம் இரண்டு துண்டாக ஆக்கப்படப் போகும் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் அதுவரை நீறு பூத்த நெருப்பாக இருந்த மததுவேஷங்கள், அரசியல் காரணமாக இன்னமும் மேலதிகமாக தூண்டப்பட்டு பாதுகாப்பின்மையுணர்வின் உந்துதலில் இடம்பெயரும் மக்கள் வழியெங்கும் சாகடிக்கப்படுகின்றார்கள். எங்கெல்லாம் பெரும்பான்மை இருக்கிறதோ அங்கெல்லாம் சிறுபான்மை இரையாகிறது. யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை எனும்படி படுகொலைகள் நிகழ்கின்றன. அந்த அமைதியான கிராமத்தில், கலவரத்தில் பலியான உடல்கள் குவியல் குவியல்களாக கொண்டு வந்து எரிக்கப்படுவதும் புதைக்கப்படுவதும் அப்பாவி மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது, மெல்லிய விரிசலையும். இத்தனை பெரிய வன்முறைகளுக்கு காரணமாக இருப்பவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். மற்றபடி பொதுச்சமூகம் ஒருவரோடு ஒருவர் இணக்கத்தோடுதான் வாழ விரும்புகிற யதார்த்தத்தையும் அதைக் குலைக்க விரும்பும் ஆதாய சக்திகளுக்குத்தான் இவர்கள் பலியாகிறார்கள் இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.

()

குஷ்வந்த் சிங் இந்த நாவலை பெரும்பாலும் வசனங்களின் உதவியின்றி காட்சிபூர்வமாகவே விவரித்துச் செல்கிறார். பெரிதும் மெனக்கிடாமல் இதையொரு சிறந்த திரைக்கதையாக மாற்றிவிடலாம் எனும்படியான அற்புதமான கட்டுமானத்துடன் இந்தப் படைப்பு உருவாகியிருக்கிறது. துவக்க அத்தியாயத்தில் வெடிக்குமொரு துப்பாக்கியின் சப்தம் அதன் பிறகு விவரிக்கப்படும் இருசம்பவங்களில் எதிரொலிக்கும் நான்-லீனியர் தன்மையையும் கொண்டிருக்கிறது. (1998-ல் இந்த நாவலின் அடிப்படையில் ஒரு திரைப்படமும் பமேலா ரூக்ஸ் எனும் பெண் இயக்குநரால் உருவாக்கப்பட்டிருக்கிறது). அந்த நிலப்பிரதேசத்தையும் அதன் சலிப்புத்தன்மையான வழக்கங்களையும் விவரிக்கும் துவக்க அத்தியாயமே அத்தனை அற்புதமாக உருவாகியிருக்கிறது. எழுத்தாளரே சீக்கிய மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தம்முடைய சுய சமூகத்தின் பிற்போக்கு குணாதிசயங்களையும் பலவீனங்களையும் மேற்குலக பார்வையில் அச்சமின்றி விமர்சித்து எழுதிச் செல்கிறார். கலவரம் ஏற்படக்கூடிய சூழலை அறிந்திருந்தாலும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மாஜிஸ்ட்ரேட்டும் காவல்துறை அதிகாரிகளும் தங்களின் சுயநலங்களோடும் புத்தக விதிகளுக்கு பங்கமேதும் ஏற்படாமலிருந்தால் போதும் என்கிற இயந்திரத்தனமான முட்டாள்தனங்களோடும் செயல்படுகிறார்கள்.

அந்தக் கிராமத்தை திருத்தி விடும் உத்தேசத்துடன் நுழையும், இடதுசாரி எண்ணங்களையும் முதிராமனநிலையையும் கொண்ட இக்பாலின் சிந்தனையோட்டங்கள் அந்தக் கிராமத்து மக்களுக்கு அந்நியமாக இருக்கின்றன. ஏதாவதொரு புரட்சியை செய்து ஹீரோவாகும் கனவே அவன் மனதை நிறைத்திருக்கிறது. யாராலும் சீந்தப்படாமல் தனியாக செய்யப்படும் தியாகத்தையும் விடவும் பிற்காலத்திய வரலாற்றில் பதிவாகப் போகும் தியாகத்தையும் சமகாலத்திலேயே அதைக் கண்டு அடையும் பெருமிதத்தையும் விரும்புபவனாக இருக்கிறான். எதையும் மேற்குலக பார்வையுடன் ஒப்பிடும் இந்தப் பாத்திரத்திற்குள் நூலாசிரியரின் ஆளுமை அழுத்தமாக படிந்திருக்கிறதா என்று யோசிப்பது ஒரு சுவாரசியமான யூகம். நாவலின் இறுதியில் பாகிஸ்தானுக்கு செல்லவிருக்கும் ரயிலொன்றில் வரும் முஸ்லிம்களை கொல்வதற்காக செய்யப்படும் சதி திட்டத்தை தடுத்து நிறுத்துவது அதிகாரவர்க்க பிரதிநிதிகளோ, உலகை திருத்த புறப்பட்ட இடதுசாரி இளைஞனோ இல்லை. ரவுடியாகவும் முரடனாகவும் படிப்பறிவு இல்லாதவனாகவும் மதச்சடங்குகளை பின்பற்றாதவனாகவும் அறியப்படும் ஜக்கா சிங் என்பவனே. இடம்பெயர்ந்த தன் காதலியின் நினைவாலும் கூட அந்த சாகசத்தை செய்ய அவன் துணிந்திருக்கலாம்.

ராமன் ராஜாவின் மிக மிக இலகுவான மொழிபெயர்ப்பு இந்த நூலின் வாசிப்பனுவத்தை இன்னமும் சுவாரசியமாக்கியிருக்கிறது.

– சுரேஷ் கண்ணன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-668-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: