Home » History » உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

ஸ்பார்டகஸ் தொடங்கி ஹோசிமின் வரையிலான எட்டு முக்கியமான நபர்களைப் பற்றி “உலகை மாற்றிய புரட்சியாளர்கள்” என்ற தோழர் மருதனின் புத்தகத்தினுள் நுழையும் போதே “இது வரலாற்று “புத்தகம் அல்ல, சோஷ‌லிசத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை விவரிப்பதே இதன் நோக்கமாகும்” என்ற வரிகளுடன் துவக்குகிறார்.

பொதுவாக ‘புரட்சி’ அல்லது ‘கம்யூனிசம்’என்ற வார்த்தை பயன்பாடுகளை பார்க்கும் போதே அவற்றை வீண் தகராறுகள், தீவிரவாதம், தேவையற்ற உயிர் அழிப்புகள் நேரிடும் என்பனவற்றோடு தொடர்புபடுத்திக் கொண்டு அத்தகைய தலைப்புகள் உள்ள புத்தங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தள்ளி நடக்கும் மனோபாவத்தை பலரிடம் நான் புத்தக கண்காட்சிகளில் வேடிக்கை பார்த்ததுண்டு.


உலகை மாற்றிய புரட்சியாளர்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 170

இவற்றை திரு மருதனும் கண்டிருப்பார் என்றே எண்ணுகிறேன். அதனால்தானோ என்னவோ “புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதையும்” மனித உயிர்கள் மதிக்கத் தக்கவை என்றும் பகத்சிங் வரிகளை முதல் அத்யாயத்தில் தெரிவிக்கிறார்.

“ஸ்பார்ட்டகஸ்” – ரோமில் அடிமை முறை மிகப்பரவலாக இருந்த கால கட்டத்தில் அவர்கள் பிற நாடுகளின் அடிமைகளோடு ஒப்பிடுகையில் மிகவும் கீழான நிலையில் இருந்துள்ளனர். கிரிக்சஸை தோற்கடித்த ரோமால் ஸ்பார்ட்டகஸை தோற்கடிக்க இயலவில்லை. அதற்கு காரணமாக ஸ்பார்ட்டகஸ் தன்னிடம் இருந்த வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த, வெவ்வேறு மொழி பேசும், பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்காணவர்களை ஒழுங்கு படுத்தி போரில் முன்னிறுத்துவதில் ஸ்பார்ட்டகஸ் சிறப்பானவராக திகழ்ந்தார் என்ற வரலாற்று செய்தியை அறிய முடிகிறது. “திராணியற்ற உதிரிகள் ஒரு வர்க்கமாகத் திரளும் போது பெரும் சக்தியாக உருமாறுகிறார்கள், அடிமைகள் எப்போதும் அடிமைகளாக நீடிப்பதில்லை” என்பது இவரது வரலாற்றிலிருந்து அறியமுடிகிறது.

“புத்தர்” – உண்மையில் புத்தர் என்வர் வாழ்ந்தாரா? என்பதற்கு ஆய்வாளர்களின் பதில் இல்லை என்ற வரியுடன் துவங்கும் புத்தரைப் படித்த போது, எனக்கு மீண்டும் எம்.ஏ (பொது நிர்வாகம்) என்ற அஞ்சல் வழிக் கல்வியின் பாடபுத்தகங்கள்தான் நினைவிற்கு வந்தது. அந்த அளவிற்கு பல ஆய்வாளர்களின் கூற்றிலிருந்து விபரங்களை தெரிவிக்கிறார் ஆசிரியர். படிக்கும் போது (திருமணத்திற்கு பின் அஞ்சல் வழியில்) இத்தனை ஆய்வாளர்களின் குறிப்புகளை எவ்வாறு நினைவில் கொள்வது என்ற அயர்ச்சி தோன்றியது போல்தான் இருந்தது. வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தன் நடையில் கொண்டு சென்றிருக்கலாம். மேலும் புத்தரை புரட்சியாளர் என்ற வகையில் சேர்க்க இயலுமா என்கிற அய்யமும் எழத்தான் செய்கிறது. முதலாளித்துவச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்க்சியம் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு சாதிய மேலாதிக்கத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புத்தர் தேவை அதற்கு முதலில் எது பெளத்தம் என்பதைவிட எதெல்லாம் பெளத்தம் அல்ல என்னும் புரிதல் அவசியமாகிறது. புத்தர் எந்தவொரு மதத்தையும் நிறுவவில்லை, என்னிடம் வாருங்கள் நான் உங்களை மீட்கிறேன் என்று சொல்லவில்லை என்பதை சொல்லுவதிலிருந்து புத்தரைப்பற்றி வித்தியாசமான செய்திகள் நாம் அறியமுடிகிறது.

“கார்ல் மார்க்ஸ், பிரடரிக் எங்கல்ஸ்” – இவர்களைப் பற்றி எத்தனை புத்தகங்கள் படித்தாலும், உலகம் முழுவதிலும்- குறிப்பாக முதலாளித்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறவர்களிடமும் தொடர்ந்து இவர்களைப் பற்றிய தேடல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் 1883ல் மரணமடைந்தபோது அவரைப் பற்றிய செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிடவில்லை என்ற செய்தியோடு, ஆனால் பின்னாளில் உலகமயமாக்கல் விரிவடைதலில் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கும் எழுந்தது என்பதை நிறுவுகிறார் ஆசிரியர். பொதுவாக மார்க்சியம், என்கிற பேச்சு எழுகிற போதெல்லாம் சோவியத் ரஷ்யாவில், சீனாவில் அது தோற்று விட்டது என்று பலர் கருத்து தெரிவிக்கிற இன்றைய கால கட்டத்தில் ஏன் மார்க்சியம் குறித்த தேடல் எழுந்துள்ளது என்பதை விரிவாக விவரிக்கிறது கட்டுரை. மற்ற புரட்சியாளர்களை தவிர மார்க்ஸ் தொடர்பாக முடிக்கும் போது துவக்க நிலை மார்க்சியம் படிப்பவர்களுக்கு ஜார்ஜ பொலிட்சர் எழுதிய மார்க்சீய மெய்ஞ்ஞானம், மற்றும் மாரிஸ் கான் போர்த் எழுதிய மார்க்சிய நுல்களுக்கான வாசகர் வழிகாட்டி என்ற இரண்டு புத்தகங்களை பரிந்துரைக்கிறார் ஆசிரியர்.

“சீமான் பொலிவார்”- லத்தீன் அமெரிக்காவின் அடையாளம் என வருணிக்கப் பட்ட சீமான் பொலிவார் பற்றி பல செய்திகள் கட்டுரையெங்கும் விரவியிருக்கிறது. ஜனநாயகத்தை நேசிக்கும் வரலாற்றாசிரியர்களுக்கு பொலிவார் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராடிய ஒரு புரட்சியாளர், சிலருக்கு அவர் ஒரு சர்வாதிகாரி, இன்னும் சிலருக்கு அவர் ஒரு சாகசவாதி மட்டுமே. ஆனால் அவரோடு முரண்படுபவர்கள் கூட தென் அமெரிக்காவின் அடையாளமாக பொலிவார் திகழ்கிறார் என்பதை மறுக்கமாட்டார்கள். யார் எப்படிச் சொன்னாலும் தென் அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வரலாற்றை பொலிவாரை ஒதுக்கி வைத்துவிட்டு பார்க்க முடியாது. ஒவ்வொரு புரட்சியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பங்கேற்றிருக்கிறார், என்ற செய்திகளின் வழியாகவும், பொலிவார் லிபரலிசத்தை வெறுத்த ஒரு விடுதலைப் போராளி, ராணுவமயமாக்கல் அவசியம் என்று கருதாத ஒரு போர் வீரன், முடியாட்சியை விரும்பிய ஒரு குடியரசு வாதி என ஜான் விஞ்சின் வரிகளின் வழியாக பொலிவாரை நமக்கு அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர். தொடரும் போர் காட்சிகள் பொலிவாரின் வீரத்தை நம்முன் நிறுவுகிறது.

இவற்றைத் தொடர்ந்து க்யூபாவின் ஹொசே மார்த்தி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஜோதிராவ் புலே, இந்து மதத்தை விட்டு வெளியேறி பெளத்த மதத்துடன் தொடர்புபடுத்திக்கொண்ட டாக்டர் அம்பேத்கார், வியட்நாமைச் சேர்ந்த ஹோ சி மின் ஆகிய புரட்சியாளர்கள் பற்றிய அரிய செய்திகள் தொடர்கிறது.

நிச்சயமாக பள்ளி மற்றும் கல்லூரி கல்விகளில் இத்தகைய புரட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகளை நாம் படித்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற புத்தகங்கள்தான் இவர்களைப் போன்றவர்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஒரு வரலாற்றை எழுதுகிறபோது, அது சார்ந்த பலரின் புத்தகங்களை, இணையத்தை ஆய்வு செய்துவிட்டு, சுருக்கமாக அதேசமயம் ஆழமாக அவர்களைப் பற்றிய செய்திகளை தொகுப்பதில் நூலாசிரியர் மருதனின் லாகவம் பாராட்டக் கூடியது. சரித்திரம் என்றால் நீண்ட வரலாறு என சோர்வடைகிறவர்களுக்கு, நிச்சயமாக இந்த புத்தகம் சோர்வைத்தராது என்றே சொல்லலாம். எட்டு புரட்சியாளர்களைப் பற்றி குறைந்த பட்சம் 8 புத்தகங்களாவது படித்தால்தான் அறிய நேரிடும் என்பதற்கு மாறாக, எட்டு போராளிகளைப் பற்றிய செய்திகள் ஒரே புத்தகத்தில் அமைவது நிச்சயமாக சிறப்பான ஒன்றே.

– எஸ். சம்பத்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-163-4.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: