Home » History » பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள்

“பெத்தாதான் பிள்ளயா சூட்டிங்கு.. படத்துல இந்த M.R.ராதா பய சுடனும்ன்னு சீனு.. நெச துப்பாக்கியால சுட்டுப்புட்டு, துப்பாக்கி மாறிப்போச்சுன்னுட்டான்.. சனங்கெடந்து தவிச்சுப்போயிருச்சு.. நான் மெட்ராசுக்கே போயி பாத்துட்டுவந்தேன்..” இது திரு.இராமசாமியாகிய என் தாத்தா சொன்ன வரலாறு. என் பால்யத்தின் தாமோதர ஆசான் அவர்தான். ‘இருவர்’ படத்திலும் மணிரத்னமும் கிட்டத்தட்ட தாத்தாவை ஆமோதித்தே காட்சியமைத்திருந்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’வில் MGR பெயரும், ‘இருவர்’ல் மோஹன்லால் பெயரும் ‘ஆனந்தன்’ என்றிருக்கவே நான் இந்த கதையை எனக்காக ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன். பின்னாளில் இணையம் என் உபயோகத்திற்கு கிடைத்ததும் தேடி தெரிந்துக் கொண்டு தெளிந்த விஷயங்களில் இந்த கொலைவழக்கும் ஒன்று. இந்த வழக்கின் விவரங்களை அறியும் நம் ஆர்வத்தை சுரண்டி பார்க்கும் வகையில் இந்த வழக்கு இந்த புத்தகத்தின் கவர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறது. நல்லதுதான். ஏனெனில், ஏனைய வழக்குகள் எதுவுமே நாம் முன்னர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றை நாம் அறிய இந்த கவர்ச்சிதான் நம்மை உள்ளிழுக்கிறது.


பிரபல கொலை வழக்குகள், எஸ்பி சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், ரூ 150

ஆஷ் கொலை வழக்கை ஒரு வித சிலிர்ப்போடு படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கொலை நடக்குமிடத்தில் நமக்கு வாஞ்சிநாதனிடம் ஏற்படும் ஆர்வ உந்தல் வழக்கின் விவரங்களுக்குள் நுழைந்து பின்னணியை அலசுமிடத்தில் நமக்கு நாம் படிப்பது ஒரு கதையல்ல, ஒரு ஆவணம் என்ற உண்மை உறைக்குமிடத்தில் தேய்ந்துப்போகிறது. இதே உணர்வு மற்ற சில வழக்குகளிலும் நமக்கு தொடர்கிறது. அது புத்தகத்தின் குறையல்ல. நம் அணுகுமுறையின் குறை. குற்றவியல் நாவலைப் போன்ற விறுவிறுப்பான புத்தகம் என்ற விளம்பரம்கூட ஒரு விதத்தில் அதற்கு காரணம்.

சவாலான வழக்குகள் எனில் இரண்டுதான். (மற்றவை ஒரு கொலை வழக்கு, கொலையாளி யாரென்று தெரிந்தபின் மேலே எங்ஙனம் கொண்டு செல்லப்பட்டது என்று விவாதிக்கிறது)
1.மர்ம சன்னியாசி வழக்கு
2.பகூர் கொலைவழக்கு

இவை எக்கச்சக்கமான சட்டம், தடயவியல், மருத்துவம் சார்ந்த விளக்கங்களை உள்ளடக்கிய வழக்குகள். இவை நடைபெற்ற காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தாலே இவை பயங்கரமான கொலை/கொலைமுயற்சிகள்தான். அதையும் சேர்த்து யோசித்தால் அத்தனை மலைப்பு. இவை இரண்டை மட்டுமே தனி சிறு புத்தகமாக வெளியிடலாம். வழக்குகளின் வீரியம் அப்படி. ஆளவந்தான் கொலைவழக்கில் வழக்கில்தான் முதன்முதலில் தடவியல் துறை பெரிய அங்கீகாரத்தை அடைந்தது என்ற செய்தி முக்கியமானது.

புத்தகத்தின் பிரச்சினை என்னவெனில் நூலாசிரியரின் சில விவரனைகள்.

உ.தா.
ஆஷ் கொலைவழக்கில்,
‘பாரதியார் சிறந்த கவிஞர், பெண் விடுதலைக்கு போராடியவர், சீர்திருத்தவாதி’
நானாவதி கொலை வழக்கில், ‘நானாவதி பார்க்க மன்மதன் போல இருப்பார்’
என்பது போன்ற வரிகள். அதுமட்டுமன்றி, இவை இணையத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு எனும் பட்சத்தில், புத்தகமாக மாற்றமுனையும்போது அதற்கான சிரத்தைகளை மேற்கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது. குறிப்பாக Jury என்றால் என்னவென்று அவர்கள் பங்குபெறும் ஒவ்வொரு வழக்கிலும் விளக்கப்படுகிறது. இவையெல்லாம் புத்தகத்தின் அடுத்த பதிப்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய சிறு பிழைகள். அவ்வளவே.

என் அறிவிற்கெட்டிய ஒரு தகவல் பிழை என்னவெனில் (அறுவை சிகிச்சை துறை மருத்துவன் என்ற ரீதியில்) பக்கம் 161’ல் கடைசி பத்தி முழுவதுமே பிழை. Duct என்பது குழாய், gland என்பதுதான் சுரப்பி, pancreas என்பது கணையம், spleen என்பதுதான் மண்ணீரல். மண்ணீரலுக்கு அந்த பத்தியில் வேலையே இல்லை. இவை அனைத்தும் மொழிப்பெயர்ப்பு பிழைகள் என்று வைத்துக்கொண்டாலும், அடுத்த வரியில் biliary colic’ல் வயிற்றுவலியே இருக்காது என்று ஒரு போடு போடுகிறார். அப்பட்டமான பிழை அது. தோள்பட்டையில் வரும் வலி நரம்பு மண்டலத்தின் அனுசரிப்பினால் ஏற்படும் referred pain என்பதாகும். அப்பத்தியை அப்படியே மறு ஆக்கம் செய்வது நல்லது.

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையின் பல்வேறு காலங்கட்டங்களிலான பரிணாம மாற்றங்கள், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான வழக்கு விசாரனை வேறுபாடுகள், jury முறை தீர்ப்பு வழங்கல், உச்சநீதிமன்றம் இல்லாத நாட்களின் மேல்முறையீட்டு முறை, அனைத்திற்கும் மேலாக நாம் இதுவரை அறிந்திடாத பல முக்கிய கொலை வழக்குகள், அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமாக ‘பிரபல கொலை வழக்குகள்’க்கு நம் அலமாரியில் ஒரு சிறப்பிடமுண்டு. Discovery channel’ல் Medical Detectives தொடரை விரும்பி பார்ப்பவர்களுக்கு இதிலுள்ள சில கொலை வழக்குகள் அதற்கு ஈடான ஒரு அனுபவத்தைக் கொடுக்கலாம். ஆயினும், அதற்காகவே, இதில் நீங்கள் அகதா க்ரிஸ்டியையோ, கானன் தாய்ல்’யோ, சுஜாதாவையோ எதிர்பார்க்கக்கூடாது.

SP.சொக்கலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

– மயிலன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: