Home » Politics » குஜராத் இந்துத்துவம் மோடி

குஜராத் இந்துத்துவம் மோடி

கடந்த லோக்சபா தேர்தலின்போது பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரங்களில் மிக முக்கியமானதாக இருந்தது குஜராத் மாடல். அது என்ன குஜராத் மாடல்? மோடி அப்படி என்ன செய்தார் குஜராத்தில்? குஜராத்தில் இந்துத்துவா எவ்வாறு வளர்ந்தது, இந்துத்துவாவின் உண்மையான நோக்கம் என்ன? 2002 கலவரத்திற்கு பிறகு குஜராத்தில் முஸ்லீம்களின் நிலை என்ன? என எல்லாவற்றும் பதில் தருகிறது மருதனின் “குஜராத் – இந்துத்துவம் – மோடி”.


குஜராத் இந்துத்துவம்  மோடி, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 150

மோடியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு 2002 கலவரம். நிறைய பேருக்கு இது இந்து-முஸ்லீம் கலவரம் என்ற அளவிலேயே தெரிந்திருந்தாலும் பாதிப்பு என்னவோ முஸ்லீம்களுக்குதான். குறிப்பாக இந்த சம்பவத்திற்குப் பிறகு ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தால் வெறுக்கப்படும் நபராக மாறினார் நரேந்திர மோடி. ஆனாலும் அது குஜராத்தில் மோடியின் வெற்றியின் தடுக்க முடியவில்லை. காரணம் இந்துக்களின் பாதுகாவலாராய் மோடி கருதப்பட்டதுதான். இந்த எண்ணம் 2002 சம்பவத்திற்குப் பிறகு மட்டுமே நிகழ்ந்த மாற்றம் அல்ல, இதில் ஆர்எஸ்எஸ், வி.எச்.பி ஆகியவற்றின் பங்கும் முக்கியமானது.

முதலில் குஜராத்தில் இருக்கும் சாதி அமைப்புகளையும், ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கை முறையையும் என்னவென்று கூறும் மருதன், உயர்சாதி இந்துக்களின் அடையாளமாக இருந்த பா.ஜ.க, ஆர்எஸ்எஸ், வி.எச்.பி ஆகியவை எவ்வாறு எல்லா சாதிகளையும் சென்றடைய முடிந்தது என்பதையும் கூறுகிறார். அதே சமயம் இந்துத்துவம் என்றால் என்ன, குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா முழுக்க இந்துத்துவா எவ்வாறு வளர்ந்தது, இந்துத்துவாவின் நோக்கம் என்ன என்பவற்றையெல்லாம் தெளிவாகக் கூறி உள்ளார்.

குஜராத்தில் இந்துத்துவாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், இந்துக்களிடையே முஸ்லீம் வெறுப்பை விதைத்தது. அத்தோடு பா.ஜ.கவிற்கு முன்பு குஜராத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசின் ஊழலும் மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை என்னும் எண்ணத்தை விதைத்துள்ளது. இங்கே இந்துத்துவம் என்பது மட்டுமே இதற்கு ஒரு காரணமாக இருக்கவில்லை. 1995 தேர்தலுக்குப் பிறகு நடந்த கணக்கெடுப்பில் பா.ஜ.கவிற்கு வாக்களித்தமைக்கு காரணமாக ஊழல், விலைவாசியைக் கட்டுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் 16% பேர் வாக்களித்துள்ளனர், அதே சமயம் காரணம் எதுவுமில்லாமல்,  மற்றவர்கள் சொல்வதால் வாக்களித்ததாக 25% பேர் கூறி உள்ளனர். இதே காரணங்கள் இப்போது நடந்த பொதுத்தேர்தலிலும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

சரி, குஜராத் மாடல் என்பது என்ன? அதன் பயனாளிகள் யார்? இதற்கு முன்னர் குஜராத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியை தெளிவாக விளக்குகிறார் மருதன். உதாரணமாக குஜராத்தின் தனிநபர் வருமானம் அதிகம், ஆனால் அதே சமயம் பசியோடிருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். பசி அளவு குறித்த ஒரு கணக்கெடுப்பில் குஜராத்தில் பசியோடு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இதை மேலும் அதிகமாக்கும் வேலையைத்தான் மோடியின் அரசு அங்கே செய்துள்ளது. அதே சமயம் குஜராத்தில் அந்நிய நேரடி முதலீடும் கூட மகாராஷ்டிரா, புதுதில்லி, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கிறது. இதன் பலன்களும் பிற்படுத்தப்பட்டவர்களைச் சென்று சேரவில்லை.

அதேபோல குஜராத்தின் வளர்ச்சிக்கு உதாரணமாக காந்தி நகரை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும், இந்த வளர்ச்சி மிகக் கவனமாக தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே சென்றுள்ளதையும் மருதன் விளக்குகிறார். குறிப்பாக முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பெரும்பாலான வசதிகள் சென்றடையவே இல்லை. பெரும்பாலான கிராமங்களில் போதிய கழிப்பிட வசதி இல்லை, ஆரம்பக்கல்வி முடித்தவர்களில் பாதிக்கும் மேற்ப்பட்ட முஸ்லீம்களும், தலித்களும் அதை தொடர முடியவில்லை. சாலை வசதி, மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகள்கூட பெரும்பான்மையான மக்களுக்கு கிடைக்கவில்லை.

அதே சமயம் குஜராத் சில துறைகளில் எப்போதும் நல்ல முன்னேற்றத்தை கண்டு வந்துள்ளது. ஆனால் இது வெறுமனே மோடியின் ஆட்சியில் மட்டுமே நடந்த மாற்றம் அல்ல என்பதை மருதன் தெளிவாகக் கூறியுள்ளார். உதாரணமாக 1993ம் ஆண்டு உற்பத்தியில் 3ம் இடத்தில் இருந்த குஜராத், 2011-12ல் 2ம் இடத்தில் இருக்கிறது. தனி நபர் வருமானத்தில் 1992-93 ஐ போலவே 2011-12ம் ஆண்டிலும் 9ம் இடத்திலேயே இருக்கிறது. இடையில் சில சறுக்கல்களையும் சந்தித்துள்ளது.

உண்மையில் அதானி, டாடா, அம்பானி போன்ற பணம் கொழிக்கும் முதலாளிகளின் விருப்பமாக குஜராத் இருக்கிறது. அதே போல சில இடங்களில் மட்டுமே உருவாக்கப்பட்ட வளர்ச்சி ஒட்டுமொத்த குஜராத்தின் வளர்ச்சியாக காட்டப்பட்டுள்ளது எவ்வாறு என்பதையும் மருதன் தெளிவாக எழுதியுள்ளார்.

மோடியை விமர்சிப்பவர்கள் குஜராத்தை விமர்சிப்பவர்களாக சித்தரிக்கப்பட்டதையும், மோடி எப்படிப்பட்டவர், அதிகாரத்திற்கு வந்த பின் அவரது நடவடிக்கைகள் என்ன, தன்னை எதிர்ப்பவர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார், முக்கியமாக இந்துத்துவா குறித்தும், 2002 கலவரம் குறித்த அவரது கருத்துகள் என்ன என்பதையும் இந்த புத்தகம் மிகத்தெளிவாகப் புரியவைக்கிறது.

– பிரபு கிருஷ்ணா

ஆன்லைனில் வாங்க: குஜராத் இந்துத்துவம்  மோடி, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 150

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: