Home » History » இந்தியப் பிரிவினை

இந்தியப் பிரிவினை

ஆங்கிலத்தில் எவ்வளவோ இந்திய பிரிவினைப் பற்றி படித்திருந்தாலும் தமிழில் அதைப் படித்து ஆழமாகப் புரிந்துகொள்ளும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது. புத்தகத்தின் ஆரம்பத்தில் பிரிவினைக்கு முன் பின் என இந்திய வரைபடத்தைச் சேர்த்திருப்பதே ஆசிரியர் மிகக் கடுமையாக உழைத்திருப்பதற்கான அத்தாட்சி.

இன்றைய கால கட்டத்தில் உலகத் தமிழர்களை கம்பியூட்டரிலிருந்து நேரடியாகப் புத்தகத்தைப் படிக்க வைப்பது கடினம்தான் என்றாலும் சில நேரங்களில் இது போன்ற நமது சரித்திரத்தை அறிய சில புத்தகங்களைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது.


இந்தியப் பிரிவினை, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 140

அதிலும், இந்திய நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்த நாம் இந்தியப் பிரிவினையின் முழுமையான பாதகங்களால் பாதிக்கப்படவில்லை. ஆகையாலேயே நமக்கு அதில் அந்த அளவு ஈர்ப்பும் ஏற்படவில்லை எனலாம். ஆனால் உண்மையான பாதிப்புக்கு உள்ளான நமது இந்திய மக்களின் வலிகளை நம் மனக் கண்களுக்கு முன்னால் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதிலே அப்பாவிகளாக மாட்டிய பாகிஸ்தானியர்களும் அடங்குவர்.  வாய்ப்பு கிடைத்த போது அந்த வலியை நாமும் நேரில் அனுபவிப்பது போல தத்ரூபமாகச் சொல்லி நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறார்.

ஒரு மாபெரும் இடப்பெயர்வை நம் கண்முன் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு இடப்பெயர்வு இது என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்.

மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் நடந்து, அதாவது, அன்னை, தந்தை, சகோதர சகோதரிகள், சொந்த மகன், மகள், மனைவி, சொந்த பந்தங்கள் என்று கூட பார்க்காமல் தன் உயிர் காக்க எப்படி எல்லாம் ஓடியிருக்கிறார்கள் என்பது தெரிய வரும் போது நம் கண்களில் இரத்தக் கண்ணீர் வருகிறது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் இவ்வளவு பின் விளைவுகளா? இதை ஏன் அன்றைய தலைவர்கள் காந்தியைத் தவிர வேறு யாரும் யோசிக்கக் கூட இல்லை? இந்தக் கேள்வி நம் மனத்தில் இயல்பாகவே எழுகிறது.

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பல நாடுகளாகச் பிரிந்து கிடந்த இந்திய துணைக் கண்டத்தை பல இடர்ப்பாடுகளுக்கு நடுவே சாம பேத தண்டம் போன்ற பல உபாயங்களுடன் ஒன்று சேர்த்த படேல், எப்படி இந்த பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார்?

அதுவும் ஜின்னா ஏன் இந்தப் பிரிவினை விஷயத்தில் இவ்வளவு கடுமையாக இருந்தார் என்பதெற்கெல்லாம் இந்த புத்தகம் நல்ல விளக்கங்களை தருகிறது.

பல விதங்களில் தவறான முடிவான இந்திய பாகிஸ்தான் பிரிவினை, ஒரு பக்கத்தில் இந்தியத் தலைவர்களின் இடத்தில் நின்று பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின் இந்திய துணைக்கண்டத்தில் எந்த விதமான பிரச்னைக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், பாகிஸ்தான் தலைவர்கள்  இந்தப் பிரிவினை இந்தியாவுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டது போலவுமே தெரிகிறது.

இந்தப் பிரிவினையின் பலனைதான் நாம் இன்றும் காஷ்மீரில் பாகிஸ்தானியர்களின் வெறியாட்டமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கின்ற உண்மை நம் நெஞ்சை சுடுகிறது.

இந்திய சுதந்திர போராட்டம் ஒரு பக்கம் பெரும் போராட்டம் என்றால், இந்தப் பிரிவினை மாறாத ஒரு பெரும் களங்கத்தை இந்திய சரித்திரத்தில் ஏற்படுத்திவிட்டது என்பதை இந்த புத்தகம் தெளிவுபடுத்துகிறது.

ஆர் எஸ் எஸ் என்ற இயக்கத்தின் தோற்ற காரணமும் இதனால் அறியப்படுகிறது. ஒரு வகையில் பிரிவினைக்குக் காரணமான இந்தியத் தலைவர்களில் படேலும் ஒருவர் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள் என்கிறார் ஆசிரியர். இதனால் நமக்கு பல சந்தேகங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை.

அன்று படேலை இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக சொன்னவர்கள் இன்று அவருக்கு மாபெரும் சிலை எடுக்கிறார்கள் என்பது முரண்பாடாக தெரிகிறதே!

ஆர் எஸ் எஸ், ஜின்னாவையும், மௌன்ட் பேட்டனையும் கொலை செய்யும் முயற்சியில் தோற்றுப் போனார்களாம். காந்தியைக் கொலை செய்யும் முயற்சியிலும் தோற்றிருக்கலாமே என்று நம்மை ஆதங்கப் பட வைக்கிறது இங்கே இடம் பெற்ற சம்பவங்கள்.

ஆதாரங்களை ஆணித்தரமாக கொண்டு வர பல புத்தகங்கள் மூலம் முயற்சி செய்திருப்பது நன்றாகத் தெரிகிறது. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவையும் தலைவர்களையும் பற்றி சில செய்திகளை நமக்கு உபயோகமாக கொடுத்திருக்கிறார். நல்ல பாடப் புத்தகமாக அமைய எல்லாத் தகுதிகளும் வாய்ந்த புத்தகம்.

இந்த உண்மை நிகழ்வுகள் பெரும் பாலும் வட இந்தியாவிலேயே இடம் பெற்றுள்ளதால் காந்தி, நேரு, படேல், மௌண்ட் பேட்டன், ஜின்னா போன்ற பரிச்சியமான பெயர்களைத் தவிர மற்றவர்கள் பெயர்களை நினைவில் நிறுத்த முடியாதது ஆசிரியர் தவறல்ல.

இக்கால மாணவர்கள் ஏன் பெரியவர்களும்கூட படிக்கத்தக்க வெளியீடு.

– அசோக்ராஜ்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-038-2.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: