Home » Translation » தொழில் வல்லுநர்

தொழில் வல்லுநர்

அடிப்படையில் நான் ஒரு நிறுவனத்தில் மத்திய மேலாண்மை பொறுப்பில் இருப்பவன். எனது பணி சார்ந்து எனக்குக்கீழ் பணிபுரியும்  நண்பர்களுக்கு பலவித பயிற்சிகளை அடிக்கடி நான் நடத்தவேண்டியிருக்கும். அவர்களுக்கு தொழில்வல்லுநர் தன்மை குறித்து பலமுறை பாடங்கள் எடுத்திருக்கிறேன். இப்போது எதேச்சையாக இதே தலைப்பில் இந்த புத்தகத்தை கண்டவுடன் எனது பயிற்சிகளில் பயன்படுத்த உதவுமே என்ற எண்ணத்துடன் படிக்கஆரம்பித்தேன். ஆனால் அதையும் தாண்டி, என்னுடைய அடிப்படைக் குணம் மற்றும் திறன் குறித்த சுய ஆய்வை மறுபடியும் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த புத்தகம் பெரிய உத்வேகம் அளித்துள்ளது.


தொழில் வல்லுநர், சுப்ரதோ பாக்‌ஷி, தமிழில்: பி.வி.ராமசாமி, ரூ. 200

நான் தீவிர வாசகன் கிடையாது. ஒரு புத்தகத்தையே வாரக்கணக்கில், மாதக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பவன். ஆனால் கடந்த தீபாவளி விடுமுறைக்காக எனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு இரயிலில் திரும்பும்போது பொழுதை போக்க சாதாரணமாக படிக்க ஆரம்பித்த நான், முழுபுத்தகத்தையும் ஒரே வீச்சில் அந்த பயணத்தின் இறுதிக்குள் படித்துமுடித்திருந்தேன். மிகவும் சுவாரசியமான நடை.

போட்டி நிறைந்த இந்த உலகில் பொருளாதார தேவைகளை தாண்டி தமது இருப்பினை உறுதிசெய்வதற்காகவும், தான் சார்ந்திருக்கும் துறையில் மேன்மேலும் வளர்ந்து செல்லவும் அனைவருமே விரும்புகின்றனர். இன்றைய அறிவுசார் வாழ்க்கைச் சூழலில் எல்லாவித தொழில்களுமே தனித்துவ தொழில்வல்லுநர் தன்மையை கோருகின்றன. முன்பெல்லாம் தொழில்வல்லுநர் என்றால் நமக்கு மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர், கணக்காளர் என்று சில குறிப்பிட்ட தொழில்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் முறையான ஈடுபாடும் செயல்திறனும் இருந்தால் பொதுவான சமூகம் கீழ்நிலைத் தொழில்களாக கருதும் தெரு பெருக்குபவர், ப்ளாட்பாரத்தில் கடைகாரர், வீட்டுக்கு தினசரி செய்தித்தாள் போடுபவர் என அனைவருமே தொழில்வல்லுநர்கள்தான். இதைப்பற்றித் தான் இந்த புத்தகம் பேசுகிறது.

வெறும் தத்துவ வார்த்தைகளில் மட்டுமே பந்தல் போடாமல், வெற்று பிரசாரத்தில் தனது அட்வைஸ்களை மட்டுமே திணிக்காமல் இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.சுப்ரதோ பாக்ச்சி மிக எளிமையாக தனது வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும், தான் பார்த்த மனிதர்கள், படித்த புத்தகங்கள் வாயிலாகவும் இன்றைய உலகில் தொழில் வல்லுநர்களின் தேவை என்ன என்பதை ஒரு நண்பனைப் போல சொல்லிச்செல்கிறார். இந்த புத்தகத்தின் ஆகச்சிறந்த பலமே இது விஷயங்களை எடுத்துவைக்கும் முறை. நம் மீது அக்கறையுள்ள நண்பன் நாட்டுநடப்புகளை நம்மிடம் இயல்பாக பகிர்ந்துகொள்ளுவது போல இந்த புத்தகத்திலும் தொழில் வல்லுநர் என்பவரின் குணங்கள், தேவைப்படும் திறன்கள், மாறிவரும் உலக சந்தையில் தொழில்வல்லுநர் எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் என பல தளங்களில் அற்புதமான கருத்தை வழங்குகிறது.

மெத்தப்படித்து உலகுக்கே மேலாண்மை அறிவை வழங்கும் மேதைகளின் தொழில்திறனுக்கும் ஆசிரியர் குறிப்பிடும் படிப்பறிவில்லாத வெட்டியானின் தொழில்திறனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற கருத்து தொழில்வல்லுநர் குறித்து அகடமிக் உலகம் இதுவரை சொல்லிவரும் சிந்தனையில் இருந்து மாறுபட்டதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. அதே போல தொழில்வல்லுநர் என்பவரின் தகுதி அவரது திறமை சார்ந்து அளக்கப்படுவதை விட, அவரது பண்பு சார்ந்து அளக்கப்படுவதின் அவசியத்தை புத்தகத்தில் எல்லாப்பக்கங்களிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிவுசெய்கிறார்.

அறிவு சார்ந்து செயல்படுவதை விட, இதயம் சார்ந்து, மனப்பூர்வமாக செயல்படுவதின் மகத்துவத்தை, அதற்கான தேவையை பல அனுபவ குறிப்புகளின் மூலம் உணர்த்துவது சிறப்பாக இருந்தது. பணமே பிரதானமாகிவிட்ட இன்றைய கமர்ஷியல் உலகில், பணத்தைவிட அடிப்படை பண்புகளுக்கும் கொள்கைகளுக்கும் பெரிய மதிப்பிருக்கிறது என்பதை தமது பலவித வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக பகிர்ந்துகொள்ளும்போது நமக்குள் நம்பிக்கை பிறக்கிறது.

கல்லுரி மாணவர்கள், இளைய தொழில்வல்லுநர்கள் ஆகியோர் இந்த புத்தகத்தை கட்டாயம் படிக்கவேண்டும். இதன் மூலம் தம்மை தமது துறைக்கு தகுந்தவாறு தயார்படுத்திக்கொள்வதுடன், தான் மேற்கொள்ளும் பணியை இன்னும் சிறப்பாக, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மேற்கொள்ள தேவையான நடைமுறை ஆலோசனைகளை இந்த புத்தகம் நிச்சயம் வழங்கும். இந்த புத்தகத்தின் மூலம் தனிப்பட்ட அளவில் நான் புதியதாக கற்றுக்கொண்ட பல விஷயங்கள் எனக்குள் புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. அதே போல இதனை படிக்கும் ஒவ்வொறுவரும் எதாவது ஒருவகையில் தமது ஆளுகை குறித்த புரிதலை பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மிகமுக்கியமாக இது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் என்ற உணர்வே ஏற்படவில்லை. வெகு இயல்பாக புத்தகத்துக்குள், தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வது போல வெகு இயல்பாக அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க முடிகிறது.

– ஜானகிராமன்.நா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-153-5.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: