Home » Biography » நேரு – உள்ளும் புறமும்

நேரு – உள்ளும் புறமும்

இன்றைய தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியாளர்களால் அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருபவர் இந்தியா சுதந்தரமடைந்ததிலிருந்து 17 ஆண்டுகள் நாட்டை பரிபாலனம் செய்துவந்த ஜவஹர்லால் நேரு. அவர் குறித்து அவருடைய சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் நயன்தாரா சகல் எழுதிய ‘Jawaharlal Nehru: Civilizing a Savage World’ என்கிற புத்தகத்தின் தமிழாக்கம் தான் ஜெயநடராஜனின் `நேரு உள்ளும் புறமும்’. இது கிழக்குப் பதிப்பக வெளியீடு.


நேரு – உள்ளும் புறமும், கிழக்கு பதிப்பகம், நயந்தாரா சகல், ரூ 200

எவை நேருவுக்கு பெரும் அக்கறைக்குரிய விஷயமாக இருந்தனவோ, எவை உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளாக உருமாற்றம் பெற்றனவோ அவற்றைத்தான் ஆசிரியர் மையக்கருத்தாக இந்தப் புத்தகத்தை எழுத எடுத்துக் கொண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரினால் விளைந்த அச்சுறுத்தும் நிலவரத்தில் அவரது வெளிநாட்டுக் கொள்கை இரு வல்லரசுகளில் எதனுடனும் கூட்டு சேர்வதை நிராகரித்தது. இதனால் உருவானதுதான் அணிசேராக் கொள்கை.

சகோதரி விஜயலெட்சுமி பண்டிட் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா.விலும், தூதராக அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தபோது அவர் நேருவுக்கு எழுதிய கடிதங்களும் இப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தியாவின் அணிசேராக் கொள்கை, இரு வல்லரசுகளாலும் முழுக்க முழுக்கக் கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால் நேரு அது குறித்து கவலைப்படவில்லை. அந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு அமைதி என்பது முக்கிய தேவையாக இருந்தது. எனவே பனிப் போரில் இருந்து விலகி இருப்பதே சாலச் சிறந்தது என்கிற முடிவுக்கு நேருவின் தலைமையிலான அன்றைய ஆட்சியாளார்கள் முடிவுக்கு வந்தனர்.

நேரு கம்யூனிஸ்ட் என அறியப்பட்டிருந்தார். இருந்தாலும் காமன்வெல்த் அமைப்புடன் இந்தியாவுக்குள்ள தொடர்பைப் பற்றி சோவியத் கம்யூனிஸ்ட் நாளேடு ப்ராவ்தா, ‘ஏகாதிப்பத்திய ஏவல் நாய்’ என்று மனத்தைப் புண்படுத்தும் வகையில் குறிப்பிட்டிருந்தது. வல்லரசுகளாக இருந்த சோவியத் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நேரு விரும்பவில்லை.

ஹங்கேரியில் சோவியத்தின் ஊடுருவலையும், எகிப்துக்கு எதிரான ஆங்கிலேயே – பிரெஞ்சு ஆக்கிரமிப்பையும் இந்தியா கண்டனம் செய்தது ஆனாலும் அது பிரிட்டனுடனான இந்தியாவின் உறவைப் பாதிக்கவில்லை. இந்தியத் தூதர் என்கிற முறையில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை விஜயலட்சுமி முதல் தடவை சந்தித்தபோது அவர், ‘காமன்வெல்த் மாநாட்டில் நேருவை சந்தித்துப் பேசிய பிறகு `ஆசியா நம்முடன் இருக்கிறது’ என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், நேரு ஆசியாவின் ஜோதி என்றும், புத்தரைக் காட்டிலும் மகத்தான ஒளி’ என்றும் சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு அனைத்து நாடுகளையும் அனுசரித்துச் சென்றவராக நேரு இங்கு பல மேற்கோள்களின் மூலம் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

சோஷலிஸ்ட் என்று தன்னை வெளிப்படையாகக் கூறிக் கொண்டவர் நேரு. அவருடைய `கலப்புப் பொருளாதாரம்’ வெளிநாட்டு முதலீட்டுக்குக் கட்டுப்பாடுகள் அற்ற அனுமதி எதையும் வழங்கிவிடவில்லை. அவர் சுயமாக ஆலோசித்தார். சர்வதேசப் பிரச்சனைகளில் எது பொருத்தமானது என்று கருதினாரோ அந்தக் கொள்கையையே அவர் பின்பற்றினார்.

1953 ஆம் ஆண்டு ஸ்டாலின் இறந்த பிறகு சோவியத் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்திய – சோவியத் நட்புறவு வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்தது. பாசிசத்துக்கும், நாஜிசத்துக்கும் எதிரான அவரது நிலைப்பாடு அவரைப் பரந்த அளவில் அறிமுகப்படுத்தியிருந்தது. பிரபல எழுத்தாளார்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் மத்தியில் நேருவுக்கும் பெரும் மதிப்பு இருந்து வந்தது.

அணிசேராமை பற்றி நேரு மிகவும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார். இது ஒரு மூன்றாவது `சக்தி’ அல்லது `முகாம்’ என்ற நோக்கில் கருக்கொள்ளவில்லை. ஏனெனில் இரண்டிலுமே மறைமுகமான ராணுவ நோக்கம் அடங்கியிருக்கிறது என்றும்  மாறாக போரைத் தடுப்பதற்கு ஒரு கேடயம் போல செயல்படும் `மூன்றாவது அணி’யாக இது இருக்கும் எண்ணத்தில்தான் இது உருக்கொண்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி, எந்த ஒரு மதத்துக்கும் மேலான நிலை அளிக்க முடியாது என்றும், எந்த ஒரு மதத்தையும் சாராத அரசினால் தான் இந்தியாவின் மதங்களைச் சிறப்பாக  மதிக்க முடியும், சிறந்த முறையில் பாதுகாக்க முடியும் என்றும் நம்பியது. இதுவே நேருவின் நிலைப்பாடாகவும் இருந்து வந்தது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பிரதமராக இருந்த நேருவின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடதக்கது. இன்றைய ஆட்சியாளர்கள் அதைப் பூசி மெழுகப் பார்த்தாலும் சரித்திரத்தை அழிப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் வளர்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்த வழிகள் லாபகரமான பயன்களை அளித்தன. இரண்டு ஐந்தாண்டு திட்டங்கள் தேசிய வருமானத்தில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன என்பதை புள்ளி விவரங்கள் காணபித்தன.

இந்தியாவின் வளர்ச்சிக்கான `மாற்று ஆலய’ங்களான சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலைகளும், தாமோதர் பள்ளத்தாக்கும், சிந்திரி ரசாயான உரத் தொழிற்சாலையும், காரக்பூர் ஐ ஐ டியும் இவரது காலத்தில் எழுப்பப்பட்டவைதான். இது தவிர பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் முயற்சி மேற்கொண்டார்.

நமது அண்டை நாடுகளிடம் நேரு கொண்டிருந்த நட்புறவு பற்றியும் இப்புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கி்றது. இன்றைக்கு நேருவின் சிலைகளும் அவர் பெயரில் தெருக்களும், கட்டிடங்களும் எங்கும் வியாபித்திருக்கின்றன. ஆனால் அவர் இதை கொள்கை ரீதியில் கடுமையாக எதிர்த்தார். இது குறித்து அவர் ஜெனரல் சவுத்ரிக்கு எழுதிய கடிதமும் இப்புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டு்ள்ளது.

இப்போது மாநில முதல் மந்திரிகள் அனைத்து விஷயங்களுக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நேரு பிரதமராக இருந்த போது அவர் தொடர்ந்து மாநில முதல்வர்களுக்கு பல விஷயங்கள் குறித்து கடிதம் எழுதியிருக்கிறார். அது Letters for a Nation: From Jawaharlal Nehru to His Chief Ministers 1947-1963 என்கிற பெயரில் மாதவ் கோஸ்லா பதிப்பில் ஒரு புத்தகமாகவே வந்திருக்கிறது.

இது தவிர, இந்தப் புத்தகத்தில் நேரு – எட்வினா பற்றியும், சீன-இந்திய யுத்தம் பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.

நேருவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இப்புத்தகத்தை அவருக்குச் சாதகமாக இருக்கும்படி அதற்கான மேற்கோள்களின் அடிப்படையில் எழுதியிருந்தாலும்கூட அவர் குறித்து நாம் அறியாத பல விஷயங்கள் இப் புத்தகத்தில் பரவிக் கிடக்கின்றன. இதை எவ்வித நெருடலும் இல்லாமல் தமிழ் வாசகர்கள் படிப்பதற்கென்று மொழிபெயர்த்த ஜெயநடராஜனுக்கு பாராட்டுகள்!

பிகு: பின் அட்டையில் ஒரு சிறு தவறு – ‘நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளான நயன்தாரா சகல் தனது `தாத்தா’ குறித்து…’ என்றிருக்கிறது. இது தனது `மாமா’ என்றிருக்க வேண்டும்.

– சித்தார்த்தன் சுந்தரம்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-152-8.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: