Home » Novel » அரசூர் வம்சம்

அரசூர் வம்சம்

அரசூர் வம்சம். ஒரு வெகுஜன சரித்திரப் பின்னணியுள்ள புதினம்.

முதல் அத்தியாயத்திலேயே நம்மை ஏமாற்றி விடுகிறார் இரா.முருகன். கதாசிரியர் மீது கோபம் தான் வருகிறது. பின்ன..?

ஒரு ஊருல ஒரு ரா…ஜா இருந்தாரு என்று நம் பாட்டிகள் நீட்டி முழக்கி ஆரம்பிக்கும் போதே நம் சிந்தையெங்கும் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்த ராஜாவின் பிம்பம் பெரிதாக உடைத்தெறியப்படும்போது நிஜமாவே வலிக்கத்தான் செய்கிறது. அத்துடன் சற்றும் கால தாமதமின்றி எழுத்தாளர் மீதான நம்பிக்கையும், அவரது நேர்மையும் மகிழ்ச்சியுடன் அடுத்த அத்தியாயத்திற்குத் தாவச் செய்கிறது.

 


அரசூர் வம்சம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், ரூ 265

முதலிலேயே புரிய வைத்து விடுகிறார். இது பெரும் யானைப் படைகளுடன் சென்று, எதிரி மன்னர்களை துவம்சம் செய்த வீர தீர மன்னரைப் பற்றிய கதையல்ல. தன், தன் ராஜாங்கம், தன் சந்ததியின் அந்திம காலத்தின் முக்கால் பருவம் தாண்டிய, ஆனால், இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக (காமம் முதல் ராஜாங்க ஆசை வரை) நம்பி வாழ்ந்து கொண்டிருந்த, தன் ராணி (?!?!) குளிப்பதை தினமும் வேடிக்கைப் பார்க்கும் ஒரு இளைஞனைக் கூட தடுக்கத் துப்பில்லாத, ஒரு கையாலாகாத ராஜா (மறுபடியும்?!?!) வைப் பற்றியும், அந்தக் காலகட்டத்தில் தொழில் மாற்றங்களால் வளர்ந்து வரும் அரசூர்ப் பிரஜைகளைப் பற்றிய கதை.

பத்திக்குப் பத்தி, பத்திக்கிட்டு சிரிப்பு வந்தாலும் பொத்திக்கிட்டுதான் சிரிக்க முடியும். அத்தனையும் எதார்த்தமான கலவுச் சித்தரிப்புச் சிரிப்புகள். சோத்துக்கு அப்புறம்  “கூடல்” கூத்துதான் மனிதத் தேவை என்பதை அத்தனை அப்பட்டமாக, நடைமுறை வாழ்க்கையை பச்சை பச்சையாக எழுதி விவரித்திருந்தபோதும்கூட கொஞ்சமும் விரசம் இல்லை. இப்படி ஒளிவு மறைவில்லாமல் அதே நேரத்தில் விரசமில்லாமலும் சொல்ல துணிச்சலும், எழுத்தின் நேர்மையும், சமூகத்தின் மீதான அக்கறையும் சம அளவில் வேண்டும். அந்த வகையில் ஆசிரியருக்கு நன்றிகள்!

அந்திம காலத்து ராஜாவைத் தவிர்த்து,

# புகையிலை விற்றுப் பொருள் சேர்த்த வசதியான பிராமணக் குடும்பம்…

# சமையற் தொழிலைச் செய்து, லௌளீகச் சிக்கலைச் சமாளித்து வாழும் ஒரு  கேரளத்துத் தமிழ்ப் பிராமணக் கூட்டுக் குடும்பம்…

# மெத்தப் படித்துப் புத்தி பேதலித்து, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இறந்தவளோடு குடும்பம் நடத்தி வரும் ஓர் இளைஞனின் அன்றாட வாழ்க்கையும்…

# நவீன இயந்திரங்களைப் பற்றிய அறிவினைப் பெற்று அதை பணமிருக்கும் ஆட்களிடம் விற்றுப் பிழைக்கும் பனியன் சகோதரர்கள்… (சமூக மாற்றத்தின் ஒரு வகைக் கருவியாக அந்த காலகட்டத்தின் பிரதிநிதியாகச் சித்தரிப்பு)

# ஓடிப் போன கணவனைக் கிட்டத்தட்ட மறந்தே போய், இறந்தவர்களுடன் சகஜமாக உரையாடி வரும் ஒரு அசாதாரண நித்திய சுமங்கலி கிழவி…

# ஒரு ராஜாவுக்குச் சம்பந்தியாக இருக்கும் ஒரு விவசாய பின்புலம் கொண்ட குடும்பம்…

# ஆங்கிலேயர்களுடன் வியாபாரத் தொடர்புள்ள ஒரு இஸ்லாமியக் குடும்பம்

# புதிதாக தொழில் தொடங்க வட்டியின்றி பணம் கிடைப்பதலால் கிறிஸ்துவத்துக்கு மாறும் பிராமனர் என்று பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை மாற்றத்தைப் பொறுமையாக அந்தந்த வட்டார வழக்குகளில் விவரித்திருப்பது கதாசிரியரின் கடினமான உழைப்பு தெரிகிறது. (எனினும், பல வழக்குச் சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் யூகித்துணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.)
இத்தனை பாத்திரங்களுக்கிடையே, நிகழ்கால மாந்தர்களுக்கு யோசனை சொல்லி அவ்வப்போது பாத்திரங்களாவே உடன் வரும் இறந்து போன குடும்பத்தின் மூத்தவர்களும் தேவதைகளும் வேறு சகஜமான மனிதர்கள் போல வந்து போகிறார்கள். இவர்கள் எழுத்தில் மேலும் நகைச்சுவையைக் கூட்டவும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இந்த இறந்தவர்களின் பாத்திரத்தை சகித்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாதவர்கள், அவர்களை, பாத்திரங்களின் மனசாட்சியாக எடுத்துக் கொண்டு ரசிக்கலாம்.

கிறிஸ்துவத்துக்கு மாறிய பிராமனர் ஒருவருக்கு ஒரு நேர உணவு கொடுக்கக் கூட விரும்பாமல் எட்டி உதைத்த அதே பாத்திரம், பின்னாளில் தன் சுய இலாபத்திற்காக அதே ஆளிடம் கடன் கிடைக்கிறது என்பதற்காக மதம் மாறும் பிராமணரின் பாத்திரப்படைப்பின் மூலம், மனிதன், மதம், சமூக ஒழுக்கத்தைவிட தன் வளர்ச்சிக்குத் தேவையானால் எளிதில் தன்னை மாற்றிக் கொள்ள சிறிதும் தயங்குவதில்லை என்றும், மனிதத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் கொடுத்து வந்த மதிப்பின் முக்கியத்துவம் பணத்தைப் பிரதானப்படுத்தி வாழத் திரும்பிய காலகட்டத்தைப் புரிந்து கொள்ளவும், ஒரு அழகான புதினம்.

துப்பறியும் நாவல் போல படிக்காமல், சில வீடுகள், சில ஊர்களில், ஏன் சில மனிதர்களுக்குள்ளேயும் தங்கி வாழ்ந்து விட்டு வர விரும்பி வாசிக்கலாம்.

பின் குறிப்பு : புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து, மதிப்புரை எழுதிக் கொடுக்கச் செய்யும் உத்தி அருமை. கரும்பு தின்னக் கூலி கொடுக்கும் மதிப்புரை குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

– ஆனந்தன் அமிர்தன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8368-008-0.html

போன் மூலம் வாங்க: டயல் பார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: