Home » History » இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாறு பெரும்பாலும் காந்தியைச் சார்ந்தே எழுதப்படுகிறது. அவர் இங்கே வருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே இங்கே விடுதலைக்கான இயக்கம் வலுப்பெற்றிருந்தது என்கிற செய்தியைத் தனியே சொன்னால்தான் பலருக்குத் தெரியும்.

இன்னொருபக்கம், சுதந்தரப் போராட்ட முன்னோடிகளைப்பற்றிக் கதையா, நிஜமா என்று தெரியாத அளவுக்குப் பல வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. வீர பாண்டிய கட்டபொம்மனின் சினிமா வசனத்தில் எத்தனை சதவிகிதம் நிஜம், எத்தனை சதவிகிதம் கற்பனை என்பதை அந்தப் படத்தின் இயக்குநரும் சொல்லவில்லை, மக்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படவில்லை. பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ், ஜான்ஸி ராணி லட்சுமிபாய் என்று சுதந்தரப் போராளிகள் பலரைப்பற்றிய பிரபலமான ‘மக்கள் சரித்திர’ங்கள், பல கலை வடிவங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் நிஜம், பொய் கலந்த கதைகள் இங்கே அதிகம். அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன், மருது சகோதரர்கள்போல் வெகுஜன மக்களைச் சென்றடையாமல் ஒரு வட்டத்திலட்டும் போற்றப்படுகிறவர்களும் அதிகம்.

978-93-5135-177-1_bஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், ப.சரவணன், கிழக்கு பதிப்பகம், ரூ 150

இவர்களில் யாருடைய பங்களிப்பையும் நாம் குறைத்து மதிப்பிட இயலாது. அது நம் நோக்கமும் இல்லை. எல்லாரும் அவரவர் வழியில் சுதந்தரத்துக்காகப் பங்களித்திருக்கிறார்கள். ஆனால், சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைப் பதிவு செய்வதற்குள் இத்தனை ஏற்றத் தாழ்வுகள், மாற்றங்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

அந்தவிதத்தில், முனைவர் ப. சரவணன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள் நூல் ஒரு முக்கியமான பதிவு. நூற்றுக்கணக்கான சுதந்தரப் போராட்ட வீரர்கள் உள்ள சூழ்நிலையில், அவர்கள் பன்னிருவரைமட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுடைய வாழ்க்கையை அழகாக விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

குறிப்பிடவேண்டிய விஷயம், இவர்களில் பெரும்பாலானோர் தென்னகத்துப் போராளிகள். ஜான்சிராணி, பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் என ஓரிருவர்தான் வெளி மாநிலங்களிலிருந்து வருகிறார்கள்.

அதேபோல், காந்தி, நேரு எனப் பலமுறை பதிவான ஆளுமைகளை விட்டுவிட்டு, முடிந்தவரை அதிகம் பிரபலமாகாத, ஆனால் பேசப்படவேண்டிய வீரர்களைத் தேர்வு செய்து எழுதியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் சுமார் பத்து பக்கங்கள்தான். அதற்குள் ஒரு முழு வாழ்க்கையை, இந்தியச் சுதந்தரப் போராட்டத்தில் அவர்கள் செய்த பங்களிப்பை விவரிக்கவேண்டிய சவால். அதனைச் சிறப்பாகவே நிறைவுசெய்திருக்கிறார்.

நூலின் தொடக்கத்தில் இந்தியச் சுதந்தரப் போருக்கான சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை நான்கு பக்கங்களில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். அப்போதைய இந்தியாவின் நிலையைத் தெளிவாக விவரித்துவிட்டதால், அடுத்து வரும் வீரர்களின் பங்களிப்பை நம்மால் புரிந்துகொள்ள இயலுகிறது.

இன்னோர் அத்தியாயம் சுதந்தரப் போராட்டம் என்பது ஏதோ ஓர் இடத்தில் நிகழ்ந்தது அல்ல என்பதை நிரூபிக்கிறது. வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்த போராளிகள், அவர்கள் நிகழ்த்திய புரட்சிகள் (பல புரட்சிகளின் பெயர்களை நாம் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம், அவையெல்லாம் விரிவாகப் பதிவு செய்யப்படவேண்டிய அவசியம் இருக்கிறது) போன்றவற்றை விவரித்து, ‘இது படிப்படியாக நிகழ்ந்த மாற்றம்’ என்று நிறுவுகிறார் ஆசிரியர்.

அதன்பிறகு, அவர் எடுத்துக்கொண்டுள்ள சுதந்தரப் போராட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்த பகுதி, அதன் சூழல், அங்கே சுதந்தரப் போராட்டம் அதற்குமுன் என்ன நிலையில் இருந்தது, இவர்கள் அதில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கினார்கள், அதனை ஆங்கிலேயர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பவை தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மிகச் சுவாரஸ்யமான பல விவரங்கள். உதாரணமாக, நெற்கட்டுஞ் செவ்வல் என்பது ஓர் ஊரின் பெயர். அது உண்மையில் ‘நெற்கட்டான் செவ்வல்’ என்று இருந்ததாகச் சொல்லி, அதற்குக் காரணமும் சொல்கிறார்கள், ஓர் ஆங்கிலேய அதிகாரி வரி கேட்க, ‘ஒரு நெல்மணிகூட தரமாட்டேன்’ என்று அந்த ஊர் மன்னர் சொல்ல, அது ‘நெல் கட்டான் செவ்வல்’ என்று மாறியதாம். பின்னர் அது ஆங்கிலேயர்களுக்குப் பயந்து ‘நெல் கட்டும் செவ்வல்’ என்று மாற்றப்பட்டதாம்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு, அடுத்த வரியில், இது தவறான கருத்து, 1748லேயே அந்த ஊரின் பெயர் ‘நெல் கட்டும் செவ்வல்’ என்றுதான் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

இப்படிப் பல கதைகள், நம்பிக்கைகள், ஊகங்கள், அவற்றை உடைப்பது என்று தொடர்கிறது நூல். சிரமப்படாமல் எளிதில் படிக்கும்வகையான எழுத்து.

ஒரே குறை, நூல்முழுக்க பாடப் புத்தக வாடை அடிக்கிறது. சரித்திரத்தை இன்னும் சுவையாகச் சொல்லியிருக்கலாம். அதேபோல், நூற்றுக்கணக்கான சுதந்தரப் போராட்ட வீரர்களில் இந்தப் பன்னிரண்டு பேர்மட்டும் ஏன் விசேஷமாகத் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை விளக்கியிருக்கலாம். படங்கள் அல்லது வரைபடங்கள் (அன்றைய இந்தியா) சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!

(இந்தியச் சுதந்தரப் போராட்ட வீரர்கள்: முனைவர் ப. சரவணன்: கிழக்கு பதிப்பகம்: ரூ 150)

என். சொக்கன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-177-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: