Home » History » இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு

இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு

“சரித்திரம் என்றால் தேதிகள் என்று என் சிறு வயது ஆசிரியர் என்னை நினைக்கவைத்தார்.
அலெக்சாந்தரில் இருந்து ஆதித்த சோழன் வரைக்கும் தேதிகளை நான் மனனம் செய்ய வேண்டும்.
ஒரு பாடத்தை எவ்வளவுக்கு வெறுக்கமுடியுமோ அவ்வளவுக்கு சரித்திரப் பாடத்தை வெறுத்தேன்.
வரலாறுதான் மனிதகளின் கதை என்பதையும், மனிதர்களின் கதைதான் இலக்கியம் என்பதையும்
அந்த ஆசிரியர் எனக்குச் சொல்லிதர மறந்து விட்டார்.”

-அ.முத்துலிங்கம்

“அப்பாடா இனிமே வரலாறு பக்கமே போக தேவையில்லை”, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் எனக்கு மனத்தில் தோன்றியது இதுதான். அந்த அளவிற்கு வரலாற்றுடன் எனக்குத் தகராறு. சமீபகாலமாக வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. அதுவே என்னை வரலாற்றின் பக்கம் இழுத்தும் சென்றது. ஒரு புத்தகத்துடனான உறவு அத்துடம் முடிவதேயில்லை. ஒரு புத்தகம் மற்றொரு புத்தகத்தை அறிமுகம் செய்து கொண்டேயிருக்கிறது. வெட்டுப்புலி நாவல் பெரியார் பற்றின நிகழ்வுகளை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது. அதை தேடும்போது பகத் சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” அறிமுகமானது. பகத் சிங்கை தேடும் போது காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை தூக்கிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் என்ற செய்தி சுதந்திர போராட்டம் பற்றின நிகழ்வுகளை முழுதும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், சில புத்தகங்களை நாம் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியமேயில்லை, அதுவே நம்மைத் தேடி பிடித்து ஓடிவரும். அப்படி மதிப்புரை தளத்தின் மூலம் என் வாசல் தேடி வந்த புத்தகம் தான் மருதனின் “இந்தியப் பிரிவினை”.


இந்தியப் பிரிவினை, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 140

பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன எவ்வாறு பிரிக்கப்பட்டது மற்றும் பிரிவினையில் ஜின்னா, நேரு, மவுண்ட் பேட்டன் போன்ற தலைவர்களின் நிலை என மூன்று தளங்களில் இந்த புத்தகம் பயணிக்கிறது.

அமிர்தசரஸ் ரயில் நிலையம் : 1947 ல் அமிர்தசரஸிற்கு வந்து சேரும் ரயிலில் துவங்குகிறது இந்தப் புத்தகம். தனது உறவினர்களுக்காக காத்துக்கிடக்கும் மக்களின் நிலையினை நினைத்து காந்தியிடமும் ஜின்னாவிடமும் நேருவிடமும் கற்பனையில் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த ஸ்டேசன் மாஸ்டருக்கு வந்து சேர்ந்த ரயிலின் அமைதி நிலைக்கொள்ளச் செய்கிறது. ஏனென்றால் அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தது வெறும் பிணங்களை மட்டும்தான். சிறுகதை போல் இருக்கும் அந்தக் கட்டுரையின் தலைப்பே “கல்லறை” தான். இரு தரப்பிலும் எண்ணற்ற இழப்புகள். காரணம் மதம், மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை. “ஒரு மதத்தை இழிவுபடுத்த வேண்டுமென்றால் அந்த மதத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தினால் போதும்” என்ற வரியை படிக்கும் போது நம் மனதிற்குள் எழும் கேள்விகளுக்கு பதில் எங்கு தேடியும் கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

Mad House: இதுதான் இந்தியப் பிரிவினையின் பொறுப்பை மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கும்போது சொல்லப்பட்ட வார்த்தைகள். அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் துவங்கிய புத்தகம் மெல்ல மெல்ல பிரிவினையின் ஆரம்பப் புள்ளிக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. காங்கிரஸ் எவ்வாறு எதற்காகத் துவங்கப்பட்டது, எந்த சூழ்நிலையில் எப்பொழுது யாரால் பாகிஸ்தான் எனும் தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டது, ஜின்னா ஏன் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தார் என நகர்கிறது. ஒரு கட்டத்தில் காந்தி “ஏன் இரண்டாக பிரிக்க வேண்டும், முஸ்லீன் லீகிடமே இந்தியாவை ஒப்படைத்துவிடலாம்” என்றாராம். காந்திக்கு பிரிப்பதில் கடைசிவரை விருப்பம் இருந்ததேயில்லை. பிரிவு என்ற முடிவு வந்ததும் இங்கு கலவரங்கள் வெடிக்கும் என்ற பயம் அவருக்கு மட்டுமே இருந்தது. ஏனோ ஜின்னாவிற்கும் நேருவிற்கும் அப்படி தோன்றவில்லை. இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்க இந்த இருநிலங்களையும், கலாசாரத்தையும் அறியாத ஒருவரே நியமிக்கப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட கெடு ஆகஸ்ட் 15. இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் தனது வேலை சுலபமானது அல்ல என்பதை உணர்ந்து மவுண்ட்பேட்டனிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. நேருவிடமும் ஜின்னாவிடமும் பேச முடிவு செய்தார். இருவரிடமும் அவர் கேட்ட கேள்வி : “இது உங்கள் தேசம், உங்கள் மக்கள். உங்களுக்கு தேதி முக்கியமா அல்லது தவறுகள் இல்லாத பிரிவினையா?” அதற்கு இருவரிடமிருந்தும் கிடைத்த பதில் “தேதி”. பிரிவினை என்பது வெறும் நிலத்தோடு முடியவில்லை. சொத்துக்களும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சொத்துக்கள் என்றால் கசானாவிலுள்ள துட்டு முதல் அரசு அலுவலகத்திலுள்ள பேனா, மேசை, உடைந்த நாற்காலி, டாய்லட் கப் வரை. தனித்தனியாக அனைத்தின் பட்டியலும் உருவாக்கப் பட்டிருக்கிறது. நூலக புத்தகங்கள் கூட பாகம் 1 இங்கே பாகம் 2 அங்கே என பிரிக்கப்பட்டதாம். இதைப் படிக்கும் போது சிறுவயதில் நண்பருடனோ, சகோதரரிடமோ போட்ட சண்டை தான் நினைவிற்கு வந்தது. ஆனால் உண்மையில் வேறு வழியில்லாமல் இப்படி நடந்தது என்பதை புரிந்துகொண்டாலும், இந்த மாதிரி விஷயங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானது என்றே தோன்றுகிறது.

1947 ஆகஸ்ட் 15, இந்த நாள் எப்படி தீர்மானிக்கப்பட்டது? நமக்கு ஏன் இரவில் சுதந்திரம் கிடைத்தது? சுதந்திரத்தின் போது பூனேவில் சுவஸ்திக் சின்னம் உள்ள‌ கொடி ஒன்று ஏற்றப்பட்டது எதனால்? முஸ்லீம் லீக் போல இந்துக்களுக்கு ஒரு அமைப்பு ஏற்பட்டு அதுவே பின்னாளில் பிரிந்து கடைசியில் காந்தியைக் கொல்ல கோட்சே வந்தது என தகவல்களின் தொகுப்பாக நகர்கிறது. “என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேன்டும்” என காந்தி சொன்னார். ஆனால் ஜின்னாவோ குடும்பத்திலுள்ள சகோதரர்களின் பாகப் பிரிவு போல தான் இந்தப் பிரிவு என நினைத்திருக்கிறார். நேருவோ ஒரு படி மேல போய் பிரிந்தபிறகு இணையவும் வாய்ப்புள்ளதாக நினைத்திருக்கிறார். காந்தியைத் தவிர ஜின்னாவும் நேருவும் கலவரங்களை சிரிதும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். கலவரங்கள் எல்லை மீறிப் போகும் போது சுதந்திரமே தேவையில்லை என்ற மனநிலையில் நேரு இருந்தாராம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் போர் பாகிஸ்தானால்தான். அந்தப் போரில் இந்தியா வெற்றி அடைகிறது. அந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டிய மீதி பணத்தை பற்றி யோசிக்க, காந்தி மட்டும் அதை கொடுக்க வேண்டும் என சொல்கிறார். இந்த மனப்பான்மை காந்தியைத் தவிர வேறு எவருக்கும் வராது எனத் தோன்றுகிறது. ஆனால் இது சரியானதா என்பது வாதத்திற்கு உரியதே. இந்தியாவில் சில சமஸ்தானங்களும் இருந்திருக்கிறது. அவைகளை இந்தியாவுடன் இணைக்கவும் ஏகப்பட்ட நடவடிக்கைகள் நடந்து இருக்கிறது. படேல் தான் அதை முன்நின்று நடத்தி இருக்கிறார். ஆர். எஸ். எஸ் வளர்ச்சி, கோத்ரா ரயில் சம்பவம், பாபர் மசூதி இடிப்பு, ஜின்னாவிற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைபாடு என அனைத்தைப் பற்றின அறிமுகத்துடன் முடிகிறது இந்தப் புத்தகம்.

சுதந்திரம் அடைந்து விட்டோம், காந்தி, ஜின்னா, நேரு அனைவரின் காலம் முடிந்து விட்டது. ஆனால் மத வெறியால் துவங்கிய கலவரத்தின் காலம் மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை.

வாசிக்கும் போது எனக்கு சில இடங்களில் காலங்கள் பற்றிய குழப்பங்கள் ஏற்பட்டது. காலங்களின் வரிசையில் சம்பவங்கள் அடுக்கப்படாமல் இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். சுதந்திரப் போராட்டம் பற்றிய நிகழ்வுகள் பள்ளிப் பாடங்கள் மூலமாகவும் சில‌ திரைப்படங்களின் மூலமாகவும் மட்டுமே நம்மிடம் பதிந்திருக்கிறது. நம்மை சுற்றி தகவல்கள் நிறைந்திருக்கிறது, அதைத் தேடும் ஆர்வம் மட்டும் தான் இங்கு குறைவாக இருக்கிறது, அப்படி ஆர்வம் ஏற்படும் போது அதைத் தூண்டிக்கொண்டே இருத்தல் வேண்டும் பசியைத் தூண்டும் starters போல. அப்படி எனக்கு அமைந்த starters தான் இந்தப் புத்தகம்.

– ஆர். பிரபு

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-038-2.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: