Home » Biography » செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

பரந்துவிரிந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்தவன் செங்கிஸ்கான். அந்த செங்கிஸ்கானையும் அவர் உருவாக்கிய மங்கோலிய சாம்ராஜ்யம் பற்றியும் தெரிந்துக்கொள்ள உதவுகிறது முகில் எழுதிய, கிழக்கு வெளியீடான, ‘செங்கிஸ்கான்’. செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூல்.

மார்ச் 2003ல் American Journal of Human Genetics நடத்திய ஆய்வின் படி ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கான் பரம்பரையைச் சார்ந்தவர்கள். கற்பனை செய்துபார்த்தால் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவல் புத்தகத்தின் துவக்கத்திலேயே நமக்கு கொடுக்கப்படுகிறது. அந்த தகவல் ஒரு appetizer. அதற்கு அப்புறம் இருக்கிறது தலை வாழையிலை விருந்து.

செங்கிஸ்கான், முகில், கிழக்கு பதிப்பகம், ரூ 185

கிழக்கு பதிப்பகத்தின் செங்கிஸ்கானை படிக்கும்போது ஒரு அட்டகாசமான த்ரில்லர் சினிமாவை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. போர்ஜிகின் இனக்குழுவின் தலைவரான யெசுகெய், மெர்கிட் இனக்குழுவைச் சேர்ந்த புது மணப்பெண் ஹோலுனை கடத்தும் காட்சியுடன் துவங்குகிறது. யெசுகெய் – ஹோலுன் தம்பதிகளுக்கு பிறந்த மூத்த மகன் தான் நமது கதாநாயகன் செங்கிஸ்கான். (இயற்பெயர்: டெமுஜின்). டெமுஜின் என்றால் இரும்பு மனிதன் என்று அர்த்தம்.

அடுத்த அத்தியாயத்தில் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிச் சென்று, மங்கோலிய இனக்குழுக்கள் (குறிப்பாக போர்ஜிகின், டட்டார்), அவர்களுடைய வாழ்க்கைமுறை, ஆட்சிமுறை, போர் பயிற்சி முறைகள், வேட்டை பண்பாடு, உணவுப்பழக்கம், திருமண வயது போன்றவற்றை விளக்குகிறது. அவற்றில் சில ஆச்சரியப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, மங்கோலியர்களின் வீடுகள். கற்களால் ஆன வீடுகளை அவர்கள் கட்டிக்கொள்வதில்லை. கெர் என்றழைக்கப்படும் வட்ட வடிவிலான (மேற்கூரை மட்டும் கூம்பு வடிவில்) கூடாரங்களில் (சர்க்கஸ் கூடாரத்தின் தோற்றத்தை நினைவு கூரவும்) தான் வாழ்ந்து வந்தார்கள். இடம் பெயரும்போது கூடாரங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வார்களாம். இன்னொன்று, மங்கோலியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலின பேதமின்றி நான்கு வயதிலிருந்தே குதிரையேற பழக்கிவிடுவார்களாம். அப்புறம், வில் வித்தை, மீன் பிடித்தல் etc etc. ஏழெட்டு வயதிற்குள் ஒரு சிறுவனுக்குரிய மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்துவிடுவார்கள். இருவரும் பருவ வயதை எட்டியபின் திருமணம்.

செங்கிஸ்கானும் தன்னுடைய ஒன்பதாவது வயதில் தனக்கான துணையை தேர்ந்தெடுக்கிறார். அதுவும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். தன்னைவிட ஒரு வயது மூத்த பெண்ணை. அவள்தான் போர்ட்டே! செங்கிஸ்கானின் முதல் மனைவி. எனினும் தந்தையாரின் திடீர் இறப்பின் காரணமாக செங்கிஸ்கான் போர்ட்டேயை (தற்காலிகமாக) பிரிய நேரிடுகிறது. அதுவரை அவருடைய தந்தையை அண்டியிருந்த டாய்சூட் இனக்குழுவினரால் அவருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. வாழ்வின் மோசமான சூழ்நிலைகளை சந்திக்கிறார். அடிமைப்படுகிறார். சாவின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஜமுக்கா என்பவரின் நட்பு கிடைக்கிறது (பிற்காலத்தில் அவரே பிரதான எதிரியாகிறார்!) ஜமுக்காவிற்கு ஒரு லட்சியம் இருக்கிறது. சிதறிக்கிடக்கும் மங்கோலிய இனக்குழுக்களை இணைத்து ஒன்றுபட்ட மங்கோலிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே அது. அதனை அவர் செங்கிஸ்கானிடம் வெளிப்படுத்த அவருக்குள்ளும் அந்த லட்சியம் உருவெடுக்கிறது – ஒருங்கிணைந்த மங்கோலியா!

பின்னாளில் தனது பதினாறாவது வயதில் போர்ட்டேயை திருமணம் செய்துகொள்கிறார் செங்கிஸ்கான். ஆனால் மெர்கிட் இனக்குழுவினர் போர்ட்டேயை கடத்திவிடுகிறார்கள். செங்கிஸ்கானின் தந்தையான யெசுகெய் மெர்கிட் இன ஹோலுனை கடத்தியதற்கான பழி வாங்கல் படலம் அது. மனைவியை மீட்பதற்காக தனது முதல் போரில் இறங்குகிறார் செங்கிஸ்கான். போரில் வெற்றி. ஆனால் மீட்கப்போன போர்ட்டே கர்ப்பமாக இருக்கிறார். சில காலத்தில் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுக்கிறார். அந்தக் குழந்தை தன்னுடையது அல்ல என்று சங்கடமாக உணரும் செங்கிஸ்கான் பின்னாளில் அதனை ஏற்றுக்கொள்கிறார். குழந்தைக்கு அவர் சூட்டிய பெயர் ஜோச்சி. மங்கோலிய மொழியில் விருந்தினர் என்று பொருள்.

அதன்பிறகு செங்கிஸ்கான், ஜமுக்கா, ஆங் கான், டயாங் கான் என தன்னுடைய எதிரிகளை ஒவ்வொருவராக அழித்து அவர்களுடைய குழுக்களையும் தம்முடன் இணைந்துக்கொள்கிறார். தன்னுடைய மேலாண்மை அணுகுமுறையாலும் போர் தந்திரங்களாலும் ஒருங்கிணைந்த மங்கோலிய கனவை எது வரைக்கும் சாத்தியமாக்கினார் என்று பிற்பகுதி அத்தியாயங்கள் விளிக்கின்றன. பிற குழுக்களை போரில் வெற்றி பெறும்போது அக்குழு மக்களை உரிய மரியாதையோடு நடத்திய அவருடைய பண்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது. இனக்குழுக்களுள் கலப்பு திருமணங்களை ஏற்படுத்தினார். தானும் பிற இனப்பெண்களை திருமணம் செய்துகொண்டார். (செங்கிஸ்கானுக்கு நான்கிற்கு மேற்பட்ட மனைவிகள்). மக்களை வெள்ளை – கருப்பு இன பாகுபாடின்றி நடத்தியது, பரிபூரண மத சுதந்திரம் கொடுத்தது போன்ற புதிய சட்டங்களின் மூலம் மக்கள் மனதில் ஒரு நல்ல தலைவராக உருவெடுத்தார் செங்கிஸ்கான்.

1223ம் ஆண்டு வாக்கில் மங்கோலிய பேரரசு ஐரோப்பியாவில் தொடங்கி தெற்காசியா வரை பரந்து விரிந்திருந்தது. அது அலெக்ஸாண்டரின் பேரரசை விட நான்கு மடங்கு பெரியதாகவும், ரோமப் பேரரசை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் இருந்தது. தனக்கு பிறகு தன்னுடைய ஆட்சிப்பகுதியை மகன்களுக்கு பிரித்து கொடுக்க நினைக்கிறார் செங்கிஸ்கான். மகன்களுக்குள் தகராறு. பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு மகன்கள் சமாதானமாகி மங்கோலிய பேரரசு நான்காக பிரிகிறது. சில வருடங்களில் செங்கிஸ்கான் இறக்கிறார். அவருடைய இறப்பு குறித்த துல்லியமான தகவல்கள் கிடையாது.

முகில் எழுதியிருக்கும் செங்கிஸ்கான் புத்தகத்தினை biography என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் fiction என்பேன். முகில் மட்டுமல்ல கிழக்கில் வரலாறு எழுதும் எல்லோரையும் ஜூ.வி கழுகாரோடு ஒப்பிடலாம். கிடைத்த தரவுகளை வைத்துக்கொண்டு சம்பவங்களை புனைந்து நமக்கு அழகிய வடிவில் கொடுத்துவிடுகிறார்கள். செங்கிஸ்கான் அன்றைய தினம் நீல நிற அங்கி உடுத்தியிருந்தார்; இரவு உணவாக பரோட்டா – சால்னா சாப்பிட்டார் என்கிற ரீதியில் நடந்தவற்றை நேரில் பார்த்தது போலவே எழுதுவது கிழக்கின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களின் மிகப்பெரிய பலம் (சில சமயம் பலவீனமும் கூட). முகிலின் வரிகளில், வெறுமனே ஆவணக்கட்டுரை போல அல்லாமல் படிக்கும்போது எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அதே சமயம் தகவல் திரட்டாகவும் அமைந்திருக்கிறது செங்கிஸ்கான்.

என்.பி. பிரபாகரன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8368-865-9.html

போன் மூலம் வாங்க: 94459 01234


1 Comment

 1. முகில் says:

  விரிவான விமரிசனம் எழுதியிருக்கும் என்.பி. பிரபாகரன் என்ற நண்பருக்கு என் அன்பும் நன்றியும்.

  ///செங்கிஸ்கான் அன்றைய தினம் நீல நிற அங்கி உடுத்தியிருந்தார்; இரவு உணவாக பரோட்டா – சால்னா சாப்பிட்டார் என்கிற ரீதியில் நடந்தவற்றை நேரில் பார்த்தது போலவே எழுதுவது கிழக்கின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களின் மிகப்பெரிய பலம் (சில சமயம் பலவீனமும் கூட)….///

  இப்படி விமரிசனத்தில் ஒரு வரி வருகிறது. இது குறித்த சிறு விளக்கத்தை வாசகர்கள் மத்தியில் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் எழுதும் வரலாற்றுப் புத்தகங்களில் எந்த ஒரு சம்பவத்தையும் ஆதாரங்கள் இன்றி எழுதுவது கிடையாது. ஆனால், நாடக உத்தி சுவாரசியம் கொடுக்கும், எளிமையாக விளங்க வைக்கும் என்பதற்காக, ‘நிஜம் கெடாமல்’ வசனங்களாக சில சம்பவங்களைச் சொல்வதுண்டு. தவிர உடை, உணவு விஷயங்களில் – எதையுமே போகிற போக்கில் எழுதுவதில்லை. செங்கிஸ்கானையே எடுத்துக் கொள்வோம். மங்கோலியப் பின்னணி, வரலாற்றுக்கான காலம், அந்தக் காலம் சார்ந்த மங்கோலியர்களின் கலாசாரம், உணவுப் பழக்க வழக்கம் என்று பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொண்டே எந்த ஒரு விஷயத்தையும் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் செங்கிஸ்கான் என்ன உடை அணிந்திருக்கிறார் என்ற குறிப்பு இருக்காது. அப்படி குறிப்பிடவும் முடியாது. ஆனால், நீல நிற அங்கி அணிந்திருந்தார் என்றிருந்தால், அது குறித்த ஆதாரம் என்னிடம் இருந்தால் மட்டுமே எழுதுவேன். உணவு விஷயத்திலும் அப்படியே.

  வரலாறு போன்ற சுவாரசியமான சப்ஜெக்ட் கிடையாது. வரலாற்றை எளிய தமிழில், புரியும்படி, சுவாரசியமான, விறுவிறுப்பான நடையில் சொல்வது போன்ற கடினமான பணியும் வேறு எதுவும் கிடையாது.

  அதிஅவசியமான பின்குறிப்பு : நண்பர் பிரபாகரன் சாதாரணமாகக் குறிப்பிட்டிருப்பதுபோல, செங்கிஸ்கான் காலத்தில் பரோட்டா – சால்னா கிடையாது.
  – முகில்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: