Home » Articles » பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள்

எம்.ஜி.ஆரை ஏன் M.R.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் எனக்கு வெகுநாளாகவே இருந்தது. திண்ணைப்பேச்சு பேசிய தாத்தாக்களிடம் கேட்டால் தத்தமது கட்சி சார்ந்து ஒவ்வொருமாதிரி பதில் சொன்னார்கள். சொல்வார்கள். சிலர் ஒரேவரியில் மேம்போக்காகக் கதையை முடித்து விடுவார்கள். சரி, நேரம் வரும்போது விலாவரியாக தெரிந்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

இந்த நிலையில்தான் “பிரபல கொலை வழக்குகள்” என்கிற புத்தகத்தைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.ஆர்.ராதா எதற்காக அப்படி செய்தார் என்று பல கோணங்களில் விரிவாக இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த கொலை முயற்சி வழக்கு மட்டுமின்றி இந்தியாவில் பெரிய பரபரப்பைஉண்டுபண்ணிய கொலை வழக்குகளை காலக்கிரம வரிசைப்படி இப்புத்தகத்தில் தொகுத்து இருக்கிறார்கள்.

பிரபல கொலை வழக்குகள், எஸ்பி சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், ரூ 150

மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் ஆங்கிலேயே அதிகாரி ஆஷ் துரை தன் மனைவியுடன் ரயிலில் அமர்ந்திருந்த சமயத்தில், அத்தனை பாதுகாப்புகளையும் மீறி ரயிலுக்குள் நுழைந்து துரையை சுட்டு வீழ்த்துகிறான் ஒரு 25 வயது இளைஞன்அவன் பெயர் வாஞ்சிநாதன். அவன் எதற்காக அப்படி செய்தான்? அவனுக்கு உடந்தையாக யார்யார் இருந்தார்கள்? கடைசியில் அவன் என்ன ஆனான்? அந்த வழக்கு எப்படிமுடிந்தது என்று புத்தகத்தில் சொல்லப்பட்ட முதல் கொலை வழக்கே மேலும்மேலும் பக்கங்களை புரட்ட உந்துகிறது.

புகழின் உச்சாணியில் இருந்த தியாகராஜ பாகவதர் ஒரு கொலை வழக்கில் சிக்கி, சிறைக்குச் சென்று எப்படி அமிழ்ந்து போனார். அந்த வழக்கில் அவருடன் சேர்ந்து இரண்டரை வருடம் சிறையில் இருந்த பிரபல நடிகர் யார்? குறிப்பாக இவர்கள் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நபர் அப்படி என்ன செய்தார் என அடுக்கடுக்காக சுவாரசியங்கள் தாங்கிய இவ்வழக்கு உட்பட அந்த காலத்திலேயே Biological Weapon பயன்படுத்தி நடந்த பகூர் கொலை வழக்கு, 1970களில் தமிழகத்தையே நடுங்க வைத்த விஷ ஊசி கும்பல் போலீசாரிடம் பிடிபட்ட விதம் என்று இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வழக்கும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிக்கின்றன.

அதிலும் “மர்ம சந்நியாசி’ என்கிற வழக்கு குறிப்பிட வேண்டியதுஇறந்துவிட்டதாய் நினைத்த ஜமீன் பன்னிரண்டு வருடங்கள் கழித்து திரும்பவும் தன் சொந்த ஊருக்கு சந்நியாசியாக வருகிறார். அவரின் ரத்த சொந்தங்களும், ஊர்க்காரர்களும் இது நம்முடைய ஜமீன் தானே என்று கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவரும் அதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவரின் சொத்துக்கு ஆசைப்பட்ட மைத்துனர் இது பழைய ஜமீனே அல்ல என்று ஒரு வழக்கு தொடர்கிறார். அந்த ஜமீன்தார் தன்னை “தான்” என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். ஜமீனுக்கும் தற்போது சந்நியாசியாய் வந்திருப்பவருக்கும் உடம்பில் இருக்கும் 27 அங்க அடையாளங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என ஒப்பிடுகின்றனர். நீதிமன்றத்தில் பல சோதனைகள் நடத்தப்படுகின்றன. நாடெங்கும் இந்த வழக்கு பரபரப்பாகப் பேசப்படுகிறது. கடைசியில் தீர்ப்பு என்னவாக வந்தது? அவர் அதே ஜமீன்தானா அல்லது வேறொருவரா? இவை போன்ற முடிச்சுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கப்படுகின்றன. இந்த “மர்ம சந்நியாசி” வழக்கில் விரியும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் க்ரைம் நாவல், சினிமா போன்றவற்றிற்கெல்லாம் நேரடியாக சவால் விடக்கூடியவை.

இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்ட இன்னொரு விஷயம்; இலவசங்களுக்கு ஆசைப்படும் மக்கள் கூட்டம் இன்று நேற்று அல்ல, அவர்கள் பன்னெடுன்காலந்தொட்டே இருந்துகொண்டு வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ஆஷ் அதிகாரியின் கொலைவழக்கைப்பற்றி சொல்லும்போது, வஉசியின் கப்பல் வாணிபம் நிர்மூலமான கதையை கவனித்தால் தெரிந்து கொள்ளலாம்.

எல்லா வழக்குகளையும் படிக்கப் படிக்க அதில் நடக்கும் சம்பவங்களை அப்படியே காட்சிப்படுத்த முடிகிறது. அந்த அளவுக்கு எளிமையான மொழி நடையில் S.P சொக்கலிங்கம் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். நீதிமன்றத்தில் நடக்கும் வாதம், பிரதிவாதம் எல்லாவற்றையும் சொல்லும்போது கூட தேவையான இடங்களில் மட்டுமே வழக்காடு மொழிகளை பிரயோகப்படுத்தி இருக்கிறார். இதனால் எந்த இடத்திலும் அந்நியப்பட்டு போவதற்கில்லை.

வெறும் வழக்கைப்பற்றி மட்டும் சொல்லாமல் அதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அதனோடு மறைமுகமாக தொடர்புடைய நாட்டு நடப்புகளையும் இடைச்செருகலாக தந்திருக்கிறார். ஆகையினாலே படிக்கும்போது இன்னும் நெருக்கமாக பொருந்திப் போக முடிகிறது.

நாவல், சிறுகதை, கவிதைத்தொகுப்பு போன்றன மட்டுமே படிக்கும் வாசகர்களுக்கு இம்மாதிரி புத்தத்தால் ஏற்படும் வாசிப்பு அனுபவம் ஒரு அதிர்ச்சி வைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை.

– தமிழ்ப்பிரபா.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


1 Comment

  1. c.mayilan says:

    உங்கள் மதிப்புரையை வழிமொழிகிறேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: