Home » Drama » டாக்டர் நரேந்திரனின் விநோத விழக்கு

டாக்டர் நரேந்திரனின் விநோத விழக்கு

சுஜாதா மறைவிற்குப் பிறகு அவரின் படைப்புகள் மீதான பார்வையைப் பலரும் கொஞ்சம் காழ்ப்பு கலந்து பதியத் தொடங்கினார்கள். இலக்கியப் பங்களிப்பு குறைவு என்கிறார்கள். அடுத்த தலைமுறை அவரைப் புறக்கணிக்கும் என்கிறார்கள். வெறும் வணிகம் என்று அவரது படைப்புகள் சுருக்கப்படுகின்றன. ஆழம் போதவில்லையாம். சொல்லவேண்டியதைச் சுருக்கமாய் சொல்லக்கூடியவர் என்பதைத் தாண்டி மேலதிகக் கவனம் அவருக்கு தேவையில்லை என்றெல்லாம் என்னனவோ சொல்கிறார்கள். ஆனால் அவர்களாலேயே வாத்தியாரை ஒரு சில இடங்களில் புறக்கணிக்க முடிவதில்லை. நாடகம் அதிலொன்று. ஜெயமோகனும் சுஜாதாவின் நாடகங்களைத் தமிழின் முக்கியமான இலக்கியச் சாதனைகளில் ஒன்றாக நம்புகிறார். அவ்வகையில் கிழக்கு பதிப்பக வெளியீடாக முதல் நாடகம், ஊஞ்சல் நாடகத்தொகுதிகளுக்கு பிறகு இப்போது வாசித்தது “டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு.”


டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, சுஜாதா, கிழக்கு பதிப்பகம், 100 ரூ, பக்கம் 120

நாடகத்தின் மையச்சரடு இதுதான். பதவியுயர்விற்காக காத்திருக்கும் இரண்டு மூத்த மருத்துவர்கள். ஒருவருக்கு அம்மருத்துவமனையின் முதல்வர் (dean) பதவி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக, அவரின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில், அரசியல்வாதி உறவினரின் உதவியோடு பொய் வழக்கு ஒன்றை ஜோடிக்கிறார் மற்றொருவர். பொய்வழக்கு என்றால் பொய்யே அல்ல. சற்றே திரிக்கப்பட்ட உண்மை. குற்றவாளி தரப்பு வக்கீல்களாக கணேஷ்-வஸந்த் களமிறங்குகிறார்கள். அரசியல்வாதி தரப்பில், சாட்சிகள் பேரம் பேசப்படுகிறார்கள். தீர்ப்பு என்ன என்பது மிச்சம்.

நாடகத்திற்குள் நுழையும்முன் மேடை அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென ஒரு குறிப்பை முன்வைக்கிறார் சுஜாதா. அந்த அமைப்பை அப்படியே மனதில் நிறுத்தி தொடரும் காட்சிகளை மனதிற்குள் அரங்கேற்றி வரும்போது நிச்சயம் ஒரு திருப்தி இருக்கிறது. முதல் காட்சி முடியும்போது நீதியரசர் வாயாலேயே கணேஷிற்கு ஒரு ‘mass entry’ வைத்து திரையைப் போடுகிறார். எந்தக் காட்சி எப்படி தொடங்கவேண்டும், ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்குமான தொடர்பை எப்படி நிகழ்த்திக்காட்டுவது, தற்காலத்தில் நடக்கும் காட்சிக்கும் இறந்தகால காட்சிகளுக்குமான இணைப்பை எப்படி நிகழ்த்துவது, எப்பொழுது ஒரு நடிகர் காட்சியை விட்டு ஒதுங்கி முன்னே வரவேண்டும், எப்பொழுது ஒரு குரல் பின்னணியில் ஒலிக்கவேண்டும் என அத்தனைக்கும் மிக எளிய குறிப்புகள். அட்டகாசம்.

விவரணைகளில் இருக்கும் சுஜாதாவின் வீச்சும் குறும்பும் எப்போதுமே வசனங்களில் சற்று குறைவு என்பது என் எண்ணம். நாடகத்தில் விவரணைகள் குறைந்தும் வசனங்கள் அதிகமாகவும் இருக்கவேண்டியிருப்பதால் கொஞ்சம் வாத்தியார் ‘touch’ (இதனை ‘தொடுதல்’ என்று மொழிப்பெயர்த்துவிட வேண்டாம் என்று மதிப்புரைக்காரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்) குறைவதாகத் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. அது நியாமும் கூட. நாடகப்பாத்திரங்கள் பாத்திரங்களாய் பேசுவதே முறை. நாம் எதிர்பார்க்கும் அந்த ‘touch’சிற்காக எல்லோரும் சுஜாதாவாகவே பேசமுடியாது. வசனக்குறும்புகள் இல்லாமலில்லை.

உ.தா. நீதிபதி, ” குற்றம் என்ன செய்தார்? அதைச் சொல்லுங்கள். மத்தியானம் ஒரு ரேப் இருக்கு” என சொல்லுமிடம்.

ஆனால் என்னை ஆச்சர்யப்படுத்தியது, ஏற்கெனவே பலமுறை ஆச்சர்யப்படுத்தியது இணையமில்லாத காலத்தில் தான் கற்ற துறையல்லாத வேறொரு துறையைக் கையிலெடுத்து எழுதும்போது, சம்பந்தப்பட்ட துறையினருக்கே உறுத்தாத வகையில் அதனை அத்தனை தர்க்கரீதியாகக் கையாலும் அவரின் திறன். இவ்வளவு வசதிகள் இருக்கும் காலத்தில் படுதிராபையாக மருத்துவமனைக் காட்சிகளை இயக்கும் படைப்பாளிகளுக்கு இந்த நாடகம் சில பாடங்களை உள்ளடக்கியுள்ளது.

அகிரா குரசேவாவின் ‘ராஷோமன்’ பாணி, வழக்கு விசாரனையில் கையாளப்பட்டுள்ளது. ஒரே சம்பவத்தை இருவர் சாட்சிக்கூண்டில் நின்று விவரிக்கும்போது மேடையின் இன்னொரு பகுதியில் அது காட்சியாகவே விரிகிறது. ஒருவர் சொல்வதற்கும் மற்றவர் சொல்வதற்குமான வேறுபாட்டைக் காட்ட வசனங்களை மாற்றாமல் நடிக்கும் முறையை மாற்றினாலே போதும் என்ற வகையில் அமைத்திருப்பது நாடகாசிரியராக சுஜாதா ஒரு விற்பன்னர் என நிருபிக்கும் இடம்.

நாடகத்தின் குறை என்னவெனில் கணேஷ்-வஸந்த் ஜோடியின் மீது கதாநாயகத்தன பிம்பம் வைத்திருப்போருக்கு கொஞ்சம் ஏமாற்றம் கிடைக்கலாம். அவர்களின் புத்தி சாகசங்கள் இதில் கொஞ்சம் குறைவே. தவிர, நாடகம் ஊகிக்கமுடியாத திருப்பங்கள் பெரிதாய் இல்லாமல் சற்றே நேர்க்கோட்டில் பயணிப்பது.

முதல் பதிப்பிற்கான எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே. என் கண்ணில் பட்டவை…

பக்கம் 46, ‘எக்ஸ்டென்ஸிவா’ என்பது ‘எக்ஸ்டென்ஸியா’ என்றும்,
பக்கம் 54, ‘பராலிஸிஸ்’ என்பது ‘பராலிஸ்’ என்றும்
பக்கம் 62, ‘வாஸ்’ என்பது ‘லாய்’ என்றும்,
பக்கம் 87, ‘அனீமியா’ என்பது ‘அனிமியர்’ என்றும்,
பக்கம் 110, ‘லாஸ்ட்’ என்பது ‘வாஸ்ட்’ என்றும் அச்சுப்பிழையாய்ப் பதிவாகி இருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய ஒற்றுமை என்னவெனில் இவையனைத்தும் ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் பதியமுனைந்த இடங்களில் ஏற்பட்டிருக்கும் பிழைகள். இப்போதுள்ள இளம் எழுத்தாளர்கள் முடிந்தவரை அந்தந்த மொழிச் சொற்களை அந்தந்த மொழியிலேயே பதிவு செய்வது நல்லது.

நாடகத்திற்குத் தொடர்புடைய அட்டைபடம்தானெனினும், அழுத்தமான வழக்கை விசாரிக்கும் நாடகத்திற்கு அட்டையிலுள்ள ‘கார்டூன்’வடிவச் சித்திரம், டாக்டர் நரேந்திரன் எனும் மனிதரை நாம் கற்பனை செய்யுமிடத்தில் சற்றே இடையூறுதான்.

மேலும் கிழக்கு பதிப்பகத்தாரிடம் ஒரு விண்ணப்பம். உங்களின் வெளியீடுகளான சுஜாதாவின் சிறுகதைகளில் முன்னுரையில் அவை எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்ற குறிப்பு இருக்கும். சில காட்சிக்கூறுகளை உள்வாங்க அது ஏதுவாய் இருக்கும். இந்த நாடகத்தில் அது குறிப்பிடப்படவில்லை. Laetrile என்ற பொருள் புற்றுநோய் மருந்தாக ஆய்வு செய்யப்பட்டது எழுபதுகளில். எண்பதுகளின் துவக்கத்தில் அந்த பொருள் தடைசெய்யப்பட்டுவிட்டது. எனவே நாடகம் வரையப்பட்டது எண்பதுகளில் என உத்தேசிக்கிறேன். ஏனெனில் leukemia பிரச்சனைக்கான சிகிச்சை இன்றைய தேதியில் பல முன்னேற்றங்களைக் கண்டுவிட்ட நிலையில் காலத்தை குறிப்பிடுவது நாடகத்தில் இருக்கும் தகவல் குறைபாட்டைத் தவிர்க்கலாம். நாடகத்தில் இன்னொரு இடத்தில் அதே மருந்தை வஸந்த் interferon என்று குறிப்பிடுவது சிறுகுழப்பம்.

அனைத்தையும் கடந்து, நாடகத்தனமாக முடிக்க வாய்ப்பிருந்தும் நாடகத்தை யதார்த்தத்தையொட்டி முடித்திருப்பது கனம். அதுதான் நாடகத்தின் நம்பகத்தன்மையை அழுத்தமாகப் பதிவு செய்யுமிடம். இன்றைய சூழலில், நாடகம் அச்சில் வருவது என்பதே இல்லாமல் போனப்பிறகு வாசகர்கள் பொக்கிஷமாக கொண்டாடவேண்டிய படைப்புகளில் வாத்தியாரின் நாடகங்களின் ஒன்றான ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’ற்கு அதன் செய்நேர்த்திக்காக நிச்சயம் இடமுண்டு..

‘வாத்தியார் மற்றும் நாடக’ இரசிகர்களுக்கு கட்டாயம் பரிந்துரைக்கிறேன், கணேஷ்-வஸந்த் இரசிகர்கள் அவர்களுக்கான வரிசைகளில் இதனைப் பொருத்தமுடியாதெனினும்.

– மயிலன்

ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-676-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: