Home » Cinema » கமலின் கலை(ல)ப்படங்கள்

கமலின் கலை(ல)ப்படங்கள்

நிழல் வெளியீட்டில் வந்துள்ள “கமலின் கலைப்படங்கள்” என்னும் இந்நூல் பி.ஆர்.மகாதேவன் அவர்களின் மொழி ஆளுமையையும் எழுத்து வல்லமையையும் உரத்த குரலில் பிரஸ்தாபிக்கிறது. நீரோடை போன்ற இவரது தெளிந்த நன்னடையும், எளிதில் புரிந்து கொள்ள வைக்கும் சுலப வார்த்தைப் பிரயோகமும் நம்மை விரல் பிடித்து வேகமாக அழைத்துச் செல்கிறது. கூடவே சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லை. இந்நூல் தன் பிரதான அலங்காரமாக முரண்களை அதிகமாக அணிந்திருந்தாலும் வாசிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்!

கமலின் கலைப்படங்கள், பி.ஆர். மகாதேவன், நிழல் வெளியீடு, ரூ

நூலாசிரியர் தன் ஆழ்ந்த ஆய்விற்கு கமலின் புகழ் பெற்ற ஹேராம், விருமாண்டி,தேவர் மகன், அன்பே சிவம், குருதிப் புனல் மற்றும் குணா போன்ற ஆறு திரைப் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களை இவர் பன்முறை திரும்பத் திரும்பப் பார்த்து கூர்நோக்கியிருக்கிறார் என்பதை இவரது துல்லியமான சுட்டிக் காட்டுதல்களே காட்டிக் கொடுக்கின்றன.

இந்நூல் ஒவ்வொரு திரைப் படத்தையும் நம் கண் முன்னே ஒளிக் காட்சியில் பார்ப்பதை விடவும் நேர்த்தியாய் விரிக்கிறது. இடையிடையே காட்சியமைப்புகளில் உள்ள குறைகளை கூர்மையாய் அடிக் கோடிடுவது அபாரம். இப் படங்களை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். எனினும் இந்நூல் நமக்கு அறிமுகப் படுத்தும் பல குறைகள் படித்த பின்தான் தெரிய வருகிறது, அத்தனை நுண்ணோக்குப் பார்வை ஆசிரியருக்கு இருந்திருக்கிறது. ஹேராம் படத்தை ஒளி வடிவில் பார்ப்பதை விடவும் இந்நூலின் எழுத்து வடிவம் அதிகப் புரிதலைக் கொடுக்கிறது. இதே போல் மற்ற ஐந்து படங்களையும் அதனியல்பு மாறாமல் அப்படியே விவரித்திருக்கிறார்.

இந்நூலாசிரியர் சுமத்தும் காட்சிக் குற்றங்கள் எதுவும் சினிமாஞானிகள் எவராலும் மறுக்க முடியாதவைதான். குறிப்பாக சிலவற்றைச் சொல்ல வேண்டுமானால், ஹேராமில் அபயங்கரும் சாகேத்ராமும் இரவில் நடந்து போகையில் நிகழும் சம்பாசனை, 1946-லியே சுப்ரபாத இசை, இஸ்லாமியப் பாலியல் தொழிலாளர்களின் இந்துத் தரகர், இப்படியாக எல்லாப் படங்களிலும் ஆதாரப் பூர்வமான பல்வேறு குறைபாடுகளை உள்ளங்கை நெல்லிக் கனி போல் உரித்துக் காட்டுகிறார். நூலாசிரியர் இதற்காக மெனக்கெட்டு குண்டூசி முனைக் குற்றத்தைக் கூடக் கண்டறிந்து குறிப்பிட்டிருக்கிறார். அதையும் தன் சர்க்கரை நடையில் இந்நூலில் தவழ விட்டிருப்பது மிக அற்புதம்!

நூலாசிரியர் தமிழில் தரமான படங்கள் வர வேண்டுமென்ற ஞாயமான விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். எனினும் இவர் குறிப்பிடும் இலக்கணத்தோடு சினிமாவை இன்றைய கலைஞ்ர்கள் எவராலும் எடுக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப் படத்தின் தரம் என்பது கதைக் கரு, நேர்த்தியாக காட்சிப் படுத்துதல், சுவைபடக் கதை சொல்லுதல், தொய்வின்றி காட்சிகளை நகர்த்துதல் மற்றும் தேவையற்ற இணைப்புகளைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. மேலும் காலப் பரிமானங்களும் தொடர் அடையாளங்களும் முக்கியமானவை. இவற்றில் ஏற்படும் அபத்தமான தவறுகள் படத்தின் தரத்தைத் தாழ்த்தத் தவறுவதில்லை.ஆயினும் எந்தவொரு படைப்பையும் நூறு சதவிகிதம் குறையின்றிக் கொடுப்பது அபூர்வமே.

வெளியிடுவதற்கு முன் இறுதியாக சீரமைக்கும் போது கூட சில சிறு பிழைகள் கண்களில் படாமல் மாயமாய் மறைந்து விடுவதுண்டு. படைப்பு வெளியிடப்பட்டபின் படைப்பாளியே தன் படைப்பில் குற்றங்களைக் கண்டறிவதுண்டு. இதுபோக சில சொற்பத் தவறுகள் அதன் புரிதல் நிமித்தம் தெரிந்தே அனுமதிக்கப்படுவதுண்டு.

பலரின் கூட்டு முயற்சிதான் ஒரு திரைப்படம்.ஆக்கத்தின் போது ஆர்வத்தினால் அனைத்துத் துறைகளிலும் கமல் தலையிடுவார் எனினும் அப்படத்தின் ஆகிருதி அனைத்தும் கமலின் ஒற்றை மூளைக்கு மட்டுமே சொந்தமானது என்று சொல்லி விட முடியாது. கமல் ஒரு நல்ல கலைஞன் என்பதால் அவரது நடுவாத்திரமான கலைப் படத்தில் குறையே இருக்கக் கூடாது என்று கூட சொல்வதற்கில்லை..

ஒரு திரைப்படத்திற்கு கதைத்தேர்வு, எந்த கேரக்டரை பிரதானப் படுத்துவது, எத்தகைய காட்சிகளை வைப்பது என்பதெல்லம் படைப்பாளியின் உரிமை. இதில் நிறையிருந்தால் பாராட்டலாம். குறையிருந்தால் குறிப்பிடலாம். அதோடு அடுத்தவரின் எல்லை முடிந்து விடுகிறது. இந்த எல்லையைத் தாண்டும் நூலாசிரியர், இத்திரைப் படத்தை நான் உருவாக்கியிருந்தால் காட்சிகளை இப்படி அமைத்திருப்பேன், கதையை இப்படி மாற்றியிருப்பேன், இந்த கேரக்டரை இப்படி காட்டியிருப்பேன், இந்தக் குறையை இப்படி நிவர்த்தி செய்திருப்பேன் என்று வரிந்துகட்டிக் கொண்டு வலம் வருவது படைப்பாளிகளை அவமானப் படுத்துவதாகவே இருக்கிறது. அலங்கோலத்தை அலங்காரப் படுத்துவதாக ஆசிரியர் கூறினாலும் அலங்காரம் என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்ததுதான். மேலும் இவர் இப்படி எழுதுவதற்கு உதவியதே கமலின் அந்தக் கலைப் படங்கள்தான். எடுக்கபடாத படத்திற்கு எப்படி மாற்றுக் கதை சொல்ல முடியும்? இதை கிராமப் புறத்தில் கட்டிய வீட்டிற்கு வித்தாரம் பேசுதல் என்று சொல்வார்கள்.

கமல் என்னும் ஒரு மகா நடிகனைக் குறை கூற வேண்டும் என்ற இலக்கிற்காகவே இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது என்பது, முன்னுரையில் அவரை ’ஊதிப் பெருக்கப்பட்ட உலக நாயகன்’ என குறிப்பிட்டதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. முதல் பத்தியில் குறிப்பிட்டது போல் இது வாசிப்பதற்கு ஏற்ற நூலெனினும், ஏற்றுக்கொள்ளும் வாசிப்பை எவருக்கும் தரப் போவதில்லை!

-ஆர். கோவிந்தராஜ்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-800-4.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: