Home » Articles » பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள்

இயல்பாக எனக்கு சட்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் இருப்பதாலும், நீதிமன்றத் தீா்வுகளை மொழிபெயர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாலும்- மதிப்புரை.காம் திட்டத்தின்கீழ் முதல் புத்தகமாக முன்னணி வழக்கறிஞர் திரு எஸ்.பி. சொக்கலிங்கம் அவர்களின் பிரபல கொலை வழக்குகள் என்ற புத்தகத்தைத் தேர்வு செய்தேன். மாலை தேர்வு செய்து மின்னஞ்சல் அனுப்ப மறுநாள் காலை 10:30 மணிக்குப் புத்தகம் கையில் கிடைத்துவிட்டது. சில பணிகளின் காரணமாக படிப்பதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது.


பிரபல கொலை வழக்குகள், எஸ்பி சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், ரூ 150

பொதுவாக வழக்கறிஞர் பணியில் உள்ளவர்கள் தனது வாதங்களுக்கு ஆதரவாக தெரிவிப்பதற்காக சுட்டி (Citation)யாக வழக்குகளைக் குறித்து வைத்துக் கொள்வதுடன், அதன் தீர்வில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது- அதை எந்த வகையில் தனது கட்சிக்காரரின் வழக்கிற்குப் பயன்படுத்தலாம் என்று மட்டுமே பார்ப்பது இயல்பு. ஆனால் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சொக்கலிங்கம், வாதப் பிரதிவாதங்களில் வெளிவந்த தகவல்கள், வழக்கு நடைபெற்ற விதம் போன்ற தகவல்களை ஒரு நாவல் புத்தகத்திற்கு இருக்கிற விறுவிறுப்போடு கொண்டு சென்றுள்ளார்.

சுதந்திரத்திற்கு முன்பான ஆஷ் கொலை வழக்கு- சிங்கம்பட்டி கொலை வழக்கு, கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் சிக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கு, எம்.ஜி.ஆரை எம்.ஆா்.ராதா சுட்ட வழக்கு, நானாவதி கொலை வழக்கு, மர்ம சந்யாசி வழக்கு என 10 வழக்குகளை விாிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியா்.

துப்பறியும் நாவல்களில் சில சந்தர்ப்பங்களில் நிஜமாக நடைபெற்ற ஒரு குற்றச்செயலின் ஒரு சிறு பொறியை மட்டும் வைத்துக் கொண்டு கதாசிரியர்கள், கற்பனைகள் கலந்து விறுவிறுப்பான நடையில் கொண்டு சென்று விட முடியும். ஆனால் நிஜமான வழக்குகளை எடுத்துக் கொண்டு அதில் நடைபெற்ற சுவாரசியமான, விறுவிறுப்பான நிகழ்வுகளை கதை போல் சொல்லிய விதம் தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது.

வாஞ்சிநாதன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயிலினுள்ளே வைத்து சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டது- ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் மீதிருந்த வெறுப்பு மற்றும் சுதந்திர வேட்கையின் ஒரு பகுதி என்றுதான் இதுவரை பலர் அறிந்திருப்போம். ஆனால் குறிப்பிட்ட வாஞ்சிநாதன் மற்றும் இளைஞர்களுக்கு துரையின் மீது அளவு கடந்த வெறுப்பு வளர்வதற்கு அந்த துரை தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கும் அவரின் வாணிபத்திற்கும் இடைஞ்சல் கொடுத்ததும், கப்பல் போக்குவரத்திற்கு போட்டியாக கட்டணம் குறைத்தும், இலவசமாகவும் ஆங்கிலேய கப்பலை இயக்கியதும் முக்கியக் காரணம் என்பது இந்த புத்தகத்திலிருந்து தெரிய வருகிறது.  பார்ப்பனர்கள், பிள்ளைமார் போன்றவர்கள் சாத்வீகமானவர்கள், தங்களது சுயநலத்திற்காக ஆங்கிலேயரை அண்டி அவர்களுக்கு துதிபாடும் வகையில் பல பணிகள் மேற்கொண்டனர் என்றுதான் பல திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கொலை வழக்கில் கைதான பலர் பார்ப்பனர்கள் மற்றும் சிலர் பிள்ளைமார்கள் என்பது கைதானவர்களின் பட்டியலை பார்க்கிறபோது தெரிகிறது. சுப்பிரமணிய பாரதியும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறார் என்பதும் அறிய வேண்டிய தகவல்.

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு நிகழ்வுகளை ஊடகங்களில் படித்த நம்மில் பலர் பல நாட்கள் விசாரணை நடைபெற்ற பிறகு, சிலர் அப்ரூவராக சாட்சியம், சிலர் பிறழ் சாட்சியம் என்றெல்லாம் விசாரித்த பிறகு யாருமே குற்றவாளியில்லை என விடுதலை செய்யப்பட்டதை பார்த்து அப்படியென்றால் கொலை எப்படி நடந்தது, என்ன விசாரணை இது என விவாதித்திருக்கிறோம். அது போல 90 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சிங்கம்பட்டி கொலை வழக்கு என்பதில் கடம்பூர் என்பவனும், சிங்கம்பட்டி என்பவனும் துரை ஒருவரை கொலை செய்ததாக விசாரிக்கப்பட்ட வழக்கு சில, பல வருடங்கள் விசாரணை நடைபெற்று குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவரே அப்ரூவராக மாறி சாட்சியம் அளித்த போதிலும் இறுதியில் பம்பாய் நீதிமன்ற தலைமை நீதிபதி நார்மன் மெக்லாய்ட் இருவரையும் விடுதலை செய்த வழக்கிலும் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிபதி தவிர ஜூரி என்றழைக்கப்படும் நடுவர்கள் குழுவும் விசாரணையில் உதவியது என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

1940 களில் திரையுலக சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தியாகராஜ பாகவதர், அது போல் நகைச்சுவையோடு, பகுத்தறிவு கருத்துக்களையும் சினிமாவில் தெரிவித்துப் புகழ் பெற்றவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இந்த இருவரும் திரையுலக செய்திகளை மஞ்சள் பத்திரிக்கை போல எழுதி வந்த லட்சுமிகாந்தன் என்பவர் கொல்லப்பட்ட போது, முன் விரோதம் காரணமாக இந்த கொலைக்கு காரணமானவர்கள் எனக் கைது செய்யப்பட்டு சில ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்ததோடு, மிகுந்த சிரமப்பட்டுத்தான் அந்தக் கொலை வழக்கிலிருந்து இருவரும் வெளிவந்தனர் என்பது நிச்சயமாக பலரால் அறியப்படாத செய்தியாகத்தான் இருக்கும். லட்சுமி காந்தன் நடத்தி வந்த பத்திரிக்கைக்கான உாிமத்தை ரத்து செய்வதற்கு அன்றைய ஆளுநாின் உதவியை நாடி தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பிரபல இயக்குனர் மற்றும் ஸ்டூடியோ உரிமையாளர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர், ரத்து செய்த பின்னரும் தொடர்ந்து லட்சுமிகாந்தன் திரையுலகைப் பற்றி பல கிசுகிசுக்களை எழுதி வந்தார் என்பதால் முன்விரோதம் காரணமாக லட்சுமி காந்தன் கொலையில் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என கைது செய்யப்பட்டதாக விறுவிறுப்புடன் தொடர்கிறது இந்த கொலை வழக்கின் விபரங்கள்.

அரசியல் கருத்து மாறுபாடு, தொழில் முறை போட்டி, எம்ஜிஆா் நடிக்க வந்ததால் தனது வாய்ப்புக்கள் பல பறிபோயின என எம்ஆர் ராதா எண்ணியதால், எம் ஜி ஆரை அவரது இல்லத்தில் வைத்து எம்ஆா் ராதா கைத் துப்பாக்கியால் சுட்டது, மற்றும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டது தொடர்பான நிகழ்வுகள் சுவாரசியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இருவரும் துப்பாக்கி குண்டு காயம் பட்ட போதிலும் இருவரும் பிழைத்தது எப்படி என எம்ஜிஆா் உட்பட அனைவரும் வியந்திருக்கின்றனர். இதற்கு காரணம் ராதாவின் துப்பாக்கியில் இருந்த குண்டுகள் வீரியம் இழந்தவை என்ற விபரமும் இதில் சொல்லப்பட்டுள்ளது. ராதாவிற்கு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது, அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது, பின்னர் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் மூன்றரை ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது என்பது விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி அனைத்து வழக்குகளின் சுருக்க விபரங்களையும் மதிப்புரையில் சொல்லிவிட்டால், அப்புறம் புத்தகம் படிக்கிறவர்களின் சுவாரசியம் குறைந்ததாக ஆகிவிடும். புத்தக ஆசிரியர் வழக்கறிஞர் தனது அனுபவத்தின் காரணமாக 10 பிரபல வழக்குகளையும் சுவைபட சொல்லியிருக்கிறார். பலரும் படிக்க வேண்டிய நல்ல புத்தகம். கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

– எஸ்.சம்பத், மதுரை

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: