Home » Travelogue » தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி

மதிப்புரை.காம் தளத்துக்கு முதலில் எனது நன்றி. புத்தக மதிப்புரைக்காக அப்புத்தகத்தையே அனுப்பிவைக்கும் இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்பதை எடுத்துரைத்தேயாகவேண்டும்.

பொதுவாக நம்மூர் மக்கள் வெளியூர்ப்பயணம் மேற்கொள்வதே கலியாணம், காதுகுத்து, வேண்டுதல்களுக்குத்தான். மிஞ்சிப்போனால் ஊட்டி, குற்றாலம். நானும் அப்படித்தான் இருந்தேன். முதல்முறை வேலைநிமித்தம் அமெரிக்கா சென்றபோதுதான் விடுமுறையில் சுற்றுலா என்ற விஷயமே பிடிபடத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் ஒரு பயணம் முடித்த அடுத்த நாளே அடுத்த பயணத்திற்கான திட்டமிடலில் இறங்கும் அளவுக்குப் போனது.


தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி, தமிழ்சுஜாதா, கிழக்கு பதிப்பகம், ரூ 175, பக்கம் 216.

என்னதான் ஊர்கள், நாடுகள் பல சுற்றியிருந்தாலும் சொந்த நாட்டில் அந்த அளவுக்குப் பொறுக்கியதில்லை என்பதே இன்றுவரை உண்மையாக இருக்கிறது. அதனால்தான் ‘தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி’ என்ற புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகப் பட்டியலில் பார்த்ததும் அதைப் படித்துப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.

ஆங்கிலத்தில் ‘லோன்லி ப்ளானட்’, ‘ஃப்ராம்மர்ஸ்’ போன்ற நிறுவனங்கள் சுற்றுலா வழிகாட்டிகள் வெளியிடுவதில் பிரசித்தி பெற்றவை. ரிக் ஸ்டீவ்ஸ் மாதிரி ஆட்கள் ஐரோப்பா போன்ற குறிப்பிட்ட இடங்களுக்காக மட்டும் வெளியிடும் வழிகாட்டிகளும் மிக உயர்தரமானவை. இதுமட்டுமல்லாது, இணையத்திலும் சுற்றுலா குறித்த பல வலைதளங்கள் இயங்கிவருகின்றன. விக்கி ட்ராவலும் ட்ரிப் அட்வைஸரும் உடனே நினைவுக்கு வருபவை. இவை எல்லாவற்றையும் பல பயணங்களில் பலமுறை பயன்படுத்தியிருப்பதால் ஒரு சுற்றுலா வழிகாட்டி நூல் எப்படி இருக்கவேண்டும், என்னென்ன விஷயங்கள் கொண்டிருக்கவேண்டும் என்பது குறித்த ஒரு உத்தேசமான பார்வை எனக்கிருப்பதாகக் கருதுகிறேன்.

தமிழ் வெளியில் இதுபோலச் சுற்றுலாவுக்கென்றே இயங்கும் நிறுவனங்களும் பதிப்பகங்களும் உருவாவது கடினம். ஆனாலும் அவ்வப்போது வெளிவரும் இம்மாதிரி அரிய முயற்சிகளும் மேற்சொன்ன நிறுவனங்களின் வெளியீடுகள் அளவுக்கு தரமும் பயனும் கொண்டிருக்கவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன்.

அந்த வகையில் இந்நூல் ஒப்பீட்டளவில் தமிழகத்திற்கான ஒரு மினி விக்கி ட்ராவல் போலவே இருக்கிறது. புத்தகத்தின் உள்ளடக்கம் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மிகப் பிரபலமான நூறு இடங்கள்தான் நூலின் கூறுபொருள். முதலில் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் சுருக்கமாக ஓரிரு பத்திகளில் ஒரு விளக்கம். இதில் அந்த இடம் எங்கு உள்ளது (எந்த மாவட்டத்தில், எந்த ஊருக்கு அருகே), அவ்விடத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன, அங்கே எவ்வளவு நேரம்/நாள் தங்கலாம், என்னென்ன பார்க்கலாம்/செய்யலாம் போன்ற விஷயங்கள் வருகின்றன.

பிறகு விக்கி ட்ராவல் பாணியில் அவ்விடத்திற்கு எப்படிச்செல்வது, அருகிலுள்ள ரயில்/விமான நிலையங்கள், எப்போது செல்வது, எங்கே தங்குவது, எங்கே என்ன சாப்பிடுவது, அங்கே என்ன வாங்கலாம், அருகிலுள்ள பிற சுற்றுலாத்தலங்கள், கவனத்தில் கொள்ளவேண்டியவை என்று சிறு சிறு குறிப்புகள் வருகின்றன.

பல இடங்களுக்கு இந்நூல் தரும் குறிப்புகள் நறுக்குத் தெறித்தாற்போல் இருந்தாலும் செறிவாக இருக்கின்றன. ஒவ்வொரு இடத்துக்கும் பேருந்தில் போவது சுலபமா, அல்லது ரயிலா, அல்லது கார்/வேன் வைத்துக்கொள்ளவேண்டுமா போன்ற தகவல்களை மெனக்கெட்டுத் தந்திருப்பதும், எங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கும், எங்கெல்லாம் நாம் எடுத்துச்சென்றிடவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதும் சிறப்பு.

புத்தகத்தை யாரெல்லாம் படிக்கக்கூடும் என்பதை நினைவில் கொண்டு, சில இடங்களின் திரைப்படத் தொடர்புகளும் தரப்பட்டுள்ளன – எடுத்துக்காட்டாக, தியாகவல்லியில் ‘சொல்ல மறந்த கதை’யில் ஒரு பாடல் படமாக்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு இதுபோன்ற திரைப்படத் தொடர்புகளை எடுத்துச்சொல்வது அவ்வளவாகப் பிடிக்காதெனினும் அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்கிறேன்.

நான் கேள்விப்பட்டிராத பல விலங்கு/பறவை சரணாலயங்கள் இந்நூலில் காணக்கிடைக்கிறது. நல்ல கவரேஜ். ஒவ்வோர் இடத்திலும் என்னென்ன பிராணிகளைப் பார்க்கலாம் என்று விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இச்சரணாலயங்களுக்குக் செல்லும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நான் வங்காளத்தில் சுந்தரவனக்காடுகளுக்குச் சென்றிருந்தபோது அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் செய்த அட்டூழியங்களை நினைவுகூர்ந்தேன்.

நூலாசிரியர் தமிழ் சுஜாதா தான் ஒரு வழிகாட்டி நூல் எழுதுகிறார் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். எந்த இடத்திலும் ஒரு வழிகாட்டி நூலுக்கு இருக்கவேண்டிய நிதானம், பாரபட்சமின்மை போன்றவற்றை விட்டுவிடாமல், கில்லியில் ஓட்டேரி நரி சொல்வதுபோல மிகவும் போலீஸாக இருக்கிறார். இதனால் நூலில் வரும் நூறு இடங்களுக்கும் பாரபட்சமில்லாமல் ஒரேமாதிரி கவனம் கிடைப்பதால் இது மிகவும் பாராட்டுக்குரியதே. ஆனால், சில சமயங்களில் ஒரு வழிகாட்டி நூலில்கூட அவ்வப்போது நூலாசிரியரின் சொந்தக் கருத்துகள், பிரச்னைகள் சுட்டிக்காட்டல் போன்றவை இருந்தால் நூலின்மீது மேலதிக ஆர்வமும் நம்பிக்கையும் கூடும். ரிக் ஸ்டீவ்ஸ் இதில் விற்பன்னர். இம்மாதிரி கருத்துகள் இந்நூலில் அதிகம் இடம்பெறவில்லை.

ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேடந்தாங்கலும், பரம்பிக்குளமும் மட்டும் நூலாசிரியருக்கு மிகவும் பிடித்த இடங்கள் போலிருக்கிறது. அவை மட்டும் நான்கு பக்கங்கள் பெறுகின்றன. இரண்டே பக்கங்களில் இவ்வளவு தகவல்களை அடைத்தாகவேண்டிய நிலை. அதனால், சில இடங்களுக்கான விளக்கங்கள் வெகு சுருக்கமாகவோ, நீர்த்துப்போயோ உள்ளன. பரம்பிக்குளம் போலவே இன்னும் பல இடங்களுக்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இருநூறுக்கு பதில் முந்நூறு பக்கங்கள் போயிருந்தாலும் தகவல்கள் மேலும் நிறைவாகவும் பயனுள்ளதாகவும் தரப்பட்டிருக்கலாம் என்றே கருதுகிறேன்.

நூறு இடங்களும் எதோ ஒரு வரிசையில் வருகின்றன. சில சமயங்களில் அருகருகே இருக்கும் இடங்கள் அடுத்தடுத்து வருகின்றன. சில சமயங்களில் அவை புத்தகத்தின் பல மூலைகளில் சிதறிக்கிடக்கின்றன. நாட்டில் பலர் ஓரிரு நாட்கள் மட்டுமே பயணம் மேற்கொண்டாலும், நான்கைந்து நாட்கள், ஒரு வாரம் என்று சேர்த்துவைத்துப் பயணம் செய்யும் என்னைப்போன்ற ஜந்துக்களும் நிறைய உண்டு என்று நினைக்கிறேன். எங்களுக்கு மேலும் உதவியாக, இந்த நூறு இடங்களை மாவட்ட வாரியாகப் பிரித்து, பகுதி பகுதியாக அளித்திருந்தால் ஒரு பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளப் பயனுள்ளதாக அமைந்திருக்கும். நான் முன் சொன்ன பிரபல வழிகாட்டி நூல்கள் அனைத்தும் இந்தப் பாணியையே பின்பற்றுகின்றன. புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே தமிழக மாவட்டங்கள் வரைபடத்தைத் தந்திருப்பதால் அப்படியொரு கட்டமைப்பை நான் எதிர்பார்த்து ஏமாந்துபோனேன். அதேபோல், நூலின் நடுப்பக்கத்திலோ இறுதியிலோ ஒரு இருபக்க வரைபடத்தில் இவ்விடங்கள் அனைத்தையும் குறித்திருந்தாலும் பயணத்திட்டங்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

கூகிள் உதவியுடன் அப்படி ஒரு வரைபடத்தை முயன்றுகொண்டிருக்கிறேன்: https://www.google.com/maps/d/edit?mid=zT_tcWLRvsiI.kaMx5QuoWDrY.

இவ்வரைபடத்தில் மேலும் சில தகவல்களைச் சேர்ப்பதின்மூலம் ஒரு Ready Reckoner உருவாக்கமுடியும் என்று கருதுகிறேன். இதையே ஒரு வலைதளமாகவோ அல்லது திறன்பேசி செயலியாகவோ ஆக்கி, அதில் தேடல், பயணத்திட்டம் உருவாக்கல் போன்ற மேலதிக அம்சங்களையும் சேர்க்கமுடியும். இணையத்தின் பயன்பாடு வளர்ந்துவரும் இந்தக் காலத்தில் இதுபோன்ற புத்தகங்கள் இணைப்பாக இவ்வாறான வலைதளங்கள்/செயலிகளுடன் வந்தால் அவற்றின் பயன் இரட்டிப்பாகும் என்று தோன்றுகிறது.

‘தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி’ போன்ற புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவது கொஞ்சம் கடினம். புத்தகத்தின் வடிவமும் பயனும் மட்டுமே அப்படியொரு மதிப்புரையின் முக்கியக் காரணிகளாக இருக்கமுடியும். அவ்வகையில், இந்நூல் ஒரு நல்ல தொடக்கம். பயணம் குறித்த நூல்களில் தகவல்கள் அதிகமில்லாத வருணனைக்கட்டுரை நூல்களுக்கும், வெறுமனே அட்டவணை போடும் நூல்களுக்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில் இது இருப்பதால் நம் பயணங்களுக்கு நிஜமாகவே உதவி செய்யக்கூடும். ஆனால், இதிலுள்ள அடிப்படை விவரங்களைப் படித்துவிட்டு, கண்டிப்பாக நான் மேலதிக விவரங்கள் தேடுவதற்கு இணையத்தையே நாடவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. அனைத்துத் தகவல்களையும் தொகுத்துத் தரும் ஒரு முழுமையான வழிகாட்டியாக இந்நூல் தற்போது இல்லை. இன்னொரு விரிவான பதிப்பில் அந்நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

– சங்கர் அருணாசலம்

ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-552-3.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: