Home » Biography » அக்பர்

அக்பர்

அக்பர் என்ற பெயரைக் கேட்டதும் என்ன நினைவுக்கு வரும்? மொகலாயப் பேரரசர்களில் சிறந்தவர், பீர்பால் என்ற நகைச்சுவையான மந்திரியை அவையில் வைத்திருந்தவர், தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியவர் இப்படியெல்லாம் பள்ளிக்கூட வரலாற்றுப் பாடத்தில் படித்தவைதான் நினைவில் அலையாடும். அதைத் தாண்டிய அக்பரின் பரிணாமங்கள் அனைத்தையும் நுணுக்கமாகப் பதிவு செய்கிறது என்.சொக்கன் எழுதிய இந்த ‘அக்பர்’ நூல்.


அக்பர், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், ரூ 90, பக்கம் 128

சரித்திரப்பாட புத்தகத்தில் படிக்கும்போது தமிழ் மன்னர்களில் பாண்டியன் நெடுஞ்செழியனும், இஸ்லாமிய அரசர்களில் அக்பரும் 14 வயதிலேயே மன்னராக முடிசூட்டப்பட்டவர்கள் என்ற தகவல் எனக்குள் வியப்பையும் பல கேள்விகளையும் எழுப்பியதுண்டு. அந்த வயதில் எப்படி அரசாட்சிக்கான பக்குவம் இருக்க முடியும்…? சுற்றியிருப்பவர்கள் அறிவுரை சொல்லியே ஆளைக் காலிபண்ணிவிட மாட்டார்களா என்ன..? அதையும் தாண்டி எப்படி இவர்கள் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள்…? தன் பன்னிரண்டாவது வயதில் அரியணை ஏறிய ஜலாலுதீன் மொஹம்மத் அக்பர், பைரம்கான் என்கிற மிகச் சிறந்த பாதுகாப்பாளரிடம் பொறுப்புகளை விட்டுவிட்டு அவர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்று நம்பியதையும், தன் நேர்மையான குணத்தால் பல விரோதிகளை பைரம்கான் சம்பாதித்துக் கொண்டதையும் அறிகையில் வியப்பு. அக்பரின் வளர்ப்புத் தாயான மஹம் அங்கா, தன் மகனை அரசாங்கப் பொறுப்புகள் வகிக்க வைப்பதற்காக பைரம்கானுக்கு எதிராக அக்பரைத் திருப்புகிறாள். அக்பர் அவள் விரும்பியபடி செய்ய, ஒரு கட்டத்தில் அவள் மகன் ஆதம்கான் பேரரசரை மதிக்காமல் அவர் வெறுப்பைச் சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில் எவரையும் நம்பாமல் திறமையான அதிகாரிகளின் துணைகொண்டு அக்பர் தானே செயல்படத் துவங்கி விடுகிறார். இதை இந்நூல் மிக அழகாக விவரிக்கிறது.

அக்பரைப் பற்றிய, என் மனத்தில் இருந்த சில விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்கிற காரணத்தாலேயே நான் ‘அக்பர்’ நூலை விமர்சிக்கத் தேர்ந்தெடுத்தேன். கிடைத்தன. பல மதங்களின் நல்ல அம்சங்களை இணைத்து ‘தீன் இலாஹி’ என்ற மதத்தை அக்பர் தோற்றுவித்தார். அவர் காலத்துக்குப் பின் அது நிலைக்கவில்லை என்று பாடப் புத்தகங்களில் படித்ததுண்டு. உண்மையில் அக்பர் எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை, பல மதங்களில் இருந்து தொகுக்கப்பட்ட கோட்பாடுகளின் தொகுப்பைத்தான் அந்தப் பெயரால் அழைத்தார் என்பதையும், அவர் வாழ்ந்த காலத்திலேயே இருபது பேர்தான் அதைப் பின்பற்றினார்கள் என்பதையும் நூல் விவரிக்கையில் என்னுள் !

அக்பரின் மகன் சலீம் (பின்னாளில் ஜஹாங்கீர்) அனார்கலி என்ற பெண்ணைக் காதலிக்க, அக்பர் அவளுக்கு உயிரோடு சமாதி கட்டினார். அதனால் அக்பருக்கும் சலீமுக்கும் மனஸ்தாபம் என்று சினிமாவில் பார்த்ததை அவர் வாழ்வின் ஒரு பகுதி என்று நினைத்திருந்தால் அதை அழித்து விடுங்கள். சலீம் பெரும் குடிகாரனாக இருந்ததுதான் அவர்களிடையே மனஸ்தாபம் எழுந்த காரணம். உண்மையில் அனார்கலி என்றொரு பெண் வாழவும் இல்லை, அவளை சலீம் காதலிக்கவும் இல்லை. அபுல்ஹலிம் ஷரார் என்பவர் எழுதிய கற்பனைக் கதையில் இடம் பெற்ற பாத்திரம் அனார்கலி. பின்னர் பல மொழிகளில் நாவலாக எழுதப்பட்டு, சினிமாவாகவும் எடுக்கப்பட்டு புகழ்பெற்று ஒரு கட்டத்தில் எது கற்பனை, எது நிஜம் என்று தெரியாமல் சரித்திரத்துடன் இணைந்துவிடும் பல தகவல்களில் ஒன்றாகி விட்டது அது.

அக்பர் – பீர்பால் கதைகளைப் படிக்கையில் பீர்பால் அக்பரைச் சிரிக்க வைப்பதற்கான விதூஷக அமைச்சர் என்றுதான் நினைத்திருப்போம். உண்மையில் நாள் முழுவதும் அக்பரும் பீர்பாலும் வேடிக்கைக் கதைகளை மட்டும் பேசவில்லை. அக்பரின் அவையில் பல நிர்வாக விஷயங்கள், ராணுவப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டவர் பீர்பால். ஒரு தோழனாக அவரிடம் ஆலோசனை கேட்காமல் அக்பர் எதையும் செய்ததில்லை என்ற விஷயமும் புருவம் உயர்த்தச் செய்வதுதான். அதைவிட ஆச்சரியம்… பீர்பால் ஆப்கன் எல்லையில் நடந்த கலவரத்தை அடக்க போருக்குச் சென்று அந்தப் போரில்தான் அக்பருக்காக உயிரை விட்டார் என்கிற விஷயம்.

இப்படி அக்பரின் வாழ்க்கையில் இருக்கும் பல புதிர்களை விடுவிக்கிறது இப்புத்தகம். அக்பரின் இளமைப் பருவத்தை விவரிப்பதற்காக அவர் தந்தை ஹுமாயூனின் வரலாற்றில் தொடங்கி, அக்பரின் மறைவு வரை முழுமையாக அக்பருடன் வாழ்வில் நம்மையும் கூடவே பயணிக்க வைப்பது புத்தகத்தின் சிறப்பு. சில சந்தர்ப்பங்களில் சரித்திரத்தில் இருவிதமாகக் கூறப்படுவதையும் சொல்லி, இதனால் இப்படி நடந்திருக்க வேண்டும் என்று விவரித்துப் போவது திரு.என்.சொக்கனின் எழுத்துத் திறனுக்குச் சான்று.

அக்பர் பதினான்கு வயதில் ராஜாவாகி விட்டார். ஆனால் அவருடைய மகன் சலீமுக்கு முப்பது வயது தாண்டியும் அந்த யோகம் இல்லை. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா…? இன்னும் கொஞ்ச நாளில் அரசருக்குப்பின் அந்தப் பதவி மூத்த மகன் சலீமுக்குத்தானே வரப் போகிறது? அதுசரி… அரசர்தான் நாளுக்கு நாள் மேலும் சுறுசுறுப்பாக மாறிக் கொண்டிருக்கிறாரே, அவருடைய கம்பீரத்தைப் பார்த்தால் இன்னும் பல வருஷங்கள் ஆட்சி செய்வார் போலிருக்கிறதே… இந்த வயதிலும் ஆரோக்கியம், உற்சாகத்தோடு வாழ்கிற அப்பாவைப் பார்த்து சந்தோஷப்பட சலீமுக்குத் தெரியவில்லை. ‘இவர் எப்போ தலையைச் சாய்க்கறது, நான் எப்போ ராஜாவாகறது’ என்று நேரடியாகவே புலம்ப ஆரம்பித்து விட்டார். -இப்படி அக்பரையும் சலீமையும் பற்றி வருகிற வரிகளைப் படிக்கையில் என் உதடுகள் ஏன் புன்னகைத்தன என்பதுதான் இப்போதுவரை எனக்குத் தெரியவில்லை.

அக்பருக்கு ருகையா பேகம் என்ற பெண்ணுடன் முதல் திருமணம் நடந்தபோது அவருக்கு வயது பதினைந்து. அதன்பின் அரசியல் காரணங்களுக்காக முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களை அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தது – இந்த வரிகளுடன் அக்பரின் அந்தரங்க வாழ்க்கையை நிறுத்திக் கொண்டு விட்டார் நூலாசிரியர் என்.சொக்கன். அந்த மனைவியருடன் அக்பரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது..? எப்படி முப்பது மனைவிகளை அக்பர் சமாளித்தார்…? அதாவது… அரசியலில் மூக்கை நுழைத்து தொந்தரவு கொடுத்த மனைவியர் உண்டா…? இவை போன்ற விஷயங்களை அலசாமல் விட்டது இந்நூலின் ஒரு சிறிய குறைபாடு.

வாழ்நாளில் பெரும்பகுதியை போர்கள் நடத்தி, சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் செலவிட்டவர் அக்பர். ஆனாலும் நிறையப் புத்தகங்களைச் சேகரித்து ஒரு சிறப்பான நூலகம் வைத்திருந்தார். அறிஞர்கள் கூடிப் பேசுவதற்காக/விவாதிப்பதற்காக ‘இபதத் கானா’என்ற விவாத மண்டபத்தைக் கட்டினார் அக்பர். தானும் நிறையச் சமயங்களில் விவாதங்களில் கலந்து கொண்டார். பல சமயங்களில் இரவு முடிந்து மறுதினம் விடியும் வரைகூட விவாதங்கள் நடப்பதுண்டு. பீர்பாலுடன் உலக விஷயங்கள் அனைத்தையும் விவாதிப்பார் அக்பர். இத்தனையிலும் ஹைலைட்டான விஷயம்…. அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

இன்னும் அக்பர் என்கிற பேரரசரின் வாழ்க்கையில் பலப்பல ஆச்சரியங்கள் புதைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் நான் இங்கேயே படித்து பாராட்டிச் சொல்லிவிட்டால் நீங்கள் புத்தகம் வாங்கிப் படிக்கையில் படிக்கும் வேகம் குறைந்து சுவாரயஸ்யம் குறைய வாய்ப்பு உண்டு. அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். அக்பரின் சரிதத்தை ஒரு கதை போன்ற சுவாரஸ்யத்துடன் நமக்குத் தருவதற்காக முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலாசிரியர் என்.சொக்கன் படித்ததாக பின்னிணைப்பு தெரிவிக்கிறது. அந்த சிரத்தைக்கும், சுவாரஸ்யமாகப் பக்கங்களைப் புரட்டச் செய்த சரளமான எழுத்து நடைக்கும் சொக்கனுடன் ஒரு பொக்கேயுடன் கூடிய கைகுலுக்கல்!

– பால்சுப்ரமணியன் கணேஷ்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-781-7.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: