Home » Religion » ராமானுஜர்

ராமானுஜர்

தமிழகத்தில் வைஷ்ணவம் தழைத்தோங்கக் காரணமாயிருந்த பன்னிரு ஆழ்வார்களின் அறிமுகத்தோடு ஆரம்பமாகிறது ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய இந்தப் புத்தகம். தமிழகத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி அவர்கள்தான் இந்தப் புத்தகத்தின் நூலாசிரியர் என்பது இந்தப் புத்தகத்தை மேலும் ஊன்றிப் படிப்பதற்கான ஆர்வத்தை நம்முள் விதைக்கிறது.

Ramanujar_b

பல்வேறு திவ்யதேசங்களுக்கு பயணித்த ஆழ்வார்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இறைவனைப் புகழ்ந்து பல பாசுரங்களைப் பாடியிருக்கின்றனர். காலத்தால் அழிந்துவிடக்கூடாத அந்தப் பாடல்களை நாலாயிர திவ்யபிரபந்தமாகத் தொகுத்தவர் நாதமுனி. நாதமுனியின் பேரன் ஆளவந்தார், நாதமுனிக்குப் பிறகு விசிஷ்டாத்வைதம் தமிழகத்தில் தளர்ச்சி அடையாமல் இருப்பதற்கான சீரிய முயற்சிகளை மேற்கொண்டவர். தன்னுடைய சீடர்களின் மூலம் ராமானுஜரைப் பற்றி அறிந்து, தனக்குப்பின் பக்தி இயக்கத்தை வழிநடத்துவதற்காக ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக ஏற்றுக் கொண்டவர் ஆளவந்தார் என்பன போன்ற தெளிவான முன் விவரணைகளைக் கொடுத்துவிட்டே ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நமக்கு விவரிக்க ஆரம்பிக்கிறார் நூலாசிரியர்.

கிபி 1017ம் வருடம் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் இயல்பிலேயே கூரிய சிந்தனையும் சிறந்த ஞானமும் பெற்றவர். ராமனுஜரின் ஆரம்பக் கல்வி அவர் தந்தையின் மூலம் துவங்கியது என்ற போதிலும் மேற்கொண்டு படிப்பதற்காக காஞ்சியைச் சேர்ந்த யாதவ பிரகாசர் என்பவரைத் தன் குருவாக ஏற்றுக்கொள்கிறார். யாதவப் பிரகாசர் அத்வைதத்தில் நம்பிக்கைக் கொண்டவர். இதனால் பல சமயங்களில் ராமானுஜர் தன் குருவான யாதவரின் கருத்துக்களுடன் வேறுபடத் தொடங்கினார். இதன் காரணமாய் யாதவரின் மனதில் மூண்ட வெறுப்பானது அவரைக் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டுகிறது. வடநாட்டிற்கு யாத்திரை செல்லும் இடத்தில் அவரைக் கொள்வது என முடிவு செய்கின்றனர் யாதவரும் அவருடைய முக்கிய சிஷ்யர்களும். யாதவரின் இந்த சதித் திட்டத்தை அறிந்துகொண்ட ராமானுஜர் அதிலிருந்து தப்பிக்கிறார். என்னதான் தன் குருஸ்தானத்தில் இருக்கும் ஒருவரே தன்னைக் கொலை செய்ய முயன்றபோதிலும் அவரது செயலை மறந்து மீண்டும் அவரிடமே கல்விகற்கச் செல்லும் உயர்ந்த மனபான்மை உடையவராக இருந்துள்ளார் ராமானுஜர். ராமனுஜரின் முதல் குருவான யாதவரைப் பற்றிக் குறிப்பிடும் இந்த இடத்தில் அத்வைதம் என்றால் என்ன என்பதையும் சிறிது விளக்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

விசிஷ்டாத்வைதம் பக்தி மார்கத்தின் தலைவரான ஆளவந்தார் தன்னுடைய பிரதம சீடர்களில் ஒருவரான பெரிய திருமலை நம்பியிடம் கூறி ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருமாறு கூறுகிறார். அவ்வாறே திருமலை தம்பியும் ராமானுஜரைச் சந்திக்கச் செல்கிறார். இயல்பிலேயே கம்பீரமான தோற்றமும் கூர்மையான தோற்றமும் கொண்டவரான ராமானுஜரைப் பார்த்ததுமே திருமலை நம்பி புரிந்து கொள்கிறார் ஆளவந்தாருக்குப் பின் பக்தி மார்க்கத்தை வழி நடத்த மிகச் சரியான ஆள் ராமானுஜர்தான் என்று. ஆளவந்தார் ராமானுஜரை சந்திக்கும் முன்பே இறைவனடி சேர்ந்து விட்ட போதிலும் அவரின் நிறைவேறாத மூன்று ஆசைகளை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என்ற சங்கல்பத்தை எடுக்கிறார் ராமானுஜர். அதில் முக்கியமான ஒன்று வியாச சூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத சூத்திரம் எழுத வேண்டும் என்பது.

இதன்பின் படிப்படியாக ராமானுஜரின் புகழ் தமிழகமெங்கும் பரவத் தொடங்குகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் பலரும் ராமானுஜரை தமது குருவாக எற்றுக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் ராமானுஜர் தன் மனைவி தஞ்சம்மாவுடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் அவரைப் பிரிந்து முழுபிரம்மச்சரியத்தினுள் நுழைகிறார். தஞ்சம்மாள் ராமானுஜரைப் பிரிவதற்கு மிக முக்கிய காரணம் ராமனுஜரின் பக்தி மார்க்க ஈடுபாடு அவருக்குப் பிடிக்காமல் போவதே. அதன்பின் திருமலை பெரியநம்பி, கூரேசர், கோவிந்தன், உறங்காவல்லி ஆகியோரின் உதவியுடன் பக்தி மார்க்கத்தை பரப்பும் பொருட்டு பல்வேறு யாத்திரைகளை மேற்கொள்கிறார். மேலும் தன் குரு ஆளவந்தாரின் விருப்பபடி வெற்றிகரமாக ஸ்ரீபாஸ்யம் எழுதி முடிக்கிறார் ராமானுஜர். அவர் ஸ்ரீபாஸ்யம் எழுதுவதற்கு தன்னாலான பல உதவிகளைச் செய்தவர் கூரேசர். பெருகி வரும் ராமானுஜரின் புகழை சகித்துக் கொள்ள முடியாமல் அவ்வபோது அவர் மீது கொலை முயற்சியும் நடக்கிறது ஒவ்வொன்றில் இருந்தும் அவர் தப்பித்தபடியே இருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக விசிஷ்டாத்வைதத்தின் புகழ் வளருவதைப் பொறுக்க முடியாத சோழ மன்னன் முதல் குலோத்துங்கன் மூலமும் ராமானுஜருக்கு பல்வேறு இன்னல்கள் நேருகிறது. அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஸ்ரீரங்கத்தை விட்டு புலம் பெயர்ந்து மைசூர் செல்கிறார், மைசூரின் தொண்டனூரில் ஹரிஜன மக்கள் ஆலயப் பிரவேசத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பை அடக்கி அவர்களுக்கு உதவிபுரிகிறார். இதன்மூலம் இப்போதைய பகுத்தறிவு இயக்கங்களுக்கு முன்பாகவே ராமானுஜர் தன்னுடைய காலத்திலேயே பக்திச் சீர்திருத்தத்தை ஆரம்பித்தவர் என்பது புலனாகிறது.

‘தீண்டாமையை கொள்கை அளவில் எதிர்த்தார் ராமானுஜர். அவர் திருவரங்கத்தில் செய்ய முடியாத சீர்திருத்தமாகிய ஹரிஜன ஆள பிரவேசத்தை மைசூரில் செயலாக்கிய திருப்தி அவருகேற்பட்டது. ஹரிஜனங்களுக்கு அவர் வைத்த பெயர் திருக்குலத்தார்’ என்று குறிப்பிடுகிறார் இந்திரா பார்த்தசாரதி. மேலும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம அந்தஸ்து அளித்து அவர்களையும் சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்ட முதல் சமயத் தலைவர் ராமானுஜர். வைஷ்ணவம் திருமகளையும் திருமாலுடன் இணைத்துப் பூஜிக்கின்றது. இப்பெண்கள் தத்துவ விவாதங்களில் பங்கு கொண்டனரும் என்பதையும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். ஆனாலும் மைசூரில் செய்த சீர்திருத்தத்தை ஸ்ரீரங்கத்தில் செய்யவே முடியாமல் போனதன் மனக்குறை ராமானுஜருக்கு இருந்துகொண்டே இருந்திருக்கிறது.

தன் பிரதம சீடர்கள் ஒவ்வொருவராக தம் பூத உடலை விடுத்து பரந்தாமனைச் சென்று சேர, தான் இப்புவியில் அவதரித்ததன் நோக்கம் முடிவுக்கு வர இருப்பதை உணர்ந்து கொள்கிறார் ராமானுஜர். மேலும் தனக்குப் பின் பக்தி இயக்கத்தை வளர்பதற்காக கூரேசரின் இரு புதல்வர்களில் ஒருவராகிய பட்டரைத் தேர்ந்தெடுத்து அவரை பீடத்தில் அமர்த்துகிறார் ராமானுஜர். தன்னுடைய நூற்றி இருபதாவது வயதில் இப்புவியில் அவதரித்ததன் நோக்கத்தை முடித்துக் கொள்கிறார். ராமானுஜரின் பூதவுடல் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு ஈமக்காரியங்கள் நடந்தேறுகின்றன. மேலும் கோயிலுக்குள் அடக்கம் செய்யப்பட்ட ஒரே சநாதன மதத் தலைவர் ராமானுஜர் தாம் என்பதையும் கூறுகிறார் ஆசிரியர். ராமனுஜரின் திருவுருவம் திருப்பதி, காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ராமனுஜரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் தொகுப்பாக விளங்கும் இந்தப்புத்தகம், நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் தெளிவான நடையில் ராமனுஜரின் வாழ்க்கைப் பாதையில் நம்மையும் அழைத்துச் செல்கிறது. தேவையான இடங்களில் ரத்தினச் சுருக்கமாகவும், சில இடங்களில் விரிவாகவும் தனது பார்வையை பதிவு செய்திருக்கும் ஆசிரியர் இப்புத்தகம் எழுதுவதற்காக பல புத்தகங்களைப் படித்து குறிப்புக்கள் எடுத்திருப்பது தெரிகிறது. வெறுமனே ராமனுஜரின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் கூறாமல் அவரோடு பயணம் செய்த சிஷ்யர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மேலும் சிறப்பு. ராமானுஜருக்கு முன்பிருந்த சமயத் தலைவர்கள் கற்பதை மட்டும் வலியுறுத்தினார்கள். ராமானுஜர் கற்பதும் அதற்குத் தக நிற்பதும் மிக அவசியமென்று நிலைநாட்டியவர். அப்படிப்பட்ட ராமானுஜரை, விசிஷ்டாத்வைதம் பக்திமார்க்கம் செழித்தோங்க முதன்மைக் காரணமாயிருந்த ராமனுஜரைப் பற்றி அறிந்துகொள்ள நிச்சயம் இது ஒரு சிறந்த புத்தகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

– சீனு

நூல் – ராமானுஜர், ஆசிரியர் – இந்திரா பார்த்தசாரதி, பதிப்பாண்டு – 2007, பிரசுரம் -வரம், பக்கங்கள் – 104, விலை – Rs. 50


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: