Home » Cinema » இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித்தரப்படும்

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித்தரப்படும்

முதலில், இந்த முயற்சிக்கு மதிப்புரை தளத்திற்கு பாராட்டுகளும் தொப்பி தூக்கலும். புத்தக விமர்சனத்திற்குப் பதிவு செய்துகொண்ட மூன்றாம் நாளே, ஜெ கைது களேபரங்களையும் மீறி சென்னையிலிருந்து பெங்களூருவுக்குக் கொணர்ந்து சேர்த்து விட்டிருந்தனர். பத்து நாட்களுக்குள்ளாக விமர்சனம் அனுப்ப வேண்டுமென்பதால் இருந்த மத்த புத்தகங்களை வரிசையில் தள்ளி வைத்துவிட்டு எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

thirakkathai01

பி.ஆர் மகாதேவன் வலைத்தளம் ஏதேனும் வைத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், அவரது மொழிநடை வலைத்தளங்களில் எழுதுபவர்களை ஒத்திருந்தது. ஒரே மூச்சில், படித்து முடித்து விடலாம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த சில தமிழ்ப்பட விமர்சனங்களின் தொகுப்பு. முதலில், புத்தகத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை அலசி விடலாம். புத்தகத்தின் பெரிய கூட்டல் குறி (ப்ளஸ்ஸுங்க), மகாதேவனின் மொழி நடை.  டீக்கடையில் அமர்ந்து ஒருவரிடம் நாம் “என்னங்க… இத இப்படி எடுத்திருக்காங்க… இப்படி எடுத்திருக்காலாமே” என்று பேசுவோம் இல்லையா? அதே தொனி.

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட அல்லது கொண்டாடப்படுவதாக ஊடகங்களில் காட்டப்பட்ட அல்லது அறிவை மட்டும் செமித்து வாழும் தமிழ் சமூக நுண் உயிரிகள் எனத் தங்களைக் கருதிக்கொண்டிருப்பவர்கள் நல்ல படம் என சர்ட்டிபிகேட் கொடுத்த படங்களை எடுத்து அதிலுள்ள லாஜிக்கல் ஓட்டைகளில் டார்ச் அடித்துக்காட்டுகிறார். ஏழாம் அறிவில் வில்லன் பாத்திர, ஜீன் தூண்டி விடுதலில் உள்ள, எளிய பார்வையாளன் கூட கண்டுபிடிக்கும் அபத்தத்தில் தொடங்கி Subtle ஆன இடங்களையும், நுண்ணிய இடங்களையும் கூட அவதானித்து எழுதுகிறார்.

நந்தலாலாவில் அகிலேஷ் பெரிய மனிதர் போல் பேசுவதாய் சொல்லியிருக்கும் இடம் ஓர் உதாரணம். தமிழ் சினிமாவில், உதவி இயக்குனராக மகாதேவன் இருப்பதாய் அறிந்தேன். எந்த ஒரு துறையிலும் உள்ளிருந்து சீக்கியடிப்பவர்கள் (அட Whistle-blowersஅ மொழிபெயர்த்தேங்க. நம்மாளுங்க இப்படி எல்லாம் தமிழ்ல எழுதினாத்தான தமிழுணர்வு இருக்குன்னு நம்புறாங்க. பொ.ஆக்கு வேண்டுமானல், ஆங்காங்கே இதுவரை வந்த வரப்போகும் ஆங்கில் வார்த்தைகளைத் தமிழ்படுத்திக்கொள்ளலாம்) மிக முக்கியமானவர்கள். தாங்கள் செயல்படும், சார்ந்து வாழும் துறையின் ஜாம்பவான்களாக கருதப்படுபவர்களை விமர்சிக்க தில்லும், விடயமும் சுய-நலம், கேரிகயர் கருதி ஒத்து ஊதாமல் இருக்கும் மனசும் வேண்டும், அதையெல்லாம் தாண்டி கலையின் மீதான அபரிமிதமான காதல் இருக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர், அலுவலகத்தில் ஏதோ ஒரு வேலை நம் மனசாட்சிக்கு புறம்பாக நடந்தாலோ அல்லது பிடிக்காமல் நடந்தாலோ, அதற்காக, நாம் பாதிக்கப்படாத வரை பதாகையோ கத்தியோ தூக்குவோம்? குறைந்தபட்சம் ஒரு நாக்கு சுழற்றலாவது?

புத்தக முன்னுரையில் இப்படிச் சொல்கிறார் மகாதேவன், “இந்த புத்தகம் இரண்டு வகையினருக்கானது. ஒன்று, தமிழ்த்திரையுலகம் பிரமாதமாக ஒளிவீசிக்கொண்டிப்பதாய் நம்பும்/நடிக்கும் மேதாவிகளுக்கு. இன்னொரு வகை, ஏனைய திரையுலகங்கள் குறித்தோ, இக்கலை குறித்தோ அறியாத, தான் பார்த்ததுதான் சிறந்தது என நம்பும் அப்பாவிகள்”. இந்தப் புத்தகம் தோற்ற முதல் இடம் இதுதான். ஒரு புத்தகம் எப்போதுமே தனக்கான வாசகனை தானே தேடிக்கொள்ளும் என்பார்கள். அதன் உள்ளார்ந்த அர்த்தம், புத்தகம் எல்லாருக்கும் புரிய வேண்டும் என்றோ, எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்றோ எழுதப்படக்கூடாது என்பதுதான். இங்கே எளிய/கடை நிலை வாசகர்களுக்கான புத்தகமாய்த்தான் இதை என்னால் முன்னிறுத்த முடிகிறது. அதனாலேயே ஆசிரியர் நிறைய நல்ல உலகப்பட உதாரணங்களை காட்டாமல் விட்டு விட்டாரோ என்ற வருத்தம் தோன்றுகிறது. டீக்கடை போன்ற ஸ்லாங் ஆசிரியரின் பலம் என முன்பு சொல்லியிருந்தேன். ஆனால், உள்ளடக்கமும் டீக்கடை பேச்சைப் போல இருந்தால், அதில் புத்தகம் படிப்பவருக்கு என்ன பயன்? தமிழ் சமூகத்தில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. அவர்கள் எல்லோரும் ஓரளவாவது உலக திரைப்படங்களை, இலக்கிய, வாசக உலகை அறிந்திருப்பார்கள் என்பது எனது துணிபு. இதை, ஆசிரியர் அவதானித்திருக்கலாம். ஒரு இடத்தில் ’எங்கேயும் எப்போதும்’ படத்தை விமர்சிக்கையில், “வளர்ந்து விட்ட தமிழ் மக்களுக்கு மருந்தை இனிப்பு கலந்து கொடுக்க வேண்டுமா” எனக்கேட்டிருப்பார். அதையேதான் ஆசிரியரிடமும் கேட்க வேண்டி இருக்கிறது. இவ்வளவு எளிமை மொழியில் சரி, கண்டெண்டில் ஏன் ஐயா?

இந்தத் தவறு வேறு சில தவறுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. பெரும்பாலும், விமர்சிக்கும்போது அதில் என்ன தர்க்க ரீதியான தவறு உண்டு என சுட்டிக்காட்டி விட்டு, தான் எப்படி எடுப்பேன் எனச் சொல்கிறாரே ஒழிய, அதில் உள்ள நஞ்சை, தவறான சமூகப்பார்வையை விட்டுவிடுகிறார். உண்மையில், இந்த புத்தகத்தின் வாயிலாக, “நாம் எப்படி தமிழ் சினிமாவை கெடுக்கிறோம், அது எப்படி நம்மை கெடுக்கிறது” என சொல்லியிருக்க வேண்டும். உதாரணமாக, ’நான் கடவு’ளில் தர்க்கத்தை விளாசும் மகாதேவன், படத்தின் இறுதிக்காட்சியில் “மெர்சி கில்லிங்” போல அகோரி முக்தி கொடுப்பது சரியா, தவறா எனப் பேச வேண்டாமா? அவர் பார்வை இதில் என்ன? அதேபோல, ’ஏழாம் அறிவு’ படத்தில் , போதி தர்மரின் சரித்திரத்தைக் கெடுத்தது, மற்ற லாஜிக்குகள் குறித்தெல்லாம் பேசுகிறார். ஆனால், ஒரு பிம்பத்தை வைத்து, ஒரு படைத்தை ப்ரமோட் செய்வதன் மூலம், நாமெல்லாம் எப்படி பிம்பங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என சொல்ல வாய்ப்பு இருந்ததே? யோசித்துப் பாருங்கள், பெயர், உருவம் என பிம்பத்துக்கு அடித்துக்கொள்ளும் சமூகம்தானே நம்முடையது. இப்போது, ஜெ கைதின் பின்னான கூத்துகள் அறிவுடைய சமூகத்தில், அறிவார்ந்த அரசியலில் நடக்குமா?

அடுத்த பிழை, மீள் உருவாக்கம் செய்வதாய் சொல்லி, மகாதவேன் முன்வைக்கும் அல்டர்னேட் கதைகளில் சில இடங்களைத்தவிர மற்ற இடங்களில் எல்லாம் வெறும் ‘நல்லதை காட்டும்’ ஆர்வம் மட்டுமே வழிகிறது. திரைக்கதை குறித்த அடிப்படைகள் பயின்றவர்கள் எல்லோருக்குமே இது புரியும். உதாரணமாக, ’எங்கேயும் எப்போது’மிற்கு மகாதேவன் சொல்லும் அல்ட்டர்ணேட் கதையில், இரண்டு காதல்களையும் முதல் பாதியில் காட்டுவேன் என்கிறார். அதோடு பஸ்சில் பயணிப்பவர்களின் கதைகள். துபாயில் கஷ்டப்படுபவர் கதைக்குப் பத்து நிமிஷமாம். இவரே, வேறு ஒரு இடத்தில் சொன்ன உதாரணத்தை (ஜுராசிக் பார்க்கில் டைனோசரின் பிரமாண்ட்த்தை தண்ணீர் அதிரும் ஒரே ஷாட்டில் காட்டியிருப்பார் ஸ்பீல்பெர்க்) இவரிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. டைசோனரின் பிறப்பு, வளர்ச்சியை பத்து நிமிடம் காட்டவேண்டும் என்பீர்கள் போலயே? இதில் இவர் சொன்ன உருப்படியான விஷயம், பேருந்து விபத்துக்கு காரணமானவர்களை அப்படியே காட்ட வேண்டும் என்பதுதான். மற்றபடி 50 சதவீத காதல், 50 சதவீதம் விபத்து (இடைவேளைக்கு பின்பு வெறும் விபத்து, அது குறித்த மீட்பு, அங்கு நடக்கும் திருட்டு, உதவ வரும் நறிக்குறவர்கள், அவர்களை அவமானப்படுத்தும் கிராமத்து மக்கள்) என்பது எடுபடாது என்பது என் எண்ணம். என் வரையில் ’எங்கேயும் எப்போதும்’ காதல் படம்தான். மெசேஜ் எக்ஸ்ட்ரா, மளிகைக்கடை கருவேப்பிலை. அதே போல, ஒரு பெண்ணிடம் போன் இருக்காதா போன்ற லாஜிக்குகள் சரி. ஆனால், இன்ஜினியரிங்க் படித்த பெண் இவ்வளவு பேக்கா இருப்பாளா என்றிருக்கிறார். ஊர்ப்பக்கம், அரசியல் யாவாரிகளின் சாதி இன்ஜினியரிங்க்கில் படிக்கும் பெண்களிடம் கொஞ்சம் பேசிப்பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஒரு நாள் ஊர் சுற்றினால் காதல் வருமா என கேட்டு விட்டு, தன் கதையில், “பார்த்து சிரித்து விட்டு போனாள், காதல் பற்றிக்கொண்டது என எழுதியிருக்கிறார்.

இதே போல, மகாதேவன் முன்வைக்கும் கதைகளில் பட இடங்களில் திரைக்கதைக்கான ப்ளோ இல்லாமல் இருக்கிறது. சொல்ல நிறைய இருப்பதால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்ல முடியுமா என்ன? ஒரு திரைக்கதையின் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். லீனியரோ, நான் லீனியரோ, ஓர் ஆளின் அல்லது ஆட்களின் அல்லது ஒரு சமூகத்தின் Outcome or behavioral change through a sequence of events that comprises of obstacles faced and methods followed தான் திரைக்கதை. மகாதேவன் ஆசைப்படுவது போல பல விடயங்களை ஒரே நேரத்தில் மாற்றி மாற்றிக் காட்டினால் படத்தில் பார்வையாளனால் ஒன்ற முடியாது. இவற்றைத் தாண்டி புத்தகத்தில், சில நல்ல கேட்ச்சுகள் இருக்கின்றன. ’ஆடுகளம்’ அயூப் பற்றின இடம் ஒரு சோறு.

முக்கியமான ஒரு விடயம். ’ஏழாம் அறிவு’ விமர்சனத்தில், தனது கதையில், உயிர் கொல்லுதல் பாவம் என போதி தர்மர் கூறுவார் என சொல்லிவிட்டு, அடுத்த வரியில் “கணவனைத் தவிர பிற ஆண்கள் மனத்தில் காம எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் பெண்கள் நடந்து கொள்வதும், “உடை அலங்காரம்” செய்து கொள்வதும் வேசைத்தனமே என்று சொல்லுவார்” என்று எழுதி உள்ளார். எனக்கு அது சுமாரான புத்தகம் என தோன்றிக்கொண்டிருந்தது. இதைக் கண்டவுடன், விட்டையை எடுத்து சுமாரான அந்த சோற்றினுள் சொத்தனென வைத்தாற் போல் இருந்தது. நான் இந்தப் புத்தகத்தை நிராகரிக்க இந்த ஒரு காரணம் போதுமென்றாலும், அதைத்தவிர வேறு ஏதேனும் “மலக் கருத்துகள்” இல்லையென்பதால், படிக்கலாம். இதை படித்தவுடன், விமர்சனம் எழுதாமல் விட்டுவிடலாமா என யோசித்தேன். வாக்கு கொடுத்து (அக்ரீட் டூ டேர்ம்ஸ் கிள்க் பண்ணேன்ப்பா) புத்தகம் வாங்கியாச்சுன்னு தர்ம சங்கடத்தோட எழுதினேன்.

பெண்கள் குறித்த கருத்துக்கு ஆசியருக்கு என் கண்டணங்கள். உங்கள் பாணியில் சொன்னால், “மக்கள் எல்லாம் முட்டாளுங்க. நானும் கருத்து சொல்றேன்னு ஒளறாதீங்க சார்”.

மற்றபடி, ஒரு ஆர்வம் மிக்க இடை நிலை படைப்பாளியின் தார்மீகக் கோபம்தான் புத்தகம். படிக்கலாம். பொக்கிஷமல்ல.

– கூத்தாடி

புத்தகம்- இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்
ஆசிரியர் – பி.ஆர்.மகாதேவன்
பதிப்பு – நிழல் வெளியீடு
பதிப்பாண்டு – டிசம்பர் 2011
பக்கங்கள் – 160
விலை – Rs. 120
ஃபோன் மூலம் ஆர்டர் செய்ய – டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: