Home » Poetry » தமிழ்க் கீதாஞ்சலி

தமிழ்க் கீதாஞ்சலி

book-cover-design-small

தாகூரின் சிறுகதைகள், நாடகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அவரது தொகுப்பு நூல் ஒன்றில் இவற்றை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அனைத்தையும் தேடித் தேடி வாங்கிப் படித்தேன்.

அப்போதே தாகூரின் கவிதைகளையும் வாசிக்கும் ஆர்வம் வந்தது. ஆனால், தினசரிப் பேச்சுக்குத் தேவைப்படும் அளவுமட்டுமே ஆங்கிலம் அறிந்திருந்த என்னால் அதனுள் நுழைய இயலவில்லை. சோம்பேறித்தனம் காரணமாக ’நோபல் பரிசு பெற்ற இலக்கியம், நமக்கெல்லாம் புரியுமா என்ன?’ என்று வெளியே வந்துவிட்டேன்.

ஆகவே, சி. ஜெயபாரதன் மொழிபெயர்த்துள்ள ‘கீதாஞ்சலி’ நூலை மிகவும் ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். இந்தத் தலைப்பில் தாகூர் எழுதிய அனைத்துக் கவிதைகளின் முழுமையான மொழிபெயர்ப்பாக இது அமைந்துள்ளது. தாரிணி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. (144 பக்கங்கள், விலை ரூ 125)

என்னுடைய ஆர்வத்தை இந்தப் புத்தகம் பூர்த்தி செய்ததா என்றால், கொஞ்சம் யோசித்துவிட்டு ‘இல்லை’ என்றே சொல்வேன். ஆங்கிலத்தில் கீதாஞ்சலியை வாசித்தபோது எனக்கிருந்த குறைபாடுகளால் (மொழிவளம், சொல்வளம், நடைபற்றிய புரிதலின்மை) என்னால் அதனை உணர்ந்துகொள்ள இயலவில்லை. இப்போது இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் முதலிரண்டு பிரச்னைகளும் இல்லை என்றாலும், மூன்றாவது பிரச்னை வேறுவிதமாகிவிட்டது. சி. ஜெயபாரதன் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்துள்ள நடை வசீகரமாக உள்ளது, ஆனால் வாசிக்கத் தூண்டும்படி இல்லை.

வாசிக்கத் தூண்டுவது என்றால், படைப்பு மலினப்படுத்தப்படவேண்டும் என்று அர்த்தம் இல்லை. தாகூரைப்பற்றிய மிகப் பெரிய பாராட்டுகளுடன் தொடங்கும் இந்த நூல், மூலத்தின் அழகை அப்படியே கொண்டுவந்திருக்கிறதா என்று என்னால் சொல்ல இயலாது, ஆனால் மொழிபெயர்ப்பு அவரைப்பற்றிய ஒரு பிரமிப்பையோ மதிப்பையோ உண்டாக்கவில்லை. சொல்லப்போனால் பெரும்பான்மை தமிழ் வாசகர்களுக்கு இதனுள் நுழைவதே சிரமமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

தமிழில் கவிதைத் தொகுப்புகளுக்குக் குறைச்சலே இல்லை. மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீன கவிதை, வசன கவிதை என்று எத்தனையோ வகைகளில் நூல்கள் நாளுக்கு நாள் எழுதப்படுகின்றன. அவற்றினிடையே தாகூரைக் கொண்டு சேர்க்க ஏற்ற மொழி என்னவாக இருக்கும்?

இந்நூலின் முன்னுரையில் மதுமிதா ஒரு விஷயம் சொல்கிறார். தன்னுடைய கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இன்னொருவரிடம் தரத் தாகூர் நினைத்ததாகவும், பின்னர் ‘எவ்வளவுதான் நம்பிக்கைக்குப் பாத்திரமான பணியாள் ஆனாலும், காதலியின் முத்தத்தை வாங்கி வரச் சொல்ல இயலாது’ என்று அவரே மொழிபெயர்த்ததாகவும்.

என்ன அழகான உவமை! ஆனால், தாகூருக்குத் தமிழ் தெரியாது என்பதால், இங்கே இன்னொருவர் மொழிபெயர்ப்பதைத் தவிர்க்க இயலாது. அதுபற்றிக் கவிஞர் புகாரி தன் முன்னுரையில் சொல்வது, ‘அழகான, அச்சு மாறாத இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்ற இன்னொரு தாயைப்போல்…’

முத்தத்தை வாங்கிவரும் பணியாளைப்போலவே, ஒரேமாதிரியான இரட்டைக் குழந்தைகளை இரண்டு தாய்கள் பெறுவதும் வியப்பான விஷயம்தான். அப்படி ஓர் அதிசயம் நடந்தால்தான் ஒரு மொழியில் சிறப்பான நயத்துடன் அமைந்த படைப்பு இன்னொரு மொழியிலும் அதற்குரிய நயத்துடன் அமைந்து புகழ் பெறும்.

ஜெயபாரதனின் முன்னுரையில் முதல் வரி, ‘பாரத நாட்டில் இராமாயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப்பிறகு ஆயிரக்கணக்கான பாக்களை எழுதியவர் இதுவரை தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு’

நம் ஊரில் கண்ணெதிரே பத்தாயிரத்துச் சொச்ச பாடல்களோடு கம்பன் இருக்கிறான், வியாசர், வால்மீகியிலிருந்து நாம் ஏன் தாகூருக்குப் போகவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. புகாரி சொன்ன ‘இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்ற இன்னொரு தாய்’ என்ற உவமை கம்பனுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.

ஜெயபாரதனின் முன்னுரையில் இன்னும் சில பகுதிகள்:

* கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் படிக்கும்போது அத்தனை இனிமையாக இல்லை. ஆனால் அந்த வரிகளைத் தமிழில் வடித்து நான் வாசிக்கும்போது, தாகூரின் பளிங்கு உள்ளம் நளினமாக ஒளிர்வது எனக்குத் தெரிந்தது.

* தாகூர் தமிழைக் கற்றுத் தமிழில் கீதாஞ்சலியை எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்று மனதில் நிறுத்தி அவரது உன்னத காவியத்தைத் தமிழாக்க முயன்றேன்.

இவைதவிர, நூலின் மூன்றாம் பக்கத்தில் அவர் பெயர் ‘ஆசிரியர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நூலின் பிற பக்கங்களின் உச்சியில் (Header) ’கீதாஞ்சலி: ஜெயபாரதன்’ என்றே உள்ளது. முன்னுரை எழுதிய பலரும், தாகூரிடமிருந்து அவர் விலகியுள்ள இடங்களைச் சுட்டிக்காட்டி, ‘மெருகேற்றியிருக்கிறார்’ என்கிறார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இது translation மட்டும்தானா? அல்லது தாகூர் பேசிய தலைப்புகளை வைத்துத் தமிழில் எழுதப்பட்ட தனி நூலா என்று சந்தேகமே வருகிறது. நான் பெங்காலி / ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கீதாஞ்சலியைப் படிக்காத காரணத்தால் இதற்குமேல் ஒப்பிடத் தெரியவில்லை.

மூலத்தைப் படிக்காத ஒருவர் மொழிபெயர்ப்பைமட்டும் வாசித்தாலும் அவருக்கு நிறைவு ஏற்படும்படி மொழிபெயர்ப்பு அமைவதே நியாயம் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, உமர் கய்யாம் பாடல்கள் சிலவற்றைக் கவிமணி தமிழில் மொழிபெயர்த்தார். அவை எந்த அளவு சிறந்த மொழிபெயர்ப்புகள், உமர் கய்யாம் கவிதையின் ஆன்மாவைக் காப்பாற்றியவையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவை தமிழில் நல்ல விருத்தப் பாக்களாக அமைந்திருந்தன. அதிலிருந்து எல்லாருக்கும் தெரிந்த ஒரு பாடல் இது:

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
….வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவி உண்டு
….கலசம் நிறைய மது உண்டு
தெய்வ கீதம் பல உண்டு
….தெரிந்து பாட நீ உண்டு
வையம் தரும் இவ் வளம் அன்றி
….வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

இந்தப் பாடலை உமர் கய்யாம் ‘அப்படியே’ எழுதியிருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் என்ன அழகான தமிழ் விருத்தம்! அங்கே கவிமணி வென்றுவிடுகிறார். உமர் கய்யாமைப் படித்தவர்கள் அவரது மொழிபெயர்ப்பைப் புறக்கணித்தாலும், நம் மரபுக்கு ஏற்றவகையில் அதனைக் கொண்டுவந்து தந்தது வெற்றியே.

அந்தவிதத்தில், இந்த மொழிபெயர்ப்பு நல்ல முயற்சி. ஆனால், கீதாஞ்சலியை அதற்குரிய அழகோடு தமிழ் வாசகர்களுக்கு ஏற்றவகையிலும் அறிமுகப்படுத்துவதாக, தாகூரின் மற்ற படைப்புகளை வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

– என். சொக்கன்


1 Comment

 1. நண்பர் திரு. சொக்கன்,

  வெய்யிற் கேற்ற நிழலுண்டு
  ….வீசும் தென்றல் காற்றுண்டு
  கையில் கம்பன் கவி உண்டு
  ….கலசம் நிறைய மது உண்டு
  தெய்வ கீதம் பல உண்டு
  ….தெரிந்து பாட நீ உண்டு
  வையம் தரும் இவ் வளம் அன்றி
  ….வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

  இப்படிக் கவர்ச்சியாகப் யாப்பிலக்கண விருத்தப் பாக்களில் கீதாஞ்சலி வசனத்தைத் தமிழாக்கம் செய்தால், தாகூர் காணாமல் போய்விடுவார்.

  சி. ஜெயபாரதன்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: