Home » History » ராமானுஜர்

ராமானுஜர்

தமிழ்மொழி வல்லுனரும், ‘பாரதீய பாஷாவிருது பெற்றவருமான, தலைசிறந்த எழுத்தாளருமான பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய வைஷ்ணமதாச்சாரியரான ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. இந்திரா பார்த்தசாரதி கற்பனை வளம் செறிந்த நாவலாசிரியரும், நாடகாசிரியரும் என அறிவோம். அவற்றில் அவரது அரசியல், சமுக அறிவும், கற்பனை வளமும் தெளிவாகத் தெரியும். கற்பனையற்ற வாழ்க்கை வரலாற்றையும், இங்கே எளிய நடையில் எழுதியிருக்கிறார்.

ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிக் கூறுமுன், முன்னுரையாக பன்னிரு ஆழ்வார்கள், அவர்கள் இயற்றிய பாசுரங்கள், நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலியவை பற்றிக் கூறியுள்ளர் ஆசிரியர்.

Ramanujar_b

ராமானுஜரின் பிறப்பு, அவரது அறிவுத் திறன், யாதவப்ரகாசர் என்ற அத்வைதியிடல் பாடம் கேட்டு, பிற்காலத்தில் அவரையே தன் சீடராக ஏற்றது, திருக்குலத்தாரை ஆலயப்ரவேசம் செய்ய வைத்தது போன்ற நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளார்.

ராமானுஜரின் வாழ்க்கை பற்றி மட்டுமல்லாமல், அவருக்குப் பின் வந்த வைணவப் பெரியார்கள் பற்றியும், ராமானுஜர் அருளிய கருத்துக்களையும் கடைசி அத்தியாங்களில் விவரமாகக் குறிப்பிடுகிறார்.

ஒருவரது வரலாற்றுச் சம்பவங்கள் மட்டுமின்றி, அவற்றிலிருந்து வெளிப்படும் வரலாற்று நாயகரின் மேன்மைக் குணங்களை எத்தனை வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்? இந்திரா பார்த்தசாரதி எழுதுகிறார். யாதவப்ரகாசர் தன்னைக் கொல்ல முயன்றாலும், அவரிடம் கருணை காட்டி அவரைத் தன் சீடராக ஏற்றதிலிருந்து ராமானுஜரின் பகைவனுக்கருளும் குணத்தை விவரிக்கிறார். திருக்குலத்தாரை ஆலயப்ரவேசம் செய்வித்தது, முகலாய அரசரது மகளின் உருவத்தைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தது ஆகியவற்றிலிருந்து அவரது சாதி, சமய வேறுபாடின்மையைக் குறிப்பிடுகின்றார். நஞ்சைக் கலந்து கொடுத்தாலும், பிச்சை  ஏற்று உண்டது அவரது தன்னடக்கத்தின் வெளிப்பாடு என்கிறார். தனக்கு நரகம் கிட்டினாலும், பிறருக்கு வீடுபேறு கிடைக்கும் என்பதால் திவ்யமந்திர இரகசியத்தை கோவில் கோபுரத்திலிருந்து உரக்கக் கூறிய ராமானுஜர் தனக்கென வாழா, பிறக்குரியவர் என்கிறார் ஆசிரியர். இது போல இன்னும் பலப்பல நிகழ்வுகளும், அவற்றின் விளக்கங்களும் இடம்பெறுகிறது இந்தப் புத்தகத்தில்.

வாழ்க்கை வரலாற்று நூலைப் படிப்போர் அவ்வாழ்க்கைக்குரியவரின் நற்பண்புகளில் சிலவற்றையேனும் பின்பற்ற விரும்புவர். அவ்வகையில் ஆசிரியரும் உடையவரின் மேன்மக் குணங்களை நயம்பட எடுத்துச் சொல்லியிருக்கிறார். காந்தி மகாத்மா உண்மையான வைஷ்ணவர் என்றால், ராமானுஜர் அவரது முன்னோடி என்று நமக்குத் தெளிவாக்குகிறார். இவரது கற்பனை நூல்களில் காணப்படும் சுவாரஸ்யம் இவ்வரலாற்று நூலிலும் காணப்படுகிறது, என்றாலும் ராமானுஜர் தோற்றுவித்த விசிஷ்டாவைதம் என்ற பக்தித் தத்துவத்தை ஆசிரியர் ஓரிடத்திலும் விளக்கவில்லை. ராமானுஜரின் இந்தக் கொள்கையால்தானே அவர் இன்று புகழப்படுகிறார்! அதுபற்றி ராமானுஜரைப் பற்றிப் படிக்கும் வாசகருக்கு சிறிதேனும் தெரிவிக்க முற்பட்டிருக்கலாம். மேலும் மற்ற நூல்களில் காணப்படும் இந்திரா பார்த்தசாரதியின் நடை, ஏனோ இந்த நூலில் வெளிப்படவில்லை என்ற குறை மட்டும் அவ்வப்போது தோன்றுகின்றது.

நூல் ராமானுஜர், ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி, பதிப்பாண்டு – 2007, பிரசுரம் வரம், பக்கங்கள் – 104, விலை – Rs. 50

– விஜயஸ்ரீ சிந்தாமணி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: