Home » History » இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

ரத்தப் பாதையில் நடந்த சிலர் – ஒரு நினைவூட்டம்

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள் என்றால் உடனடியாக நம் கண் முன் வந்து நிற்பவர்கள் காந்தி, நேதாஜி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, பகத்சிங் போன்ற சிலர்தான். இந்திய சுதந்தரத்திற்காக தன் உயிரைத் துச்சமென மதித்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய பலரைப் பற்றிய அறிமுகம் அவ்வளவாக நம்மிடையே இல்லை. இதைக் கருத்தில்கொண்டு முனைவர் ப. சரவணன் அவர்களால் எழுதப்பட்டு, கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம்தான் `இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்.’

978-93-5135-177-1_bஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், முனைவர் ப. சரவணன், கிழக்கு பதிப்பகம்,
விலை ரூ 150, பக்கம்-176

அழகு முத்துக்கோனில் ஆரம்பித்து வ.உ.சி வரை 12 இந்திய விடுதலைப் போராளிகளைப் பற்றி பல புதிய கருத்துக்களையும், அவர்களுடைய வீர, தீர பராக்கிராமங்களையும் ரத்னச் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

ஒரு வர்த்தகக் கம்பெனியாக நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி 1698 ஆம் ஆண்டு* (புத்தகத்தில் 1689 என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது) முதல் பிரிட்டனின் மற்றொரு கிளை அரசாக மாற ஆரம்பித்தது. வங்காளம், பம்பாய், மெட்ராஸ் போன்ற பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. அரசர்களும், பாளையக்காரர்களும் பல கால கட்டங்களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்திருக்கிறார்கள்.

அழகு முத்துக்கோன் தளபதியாக இருக்கிறார் என்கிற தைரியத்தில் ஆங்கிலேயருடன் மோதியவர் எட்டையபுர மன்னர் ஜெகவீரராம எட்டப்பர். தளபதிகளே அரசர்களை வரலாற்றில் நிலை நிறுத்துகின்றனர் என்பதற்கு, பீரங்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகு முத்துக்கோன் ஒரு சிறந்த உதாரணம். பறிபோன எட்டையபுரம் சமஸ்தானத்தை மீண்டும் வென்றெடுக்க அழகு முத்துக்கோன் தன் படையுடன் செல்ல 1759 ஆம் ஆண்டு கான்சாகிப் தனது படையுடன் வந்து அழகு முத்துக்கோனை கைது செய்து, தூக்கிலிடுவதற்குப் பதிலாக அனைவருக்கும் அச்சம் வர வேண்டும் என்கிற நோக்கில் அவரை பீரங்கியால் சுட்டுக் கொன்றார்.

நமக்கு ஜான்சிராணி லட்சுமிபாயைப் பற்றித் தெரியும்; ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வேலுநாச்சியார் என்கிற பெண் சிங்கத்தை எத்தனை பேருக்குத் தெரியும்? சிவகங்கையின் முன்னாள் பெயர் குழுந்தாபுரி. இதை சிவகங்கை ஆக்கிய பெருமை போர் மறவர்களுக்கே உரியது.

வேலுநாச்சியாரைப் பட்டத்து ராணியாக்கிய பெருமை அவருடைய தந்தையின் சகோதரரான வீரத்தேவரையேச் சாரும். வேலு நாச்சியாருக்கு போர்ப் பயிற்சி அளித்ததுடன், வளரி என்கிற ஆயுதத்தைக் கையாளுதல், வாள் வீச்சு, குதிரை ஏற்றம், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளில் மட்டுமல்லாமல் உருது, சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு என பல மொழிகளில் புலமையும் பெற்றிருந்தார்.

சிவகங்கைச் சீமையை ஆங்கிலேயர்கள் நவாபின் உதவியால் தாக்கினார்கள். இதில் வேலு நாச்சியாரின் கணவரான அரசர் முத்து வடுகநாதர் உயிர் துறந்தார். இவரை சிறைப்பிடிக்க முயற்சித்தவர்களிடமிருந்து தப்பி தனது தளபதிகள் மருது பாண்டியர்கள் உதவியுடன் தப்பி விருப்பாச்சியில் பாதுகாப்பான இடமொன்றில் தங்கினார்.

அதன் பின், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆயுதங்களும், பணமும் கொடுத்து உதவ, இறுதிப் போரை நோக்கி பயணித்தார் வேலுநாச்சியார். அவருடைய மெய்க்காப்பாளர் குயிலிதான் முதல் தற்கொலைப்படைப் போராளி. ஆங்கிலேயருடன் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தன் உடலில் எரியும் தீயுடன் `வீர வேல், வெற்றி வேல்’ என்று யுத்தபூமியே அதிரும்படி கத்திக்கொண்டே ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை நோக்கி கீழே குதிக்க அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.

நாச்சியாரின் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. நாச்சியாருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே யார் ஆட்சி புரிவது என பிரச்சனை எழ, ஆங்கிலேயர்கள் அதுதான் `சாக்கு’ என தங்களை மூக்கை நுழைத்து சமாதானம் பேசினர். அதைத் தொடர்ந்து நாச்சியார் இதய நோயாளி ஆகி சிவகங்கையில் இறந்தார்.

இவரைப் போல தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன், ஜான்சி ராணி, சூரப்புலி ஒண்டிவீரன், கட்டபொம்மன், ஹைதர் அலி, திப்பு சுல்தான், சுபாஷ் சந்திர போஸ், வ.உ.சி ஆகிய இணையற்ற வீரர்கள் பற்றிய பதிவையும் கொண்டிருக்கிறது இப்புத்தகம்.

கட்டபொம்மனின் ஆட்சி மக்கள் விரோத அரசாட்சியாகவே இருந்துள்ளது என்பதை 1818 ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியார் எழுதிய திருநெல்வேலியின் அரசியல் என்கிற நூல் விரிவாக விளக்கியுள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

தனது அதிகார எல்லையை விரிவு படுத்துவதிலும், வரியை யார் வசூலிப்பது என்பது குறித்தும் தான் பெரும்பாலன போர்கள் நடந்தேறியிருக்கின்றன.

திப்பு சுல்தான் பெருங்கருணையும், பேராற்றலும் கொண்ட மாவீரராக , சமூக-சமய சீர்திருத்தவாதியாக, பொதுவுடமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டாஷாருக்கு சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக, சிறந்த மன்னராக, நல்ல குடிமகனாக வாழ்ந்த மாமன்னர் திப்பு சுல்தான்.

இங்கிலாந்தில் கி.பி 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு வழிகாட்டுதலே, அவருடைய அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவை என்று ஒரு கருத்து நிலவுவதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிகமாக அறியப்படாத சுதந்தர போராட்ட வீரர்கள் பற்றிய ஒரு அறிமுகமாக இந்தப்புத்தகம் அமைகிறது.

இறுதியில் ஆசிரியர் இந்நூல் எழுதுவதற்கு உபயோகமான புத்தகங்கள், ஆதாரங்கள், இணையத்தள சுட்டிகள் போன்றவற்றைத் தந்திருந்தால் வாசகர்களுக்கு மேற்கொண்டு விபரம் அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும்.

* The East India Company – The world’s most powerful corporation by Tirthankar Roy, published by Allen Lane (Imprint of Penguin Books)

– சித்தார்த்தன் சுந்தரம்

போன் மூலம் புத்தகத்தை வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-177-1.html


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: