Home » Poetry » கீதாஞ்சலி

கீதாஞ்சலி

Rabindranath-Tagoreபள்ளியில் படித்த காலத்தில் ரவிந்திரநாத் தாகூரைப் பற்றி சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கீதாஞ்சலி என்ற பெயரையும் சேர்த்துத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். தாகூரையும் கீதாஞ்சலியையும் பிரிக்க முடியாது. அவ்வளவு புகழடைந்த தொகுப்பு அது. பிற்காலத்தில் வந்த விமர்சகர்கள் கீதாஞ்சலியை தாகூரின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருத முடியாது என்று எழுதினாலும் எந்த விதத்திலும் தவிர்க்கவே முடியாத பாடல்கள் அவை. அந்தத் தொகுப்பு வெளி வந்து நூற்றி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. 1910 ஆம் ஆண்டு வங்காள மொழியில் வந்திருக்கிறது. பிறகு இரண்டு ஆண்டுகளில் தாகூரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிட்டார்.

சமீபத்தில் மதிப்புரை.காம் தளத்தில் மதிப்புரைக்காக சில புத்தகங்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். பதிவு செய்து கொண்டால் விமர்சனத்திற்காக புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள். பட்டியலிலிருந்த புத்தகங்களில் கீதாஞ்சலியும் ஒன்று. கனடாவில் வாழும் தமிழரான சி.ஜெயபாரதன் மொழி பெயர்த்திருக்கிறார். மிகுந்த ஆர்வத்தோடு மதிப்புரை.காம் தளத்தில் பதிவு செய்துவிட்டேன். தாகூரைப்பற்றிய கட்டுரைப் போட்டி ஒன்றிற்காக கல்லூரியில் படித்த சமயத்தில் கீதாஞ்சலியிலிருந்து சில பாடல்களை வாசித்திருக்கிறேன். தற்பொழுது தமிழிலும் கிடைக்கிறது என்றவுடன் உற்சாகமாக இருந்தது.

ஓரிரு நாளில் புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். தாகூர் வங்காளத்தில் எழுதியது 157 பாடல்கள். அவற்றிலிருந்து 103 பாடல்களைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்த ஆங்கிலத் தொகுப்பிற்குத்தான் 1913 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்தது. நூறு வருடங்களுக்கு முன்பாகவே அந்தப் பரிசை வாங்கிய இந்தியன் அவர். அத்தகைய ஆளுமையின் படைப்புகளை மொழி பெயர்க்க ஒரு துணிச்சல் வேண்டும். ஜெயபாரதன் துணிந்து செய்திருக்கிறார். என் அப்பாவுக்கு எட்டு வயதாக இருக்கும் போதே பொறியியல் படிப்பை முடித்தவர் திரு. ஜெயபாரதன். அத்தனை அனுபவம் அவருக்கு. அவரது துணிச்சலுக்கும் இந்த வயதில் செலுத்தியிருக்கும் உழைப்புக்கும் மனப்பூர்வமான வந்தனங்கள்.

ஆனால் மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது என்று தயவு செய்து கேட்க வேண்டாம்.

சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருக்கிற வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றுவது கட்டுரைகளில் வேண்டுமானால் வேலைக்கு ஆகலாம். கவிதையில் எப்படி சாத்தியமாகும்? கவிதைக்கென்று ஒரு உயிர்ப்பு இருக்கிறது அல்லவா? அப்பொழுதுதான் வெட்டியெடுக்கப்பட்ட மாமிசத் துண்டு போல சூடும் துடிப்பும் கவிதையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். ஆனால் கவிதையை வாசித்துவிட்டு அந்த சாராம்சம் துளி கூடச் சிதையாமல் கொடுத்திருக்க வேண்டும். அப்படியான ஒரு நம்பிக்கையில்தான் இந்தத் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே மிகுந்த சங்கடமாகிவிட்டது.

பொதுவாக, விருப்பமில்லாத புத்தகங்களில் தலையைக் கொடுத்துவிட்டால் அப்படியே விட்டுவிடுவதுதான் வாடிக்கை. அதைப் பற்றி எழுதுவம் பேசுவதும் சச்சரவுகளை உருவாக்கும். ஆனால் மதிப்புரை.காம்மின் நிபந்தனைப்படி புத்தகம் வந்து சேர்ந்த இருபது நாட்களுக்குள் மதிப்புரையை அனுப்பி வைத்தாக வேண்டும். உண்மையிலேயே இந்த புத்தகத்திற்கு எப்படி விமர்சனம் எழுதுவது என்று தெரியவில்லை. அவ்வளவு மோசம்.

book-cover-design-small

முதலில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்- இந்த மொழிபெயர்ப்பில் எந்த ரஸமும் இல்லை. இலக்கிய ரஸத்தைச் சொல்லவில்லை. தக்காளி ரஸம் கூட இல்லை. நம்பிக்கை இல்லையென்றால் முதல் கவிதையின் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest
again and again, and fillest it ever with fresh life.

This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through
it melodies eternally new.

மொழிபெயர்ப்பு

அந்திமக் கால மின்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்பதல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!

எதற்காக ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் அவசியமில்லாமல் தொகுப்பு முழுவதுமாக விரவிக் கிடக்கின்றன என்று புரியவில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு நிறுத்தற்குறிகளை பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கவிதையின் வலுவைக் குறைக்கிறோம் என்று பொருள். ‘இந்த இடத்தில் ஆச்சரியக்குறி வந்திருக்கிறது அதனால் நீ ஆச்சரியப்பட வேண்டும்’ என்று கவிஞன் சொல்லித் தரத் தேவையில்லை. எந்த இடத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் எந்த இடத்தில் ஆச்சரியப்பட வேண்டும் என்பது வாசகனுக்கே தெரியும். தாகூருக்கு இது தெரியாதா? அவர் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் மொழிபெயர்ப்பு முழுவதுமாக இவற்றை ஜெயபாரதன் அள்ளி இறைத்திருக்கிறார்.

இந்தப் பாடலிலேயே பாருங்கள். தாகூர் கேள்வி எதுவும் கேட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ‘உவகை அளிப்பதல்லவா அது உனக்கு?’ என்று கேள்வியாக மொழிபெயர்த்திருக்கிறார். தொனியே மாறுகிறது அல்லவா?.

அடுத்ததாக வரி அமைவை கவனியுங்கள். எப்படி பத்தி பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். தாகூரின் பாடலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? மூச்சடைக்கிறது. கவிதையைப் பொறுத்த வரையில் வரி அமைப்பு மிக முக்கியமானது. கவிதையை மனப்பூர்வமாக உணர்ந்து எழுதும் எந்தக் கவிஞனுக்கும் இதன் முக்கியத்துவம் தெரியும். குறிப்பிட்ட சொல்லானது முதல் வரியில் வருமா அல்லது இரண்டாவது வரியில் வருமா என்று குழம்பி முடிவெடுக்க முடியாமல் அந்தக் கவிதையையே கைவிட்ட கவிஞர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில் இந்த மொழிபெயர்ப்பில் மூலத்திற்கும் மொழிபெயர்ப்புக்குமான கொட்டிக்கிடக்கும் வித்தியாசங்கள் ஆயாசமடையச் செய்கின்றன.

இன்னொரு விஷயம்- தலைப்புகள். என்னிடமிருக்கும் ஆங்கில வடிவத்தில் எந்தப் பாடலுக்கும் தலைப்பு இல்லை. பிடிஎஃப்பாக தரவிறக்கம் செய்து பார்த்த போதும் தலைப்புகள் இல்லை. ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பாடலுக்கும் மொழிபெயர்ப்பாளர் தலைப்பை உருவாக்கியிருக்கிறார். இது எந்தவிதத்தில் சரி என்று தெரியவில்லை. தாகூருக்குச் செய்யும் துரோகமில்லையா?

இப்படி பக்கம் பக்கமாக குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்தக் கவிதையின் மொழிபெயர்ப்புமே தாகூரின் படைப்பின் மேன்மையை புரட்டிப் போடுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பாடலையும் உதாரணம் காட்டவிரும்புகிறேன்.

MY song has put off her adornments.

She has no pride of dress and decoration. Ornaments would mar our union; they would
come between thee and me; their jingling would drown thy whispers.

My poet’s vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy
feet. Only let me make my life simple and straight, like a flute of reed for thee to fill with
music.

இதன் மொழிபெயர்ப்பைப் பாருங்கள்-

எனது கவித்துவ
மனது
ஒருங்கே புறக்கணிக்கும்,
உனது
ஒய்யாரக் கவர்ச்சி
ஆபரணங்களை!
ஒப்பனை புரிவதும்
ஆடம்பர ஆடை அணிவதும்
பெருமை தரவில்லை
உனக்கு!
நமது நட்பின் இணைப்பை
நாசம் செய்வது
நகை அலங்காரம்!

உனக்கும்
எனக்கும் உள்ள
உறவின் குறுக்கே நுழைவது!
நெருங்கி உள்ள போது
உனது அணிகள் உண்டாக்கு
சலசலப்பு ஓசை
முணுமுணுக்கும்
உன் இனிய மொழிகள்
என் செவியில் விழாமலே
அமுக்கி விடும்!

இந்த பாடலின் மூலத்திற்கும் மொழிபெயர்ப்புக்குமான வித்தியாசங்களை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம். குறிப்பாக கடைசி பத்தியில் மூலத்திற்கும் மொழிபெயர்ப்புக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று மண்டை காய்கிறது. இதற்கு மேல் வாசிப்பது நல்லதுக்கில்லை என்று ஏழாவது பாடலுடன் ஜெயபாரதனின் வார்த்தைகளில் சொன்னால் ‘அமுக்கி வைத்துவிட்டேன்’.

ஜெயபாரதனை முன் பின் சந்தித்தது இல்லை. மின்னஞ்சல் தொடர்பு கூட இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என்ற விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டே இந்தக் குறிப்பை முடிக்க நினைக்கிறேன். ஒருவேளை இதை வாசிக்கும் போது அவருக்கு மனவருத்தம் உண்டாகக் கூடும். வயதில் மூத்தவரை வருத்தமடையச் செய்வதற்காக எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் விமர்சனம் எழுத வேண்டும் என்பதற்காக பூசி மொழுக வேண்டியதில்லை அல்லவா? திரு. ஜெயபாரதனின் கடும் உழைப்புக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். ஆனால் அந்த உழைப்பை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் செயல்படுத்தலாம். தயவு செய்து தாகூர் போன்ற ஆளுமைகளை விட்டுவிடுவது நல்லது. இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கும் புதிய வாசகன் ‘இவ்வளவுதான் தாகூரா?’ என்று இழிவாக நினைத்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் கொட்டிக் கிடக்கின்றன என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

– வா.மணிகண்டன்


20 Comments

 1. /////திரு. ஜெயபாரதனின் கடும் உழைப்புக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். ஆனால் அந்த உழைப்பை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் செயல்படுத்தலாம். தயவு செய்து தாகூர் போன்ற ஆளுமைகளை விட்டுவிடுவது நல்லது. இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கும் புதிய வாசகன் ‘இவ்வளவுதான் தாகூரா?’ என்று இழிவாக நினைத்து விடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் கொட்டிக் கிடக்கின்றன என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். ////

  இந்த அறிவுரை அர்த்தமற்றது, ஆதாரமற்றது, ஒவ்வாதது.

  திரு. வா. மணிகண்டன் மேலாக நுனிப்புல் மேய்ந்து 103 பாக்களில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு ஏதோ உளறி இருக்கிறார். அர்த்தமற்ற, ஆதாரமற்ற, சம்பந்தமற்ற விமர்சனம் செய்துள்ளார். கீதாஞ்சலியை விட்டு எழுதிய எனக்கு அறிவுரை கூறியுள்ளார். இது ஓரக் கண், ஒற்றைக் கண் பார்வை. இந்த விமர்சனம் மதிப்புரை.காமிலிருந்து, உடனே நீக்கப் பட வேண்டும்.

  இந்த நூல் 2014 இல் சேலம் அரசினர் கலைக் கல்லூரி M.A. தமிழ் பட்டப் படிப்புக்குப் பாட நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

  இரண்டு விதமாய் ஒரு நூலை அரைகுறை விமர்சனம் செய்யலாம்.

  1. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !!!

  2. நுனிப்புல் மேய்ந்து வனத்தை விளக்குவது !!!

  இந்த ஒற்றைக் கண் குருட்டு விமர்சனம் முன்னதையும், பின்னதையும் ஒத்தது. அது நூல் மதிப்புரையா ? முதிர்ச்சி யற்ற கோணத்தனமான மதிப்புரை. கருத்தை விட்டு முற்றுப் புள்ளிகள், வியப்புக் குறிகளை எண்ணி விமர்சனம் செய்கிறது.

  ஆங்கில மூலத்தில் இல்லாத அரிய கவிதைத் தலைப்புகள், தமிழ்க் கீதாஞ்சலி மொழியாக்கத்தில் தாகூர் கவிதைகளைத் மிகவும் தெளிவாக்குகின்றன. இது அறிஞர் மணிகண்டன் சிற்றறிவில் படாது, ஒற்றைக் கண் குருட்டுப் பார்வையில் தெரியாம போனதில் வியப்பில்லை !!!

  நிசப்தம் வலை அதிபர், வா. மணிகண்டன் முழுவதும் படிக்காமல், 103 இல் இரண்டு பாக்கள் மட்டும் படித்து அரைகுறை அறிவில், விரைவாக எழுதிய இந்த அரை வேக்காடு மதிப்புரை உடனே நீக்கப் பட வேண்டும்.

  சி. ஜெயபாரதன்
  http://jayabarathan.wordpress.com/

  Like

 2. Dear Mr. Va. Manikadan and Mathippurai Owners

  If you are an ethical writing persons and men of integrity, please withdraw & delete your Tamil Gitanjali mathippurai from Nisaptham website & mappurai.com website at the earliest, as you gave indecent & inappropriate comments without reading the whole of my Tamil Gitanjali Book with 103 verses.

  You did not also justify your own mathippuarai comments with logical and factual evidence and reasons.

  If you do not agree to withdraw & delete your caustic mathippurai, I am going to take legal actions against you and Mathippuri.com website, hiring my Chennai Lawyer Mr. K. Ravi, Advogate, Raja Annamalaipuram, Chennai : 600096 [Ph: 98400 49060].

  Regards,
  S. Jayabarathan.

  ++++++++++++++++++

  Liked by 1 person

 3. Dear Adocate Mr. K. Ravi,

  The Website Authors, called mathippurai.com Owners who wrote a scandalous personal criticism without proper justification on my Tamil Gitanjali book & got it also published in their website mathippurai.com [https://mathippurai.com/2014/09/30/geethanjali/] solely to down rate my book sale and defame my 50 year writing techniques.

  Since I am planning to take legal action against them, I need their phone number, location, age and qualifications.

  With this reminder I am asking them to provide me their personal identifications like phone number, age or date of birth, qualifications, and home address.

  If they so desire, I will provide them my personal details upon their request.

  Regards,
  S. Jayabarathan

  Like

 4. http://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/

  http://www.sacred-texts.com/hin/tagore/gitnjali.htm

  தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி

  (முழுக் கீதங்களின் தொகுப்பு)

  ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

  காவியக் கவியோகி தாகூர் (1861-1941)

  பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹூகோ [Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.

  1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  பாரதியாரைப் போல் மாபெரும் தேசீயக் கவியான தாகூர், தேசப்பிதா காந்தியின் மீது மதிப்புக் கொண்டவர். காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் தாகூர் என்பது பலருக்குத் தெரியாது. நோபெல் பரிசு பெற்ற தாகூருக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 இல் நைட்கூட் (Knighthood) கௌரவம் அளித்தது. ஆனால் 1919 இல் ஜாலியன் வாலா பாக் தளத்தில் ஆயுதமற்றுப் போராட்டம் நடத்திய 400 மேற்பட்ட இந்திய சீக்கியரைப் பிரிட்டிஷ் படையினர் சுட்டுக் கொன்ற பிறகு தாகூர் அவர்கள் அளித்த கௌரவப் பட்டத்தைத் துறந்தார். எட்டு வயது முதலே தாகூர் தான் கவிதை புனையத் தொடங்கியதாய்த் தனது சுய சரிதையில் கூறுகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில் வெளியானது. தாகூரின் படைப்புகளில் பரம்பரை இந்தியக் கலாச்சாரமும் மேற்கத்திய முற்போக்குக் கருத்துக்களும் பின்னிக் கிடக்கின்றன. 1901 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரின் வெளிப்பகுதியில், “விசுவ பாரதி” என்னும் கலைப் பள்ளியை ஆரம்பித்தார். காலஞ் சென்ற பிரதமர் இந்திரா காந்தி விசுவ பாரதி கலைப் பள்ளியில் பயின்றவர்.

  வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் முதலில் நல்ல வரவேற்பு அளிக்கவில்லை. பிறகு தாகூரே அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்திசை நாடுகள் கீதாஞ்சலியை பாராட்டிப் போற்றின. அதன் மகத்தான வரலாற்று விளைவுதான் கீதாஞ்சலிக்குக் கிடைத்த நோபெல் பரிசு. கீதாஞ்சலிப் பாக்களில் தாகூர் தன்னோடு உரையாடு கிறார். நம்மோடும் உரையாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனுடன் உரையாடுகிறார். சில சமயம் அவர் பேசுவது கடவுளிடமா அல்லது காதலியுடனா என்று தெரிந்து கொள்வது சற்றுச் சிரமமாக உள்ளது.

  தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழிபெயர்ப்பது ​​சிரமமான முயற்சி. தாகூரின் கலைத்துவ உள்ளத்தைக் காண்பது கடினமானது. நான் கூரை மீது நின்று மேரு மலைச் சிகரத்தை எட்டத் துணிந்தேன். கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் படிக்கும் போது, எனக்கு அத்தனை இனிமையாக இல்லை. ஆனால் அந்த வரிகளைத் தமிழில் வடித்து நான் வாசிக்கும் போது, தாகூரின் பளிங்கு உள்ளம் நளினமாக ஒளிர்வது எனக்குத் தெரிந்தது. ஆன்மீக வளர்ச்சி பெற்ற இந்திய மொழி களில் தான் தாகூரின் கீதாஞ்சலி பட்டொளி வீசிப் பறக்கிறது. தனது வங்க மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாமல், சில இடங்களில் தாகூரே தடுமாறுவது தெரிகிறது. சில இடங்களில் என்ன கருத்தைச் சொல்ல விரும்புகிறார் என்றே தெரிய வில்லை. எனக்கு வங்க மொழி தெரியாது. தாகூரின் ஆங்கில மொழி பெயர்ப்பே எனக்கு மூல நூல். தாகூரே தமிழ் கற்றுத் தமிழில் கீதாஞ்சலியை எழுதினால் எப்படி இருக்கும் என்று மனதில் நிறுத்தி, அவரது உன்னத காவியத்தைத் தமிழாக்க முயன்றேன். அந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றேனா என்று வாசகர்தான் சொல்ல வேண்டும்.

  “என் பயணம் முடிய வில்லை”, என்று கீதாஞ்சலியில் கூறும் தாகூர் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார். இராமாயணம், மகாபாரத இதிகாச நூல்கள் போல், தாகூரின் கீதாஞ்சலியும் பல்லாயிரம் ஆண்டுகள் பாரதத்தில் சீராய் நிலைக்கப் போகிறது என்பது என் ஆழ்ந்த எண்ணம். வாரம் ஒரு முறையாக ஈராண்டுகள் பொறுமையாகத் திண்ணையில் தொடர்ந்து பதிப்பித்த என் மதிப்புக்குரிய நண்பர்கள், திண்ணை அகிலவலை இதழ் அதிபர்கள், திரு. கோபால் ராஜாராம், அவர் சகோதரர் திரு. துக்காராம் ஆகிய இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள். தாகூரின் கீதாஞ்சலி முழுவதையும் தமிழ்கூறும் உலகுக்கு “அன்புடன் இலக்கிய வலைப்பூங்கா” மூலமாகவும் வழங்கிட எனக்கொரு வாய்ப்பளித்த என்னருமை நண்பர் கவிஞர் புகாரிக்கும் எனது உளங்கனிந்த நன்றி.

  சி. ஜெயபாரதன்,

  கிங்கார்டின், அண்டாரியோ,

  கனடா

  (ஜனவரி 21, 2007)

  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  கீதங்களின் தொகுப்பு

  தாகூரின்
  தமிழ்க் கீதாஞ்சலி

  ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

  (ஜனவரி 21, 2007)

  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  விழித்தெழுக என் தேசம்!

  மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

  இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
  எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
  அறிவு வளர்ச்சிக்கு
  எங்கே பூரண
  விடுதலை உள்ளதோ,
  குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
  வெளி உலகின் ஒருமைப்பாடு
  எங்கே உடைபட்டுத்
  துண்டுகளாய்ப்
  போய்விட படவில்லையோ,
  வாய்ச் சொற்கள் எங்கே
  மெய்நெறிகளின்
  அடிப்படையிலிருந்து
  வெளிப்படையாய் வருகின்றனவோ,
  விடாமுயற்சி எங்கே
  தளர்ச்சி யின்றி
  பூரணத்துவம் நோக்கி
  தனது கரங்களை நீட்டுகிறதோ,
  அடிப்படை தேடிச் செல்லும்
  தெளிந்த
  அறிவோட்டம் எங்கே
  பாழடைந்த பழக்கம் என்னும்
  பாலை மணலில்
  வழி தவறிப்
  போய்விட வில்லையோ,
  நோக்கம் விரியவும்,
  ஆக்கவினை புரியவும்
  இதயத்தை எங்கே
  வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
  விடுதலைச் சுவர்க்க பூமியில்
  எந்தன் பிதாவே!
  விழித்தெழுக
  என் தேசம்!

  ***********

  தங்கமான என் வங்காளம்

  கவியோகி: இரவீந்திரநாத் தாகூர்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

  (பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த போது, கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் “தங்கமான என் வங்காளம்” என்று வருணனை செய்து உள்ளத்தைத் தொடும் உன்னதக் கவிதை இது! பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையைப் பங்களா தேசத்தின் இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, பாராட்டுவதற்கு உரியது)

  பொன்னான என் வங்காள நாடே!
  நின்னை நான் நேசிக்கிறேன்.
  வானளாவிய நின் தென்றல் காற்று என் நெஞ்சைப்
  புல்லாங்குழல் ஆக்கி எப்போதும் இசைமீட்டும்!
  வசந்த காலத்தில்
  என்னரும் தாயகமே!
  நின் சதுப்புநிலத் தோப்பு மணம்
  உல்லாசம் அளித்தென்னைத் தாலாட்டும்!
  என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
  இலையுதிர் காலத்தில்
  என்னரும் தாயகமே!
  முற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்
  புன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்!
  என்னரும் தாயகமே!
  என்னே உந்தன் எழில்மயம்!
  என்னே உந்தன் வண்ணமயம்!
  என்னே உந்தன் அருமை!
  என்னே உந்தன் மென்மை!
  ஆலமரங்களின் பாதங்களிலே
  ஆற்றங் கரைகளின் தோள்களிலே
  எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
  என்னரும் தாயகமே!
  உன்னிதழ்கள் உதிர்க்கும் மொழிகள்
  தேனாய் இனிக்குமென் செவியினிலே!
  என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
  என்னரும் தாயகமே!
  நின்முகத்தில் சோக நிழல் படியும் போது
  என் கண்களில் பொங்கி எழும்
  நீர்த்துளிகள
  *****************

  என்னிசைக் கீதம்

  கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

  காற்றினிலே வருமென் கீதம், குழந்தாய்!
  உனைத் தழுவி
  ஆசைக் கரங்கள் போல்
  அணைத்துக் கொள்ளும்!
  உனது நெற்றி மீது முத்தமிட்டு
  இதழால் ஆசி அளிக்கும்!
  தனித்துள்ள போது உன்னருகில் அமர்ந்து
  உனது செவியில்
  முணுமுணுக்கும் என் கீதம்!
  சந்தடி இரைச்சலில் நீ தவிக்கும் போது
  அரண் அமைத் துனக்கு
  ஏகாந்தம் அளிக்கும், என் கீதம்!
  இரட்டைச் சிறகுகள் போல்
  என் கீதம்
  உன் கனவுகள் உயிர்த்தெழ
  உந்துசக்தி தரும்!
  கங்கு கரையற்ற காணாத காட்சிக்கு
  உன் இதயத்தை
  ஏந்திச் செல்லும் என் கீதம்!
  நடக்கும் பாதையில்
  காரிருள் சூழும் போது உனக்கு
  நன்றியுடன்
  வழிகாட்டும் என் கீதம்,
  வானத்து விண்மீனாய்!
  உன்னிரு கண்ணின் மணிக்குள்
  அமர்ந்து கொண்டு
  உன் நெஞ்சின் விழிகளுக்கு
  ஒளியூட்டும், என் கீதம்!
  மரணத்தில் எந்தன் குரல் மங்கி
  மௌன மாகும் போது,
  உயிருள்ள
  உன்னித யத்தில் போய்
  ஓசையிடும்
  என் கீதம்!

  ************

  Liked by 1 person

 5. தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி

  கவிஞர் வைகைச் செல்வியின்
  அணிந்துரை

  விண்வெளியின் விளிம்பில் நான். . . .

  பல ஆண்டுகள் கழித்து புல்லாங்குழலை எடுக்கிறேன். ஆம். வெகு காலம் கழித்து கீதாஞ்சலியைப் படிக்கிறேன். என் இனிய தமிழில் படிப்பதால் . . .இசையின் இனிமை கூடியிருக்கிறது.

  மூலக் கவிதைகளில் இல்லாத ஒரு சிறப்பம்சமாய், தன் கற்பனைக்கேற்ற விதமாய் மட்டும் அமையாமல், கவிதைக்குப் பொருத்தமாக அருமையான தலைப்புகள் தந்திருக்கிறார் கவிஞர் ஜெயபாரதன். இத்தலைப்புகள் கவிதைகளை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. மொழிபெயர்ப்பும் அப்படியே. சில இடங்களில் மூலத்தினையும் தாண்டி, தமிழ் மொழிக்கேயுரிய சூட்சுமம் பொதிந்துள்ளது.

  ”உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
  என்னிதயம் உணர்வதால்
  ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்
  என் உடம்பைத்
  தூயதாய் வைத்திருக்க!”

  ஆங்கிலத்தில் இவ்வரிகள் உறுப்புகளைத் தொடுவதாகவே இருக்கிறது. ஆனால் மொழி பெயர்ப்பை வாசிக்கையில் தொடுதல் உணர்ச்சி ஆன்மாவிற்குள்ளும் ஊடுருவுவதை உணர முடிகிறது.

  அதைப் போல மற்றொரு இடம்.

  ”கைவசம் உள்ள
  எந்தன் படைப்பு வேலைகளைப்
  பின்னர்
  முடித்துக் கொள்ளலாம்”

  ஆங்கிலத்தில் கைவசம் உள்ள வேலைகளை என்று தான் இருக்கிறது. இங்கு இவர் ஒரு மொழி பெயாப்பாளராக இல்லாமல் படைப்பாளியாக இருப்பதை உணர்த்தி விட்டார்.

  பிறிதோர் கவிதையில்

  ”சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
  துதி பாடி, தோத்திரம் பாடி,
  கையால்
  ஜெபமாலை உருட்டி
  உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
  நிறுத்தி விடு!
  கோயில் தனி மூலையில்,
  கதவுகளை மூடி,
  கண்களை மூடிக் கொண்டு
  காரிருளில் நீ
  யாரைப் பூஜிக்கின்றாய்?
  கண்களைத் திறந்துபார்,
  உன் இறைவன்
  முன்னில்லை என்பதை!”

  ரவிந்திரநாத் தாகூரின் இக்கவிதையை சர்வ மதத்தினரும் படிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? சர்வ மதத்தினருக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? ஜெபமாலை, உத்திராட்சக் கொட்டை என்று பாடுகிறார்.

  ”தன் சொந்த வீடு வந்தடைய
  ஒவ்வோர்
  அன்னியன் வீட்டுக் கதவையும்
  பயணி
  தட்ட வேண்டி யுள்ளது!”

  தாகூரின் அருமையான வரிகள் அத்தனையையும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். படித்ததில் எனக்குப் பிடித்த வரிகள் அத்தனையும் சுவை குன்றாமல் ஏன் மெருகேற்றியும் கூட தமிழுக்குள் பொதியப்பட்டுள்ளன.

  30 ஆம் கவிதையில் தாகூர் மனிதனின் அற்ப மனட்சாட்சியையே கூறுகிறார் என்று எண்ணுகிறேன். ஜெயபாரதனும் அப்படித்தான் எண்ணுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகளில் சிறிது மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது.

  41 ஆவது கவிதையில்

  உனக்கு நான் காத்துக் கிடப்பதை
  உறுதியாய் எப்படி
  உரைப்பேன் அவரிடம்?
  வெட்கக் கேடிது வெளியே சொல்ல!
  வறுமையை வைத்துளேன்,
  உனக்கு
  வரதட்சணை வழங்க!

  மூலத்தில் இல்லாத தொனி மொழிபெயர்ப்பில். ஏதோ சண்டை போடுவது போன்ற ஒரு தொனி. வரதட்சணைக் கொடுமை தமிழ்நாட்டிற்கே அதிகம் உரியது என்று நினைத்ததைப் போல. உறுத்தலாய் அதட்டலாய் ஆயினும் காதலியின் கையறு நிலையும் தமிழில்தான் நன்கு தொனிக்கிறது.

  மொழிபெயர்ப்பின் அருமையை, தாகூரின் வார்த்தைகளில் சொல்லப் போனால்,

  ”இன்னும் நிறைய காலியிடம் இருக்கிறது நிரப்ப… ”

  நேரம்தான் இல்லை என் இனிய நண்பர், ஜெயபாரதனின் மொழி நயத்தையும் சிறிதும் அர்த்தம் குறையாத நடையையும் சொல்லிச் சொல்லிப் பக்கத்தை நிரப்ப. ஜெயபாரதனே ஒரு கீதாஞ்சலி எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். ஏனென்றால் தாகூரின் மனத்தைப் போல அவர் மனமும் மென்மையான உணர்வுகளினால்தான் நெய்யப்பட்டிருக்கிறது. அணுவைப் பிளக்கும் விஞ்ஞானியால் மனத்தைப் பிளக்கும் கவிதைகளும் படைக்க இயலுமல்லவா?

  வலையைத் திறந்தால் அதில் ஜெயபாரதன் இல்லாமல் இருக்க மாட்டார். கவிதை, சிறுகதை, நாடகம். மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று நிறைய நிறைய . ஆனால் அனைத்துமே அவர் மனத்தின் சந்தோசத்திற்காக மட்டுமே. இவருக்கென வாசகர் வட்டம் இருந்தாலும், எவ்வித பாசாங்கும் இன்றி, எவ்வித சமரசமும் செய்யாமல் எழுதுபவர் என்பதாலேயே எங்களுக்குள் நட்பு சாத்தியமாயிற்று. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் டபிள்யு பி. யேட்ஸ் தாகூருக்கு எழுதியுள்ள தனது அணிந்துரையில் இப்படிச் சொல்லி யிருக்கிறார். நாம் அனைவரும் அதிக பக்கங்கள் உள்ள நீண்ட புத்தகங்களை எழுதுகிறோம். எழுதுவதை இனிமையாக்கும்படி அதில் ஒரு வேளை ஒரு பக்கம் கூட தரமானதாக வந்திருக்காது. ஏதாவது ஒரு பொது வடிவத்திற்குள் அந்த எழுத்துக்கள் அடங்கிப் போகின்றன. இதெல்லாம் பணம் பண்ணுவதற்காகத்தான். நமது மண்டைகளை அரசியலால் நிரப்பி விடுகிறோம். ஆனால் தாகூர் அப்படியல்ல. இந்தியக் கலாச்சாரத்தைப் போன்றே ஆன்மிகத் தேடலில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்று கூறுகிறார். கீதாஞ்சலிக் கவிஞருக்கு மட்டுமல்ல இவ்வார்த்தைகள் அதன் ஆன்மாவை மொழிபெயர்த்தவருக்கும் பொருந்தும். ஆம். வேறு சில மொழிபெயர்ப்புகள் வந்திருந்த போதும் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பு ஆன்மாவின் கீதமாக இருக்கும்.

  சமுதாயத் தீமைகளின் மீதும், சமுதாய நோக்கமில்லாத எழுத்துக்கள் மீதும் கூட அவருக்கு கோபம் உண்டு. முகம் தெரியாத தமிழர்களை, இந்தியர்களை மனதார நேசிப்பவர். அன்பான ஒரு மனிதனாக இருப்பதாலேயே அவருக்கு கீதாஞ்சலியை மொழி பெயர்க்கத் தோன்றியிருக்கிறது.

  இந்த விமர்சனத்தை தாகூரின் இந்த வரிகளில் முடிக்க விரும்புகிறேன்.

  களைத்துப் போய் நான் வெகுநேரம்
  காலோய்ந்து கிடக்கும்
  காலமும் உண்டு!
  விழித்துக் கொண்டென்
  குறிக்கோளைத் தேடி நான்,
  விரைந் தோடுவதும் உண்டு!
  ஆனால் நீ
  இரக்கமற்ற முறையில்
  என்கண் முன்பு தோன்றாமல்
  ஒளிந்து கொள்கிறாய்!

  ஆம். விமர்சனத்திற்காக எத்தனை எத்தனை முறைகள் விதவிதமான பான்ட்களில் இமெயில்கள். ஒவ்வொரு முறையும் நான் வேலைப் பளுவின் நிமித்தம், உடனடியாக அஞ்சல் பெட்டியைத் திறக்க இயலாமல் போய். சில நாட்கள் கழித்து திறக்கையில் •பான்ட் பிரச்சனை. . .மீண்டும் . . மீண்டும் சலிப்பின்றி அனுப்புவார். அலுவலகம் விட்டு ஒன்றுமே செய்ய இயலாமல் கிடக்கும் நாட்களில் திடீரென விமர்சனம் எழுத வேண்டுமே என்று, கீதாஞ்சலியையும் ஜெயபாரதனையும் படிப்பதற்காக நான் விழித்தெழுந்த நாட்கள் உண்டு. ஆனால் ஜெயபாரதன் என் கண் முன் இன்னும் தோன்றத்தான் இல்லை. எனினும் நட்பும் அன்பும் கண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஓட்டம் போல தமிழ்நாட்டையும் கனடாவையும் இணைத்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

  அன்புடன்
  வைகைச் செல்வி

  சென்னை

  Like

 6. தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி

  கவிஞர் புகாரியின் அணிந்துரை

  உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு அன்னியர் ஆகார்…

  தமிழ் என்பதொரு கடல். அதில் உலக நதிகள் அத்தனையும் வந்து கலந்திட
  வேண்டும். தமிழ்க்கடல் வந்து சேராத ஒரு துளி எழுத்தும் உலகின் எந்த
  மூலையிலும் இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் அத்தனை
  எழுத்துக்களும் அச்சுமாறாமல் தமிழுக்குப் பெயர்க்கப்பட வேண்டும்.

  தமிழ் என்பதொரு மழை. இந்த மழை பொழியாத எந்த நிலமும் உலகில் எங்கும்
  இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் காய்ந்த மண்ணிலும் ஈரமாய் தமிழ்
  நின்று பொழிந்திட வேண்டும். தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உலகின் அத்தனை
  மொழிக்கும் பெயர்க்கப்படவேண்டும்.

  இவை செய்பவன் போற்றுதலுக்குரிய தமிழன். அந்தத் தமிழனை தமிழ் தன்
  முத்தங்களுக்குள் பொத்தி வைத்துத் தாலாட்டும். அப்படித் தாலாட்டப்படும் சில
  நூறு தமிழர்களுள் அறிவியல் சிரிப்போடு ஜெயபாரதனும் இருப்பார்.

  கவியோகி இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர். அவர்
  எழுதிய பாடலைத்தான் நமது தேசிய கீதமாய் ஏற்று நூறு+ கோடி மக்களும்
  தினமும் மரியாதை செலுத்திப் பாடி வருகிறோம்.

  பழம்பெரும் இந்தியப் பண்பாட்டை மேற்குலகக் கருத்துக்களோடு இணைத்து
  சிறப்புறச் செய்து பெருமை பெற்றவர் தாகூர். அவரின் கீதாஞ்சலிக்கு ஒரு சிறப்பு
  உண்டு. அது தாகூரின் தாய் மொழியான வங்காளத்தில் எழுதப்பட்டு அவராலேயே
  ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அப்படியான ஒரு
  மொழிமாற்றத்திலிருந்து இன்னொரு மொழிமாற்றமாக நம் ஜெயபாரதன்
  கீதாஞ்சலியைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

  மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம்,
  பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும் சிதையாமல் அப்படியே
  மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி
  செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும்
  வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு
  செத்துப் போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு
  மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.

  ஜெயபாரதனின் மொழியாக்கம் சிறப்பாய் அமைந்திருக்கிறது. அதற்கு முக்கிய
  காரணம் அவர் மூலப்படைப்பின் சொல் பொருள் கவிதை நயங்களின்
  அலைகளில் அப்படியே சிலிர்த்துப்போயிருக்கிறார். அவை அப்படியே அவர்
  இதயத்தில் கூடுகட்டிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்த
  குஞ்சுகள் மூலத்தின் ராகத்தை அப்படியே இயல்பாய் இசைத்திருக்கின்றன.

  உதாரணத்திற்காக ஜெயபாரதனின் மொழியாக்க வானத்திலிருந்து ஓரிரு
  நட்சத்திரங்களின் ஓரங்களை மட்டும் இங்கே நாம் உரசிப் பார்ப்போம்.

  ஆதியில்லாக் காலத்திற்கு அந்தமில்லை
  உந்தன் கைகளுக்குள் நகர்வதால்
  எந்தன் அதிபதியே
  காலச் சக்கரத்தின் சுழற்சி நிமிடங்களை
  எண்ணிக் கணிப்பவர் எவருமில்லை

  சூட்சும தரிசனங்களின் ஆணிவேர்களைத் துலாவிப் பார்க்கும் இம்மாதிரியான
  வெளிச்ச விரல்கள்.

  மெய்வருந்தி இறுகிப்போன வயலை
  உழவன் எங்கே உழுதுகொண்டு இருக்கிறானோ
  வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
  எங்கே கல்லுடைத்து வருகிறானோ
  அங்கே உள்ளான் இறைவன்

  ஆன்மிகத் தேடலின் நிதரிசனங்களாய் உருளும் இம்மாதிரியான மனப்பயணச்
  சக்கரங்கள்.

  தன் சொந்த வீட்டை வந்தடைய
  ஒவ்வோர் அன்னியன் வீட்டுக் கதவையும்
  பயணி தட்ட வேண்டியுள்ளது

  பிறரிடம் பிச்சை எடுப்பவனே
  முதலில் உன் வீட்டு வாசல்
  முன்னின்று யாசித்திடு

  இயல்பான அசைவுகளால் காற்றில் துடிப்போடு மிதக்கும் இம்மாதிரியான
  சிந்தனைச் சிறகுகள்.

  குளிரும் மழை வேளைகளில்
  அங்குமிங்கும் அலையும் காற்றைப் போல்
  நிலைமாறிக் கலங்குது என் நெஞ்சு

  எப்போது முகம் காட்டுவாய் நீ என் அன்பே
  கண்ணிமை கொட்டாது கவலையில் சோர்ந்துபோய்
  விண்வெளிக்கு அப்பால் நோக்கியவண்ணம்
  நிற்கிறேன் விழித்துக்கொண்டு

  அழைத்துப் பாடுவது காதலியையா கடவுளையா என்று மயங்கவைக்கும்
  இம்மாதிரியான அழகு நயங்கள்.

  நான் இசைத்த முந்தைய பாசுரங்கள்
  நாக்கில் வரண்டு போனதும்
  புதிய கீதங்கள் ஊறிப்
  பொங்கி எழுந்தன நெஞ்சில்
  பழைய தடங்கள் மறைந்து போன இடத்தில்
  புதிய பூமி உதித்தது அதிசயமாய்

  அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் நம்பிக்கையின் திசையில்
  மனதை நகர்த்தி அந்த அதிசயம் நிகழ்வதே வாழ்க்கையென்று அறிவிப்பதுபோல்
  இருக்கும் இம்மாதிரியான முத்திரைச் சித்திரங்கள்.

  நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாடநினைத்த கீதம்
  இன்றுவரை வெளியில் வராமலே
  ஒளிந்து கொண்டுள்ளது

  வேட்கை மீறி கீதம் வெளிவரத் துடிக்கும்
  வேதனையே வாட்டும் என் நெஞ்சை
  பூரணமாகக் கீதம் பூத்து
  விரியவில்லை சீராக இன்னும்

  அருகில் பெருமூச்சு விடுகிறது
  காற்று மட்டும்

  கவியோகி தாகூருக்கும் அதே திருப்தியற்ற நிலைதானா என்று வியக்கவைக்கும்
  இம்மாதிரியான முத்துச் சரங்கள்.

  இப்படியாய், இந்தத் தொகுப்பு முழுவதும் தாகூரின் கவிதைகள் ஜெயபாரதனின்
  மொட்டிலிருந்து பூத்தவைபோல் பூத்திருக்கின்றன. மொழிபெயர்ப்புதானா என்று
  வியக்க வைக்கும் வண்ணம் குற்றால அருவிகளாய்க் கொட்டுகின்றன.

  தாகூரின் எண்ண நுணுக்கங்களை அப்படியே நுணுங்காமல் தருவதிலும், பரந்து
  விரிந்த தாகூரின் ஆன்மிக இதயத்தை அப்படியே தமிழ்த் தாம்பூலத்தில் ஏந்தித்
  தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயபாரதன்.

  இணையம்தான் ஜெயபாரதனை எனக்கு அறிமுகம் செய்தது.

  இணையவலை பிரித்துக் கொரித்துக்கொண்டிருந்த ஓர் மதியப் பொழுது
  ஜெயபாரதனின் கட்டுரை ஒன்றை என் கண்களுக்குள் இழுத்து வந்தது. அது ஓர்
  அறிவியல் கட்டுரை. நீளம் அகலம் ஆழம் என்று எல்லா திசைகளிலும்
  அடர்த்தியாய் இருந்த அந்தக் கட்டுரை என்னை வெகுவாகக் கவர்ந்தது.
  அறிவியல் கட்டுரை எழுதுவோர் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க இயலாமல்
  திண்டாடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அக்கட்டுரையோ மிக இயல்பான
  அழகு தமிழில், ஒவ்வொரு கலைச் சொல்லுக்கும் எளிதான தரமான தமிழ்ச்சொல்
  இட்டு, எண்ணத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சியைப்போல சட்டென
  ஏறிக்கொள்ளும் வண்ணமாய், பல புகைப்படங்களால் சூழப்பெற்று ஒரு காட்சி
  வர்ணனையைப் போல ஆக்கப்பட்டிருந்தது.

  இன்று கனடாவில் வாழும் ஜெயபாரதன், 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித்
  துறையகத்திலும் 17 ஆண்டுகள் கனடிய அணுசக்தித் துறையகத்திலும்
  பணியாற்றிவிட்டு இப்போது முழு ஓய்வில் இருக்கிறார். “ஆக்க வினைகளுக்கு
  அணுசக்தி” என்னும் இவரது முதல் புத்தகத்துக்கு சென்னை பல்கலைக் கழகம்
  மாநில முதற் பரிசை அளித்துள்ளது.

  கடந்த கோடை விடுமுறையில் என் குடும்பத்தோடு இவர் இல்லம் சென்றேன்.
  நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள்
  புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று
  புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார் ஜெயபாரதன்.

  தன் இரு மகள்களையும் கனேடியர்களுக்கு மணமுடித்துக் கொடுத்து பேரப்
  பிள்ளைகளோடு குதூகலமாய் வாழும் இவரை நேரில் சந்தித்துக் கைகுலுக்கும்
  ஒருவரால் இவரை ஓய்வு பெற்று வாழும் ஒருவராகக் காண்பது கடினம். நேற்றே
  மீசை முளைத்த துடிப்பான இளைஞரைப் போல சுறுசுறுப்பாய்ச் செயலாற்றி
  வருகிறார்.

  தமிழறிவும் அதற்கு இணையான ஆங்கில அறிவும் மட்டுமல்லாமல் கவிதை
  ரசிப்பும் ஆன்மிகத் தேடலும் ஜெயபாரதனின் விரல்களை கீதாஞ்சலி மொழியாக்கத்
  தளத்தில் உறுதியானவையாக ஆக்கி உலவ விட்டிருக்கின்றன.

  தாகூரின் கீதாஞ்சலியை நான் இப்போதுதான் முழுவதுமாக வாசிக்கிறேன்.
  ஜெயபாரதனின் தமிழ் உள்ளத்தால் அது என் கூரையைப் பொத்துக்கொண்டு
  கொட்டி இருக்கிறது. வாசித்து மகிழ்ந்தவன் நன்றி கூறுகிறேன். என்னைப்போல்
  பலரும் நிச்சயம் நன்றி கூறுவர்.

  தாகூர் கவிதை எழுதவில்லை. கவிதைகள் தாகூரை எழுதி இருக்கின்றன.
  தன்னுள்ளம் எதுவென்று பாடுகிறாரா, தன் காதலியிடம் ஏங்குகிறாரா அல்லது
  கடவுளிடம் தவிக்கிறாரா என்ற பொதுநிலைப்பாடு கீதாஞ்சலியின் வெற்றி.

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஆன்மிகப்பற்றும் அற்புத வழிதரும்
  என்பதற்குச் சான்றுகளாய் இத்தொகுப்பெங்கும் பல பாடல்கள்.

  ஒவ்வொரு மொழி மாற்றத்தின்போதும் ஏதோ ஒரு வகையில் மூலம்
  சிதைவடைவது இயல்புதான். இருந்தும், ஆங்லத்துக்கு மொழிமாற்றப்பட்ட
  தாகூரின் வங்காளக் கவிதைகளை நம் தமிழ்க் கடற்கரைகளில் சூரியனைத்
  தொட்டுப் பறக்கும் பட்டங்களாய் பறக்கவிட்டிருக்கிறார் ஜெயபாரதன்.

  தாகூரின் சொற்களில் சிறு சிதறலுமின்றி லயித்திருந்தால்தான், தாகூரின்
  கருத்தோட்டங்களோடு செம்புலப்பெயல் நீரென ஒன்றிப்போயிருந்தால்தான், இப்படி
  ஓர் அழகான அச்சுமாறாத இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் குழந்தையைப்
  பெற்றெடுத்த இன்னொரு தாயைப்போல் நிறைவோடு நிற்கமுடியும்
  ஜெயபாரதனால்.

  பிறமொழிச் செழுமைகளை தன் இதய இழைகளால் தாவிப்பிடித்து தமிழ்
  வாழையில் விருந்துவைக்கும் ஜெயபாரதனின் பணி போற்றுதலுக்குரியது.
  இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம்
  தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.

  அன்புடன்
  புகாரி

  டொராண்டோ, கனடா

  Like

 7. தமிழில் கீதாஞ்சலி
  =================

  அணிந்துரை: கவிதாயினி மதுமிதா

  “எவ்வளவுதான் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனானாலும், நம்பிக்கைக்குரிய பணியாளிடம், தன்னுடைய
  காதலியின் முத்தத்தை வாங்கி வரச் சொல்ல இயலாது”

  இப்படி கூறியவர் யார் தெரியுமா?
  தாகூர்தான்.

  எதற்காகத் தெரியுமா?

  தன்னுடைய கீதாஞ்சலியினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இன்னொருவரிடம் கொடுக்க நினைப்பது இதனை ஒத்தது என்று தாகூர் கூறியதாய் சிறுவயதில் செவிவழியாய் கேட்ட நினைவு. அப்படியே யாரிடமும் மொழிபெயர்க்க அளிக்காமல் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நோபல் பரிசும் பெற்றார்.

  பள்ளிகளில் கீதாஞ்சலியின் ஓரிரு பாடல்கள் வாசிக்கக் கிடைத்தன. நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞனின் பாடல்களை அறியும் விருப்பம் வளர்ந்தது. சில தமிழாக்கங்கள் வாசிக்கக் கிடைத்தன. அந்த வரிசையில் மகுடத்தில் ஒளிரும் ரத்தினமாக இன்று நமது கைகளில் திரு. ஜெயபாரதனின் தமிழ் கீதாஞ்சலி.

  கீதாஞ்சலி முழுக்க முழுக்க பாடல்களாக, இசை ஓவியமாக, எழுத எழுத திருப்தி இல்லாததால் தொடர்ந்து படைக்கப்பட்ட இசைக்கான அஞ்சலியாக மலர்வண்ணமாகக் கொட்டிக் கிடக்கிறது. வாசம் நுகரலாம். வண்ணம் காணலாம். அழகை ரசிக்கலாம். அவரவருக்கான பொருள் பெற்றுக் கொள்ளலாம்.

  வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து, பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையிலான விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. தாகூரின் வாழ்வின் தேசம், மொழி, தேடல், வேதனை, தாக்கம், இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, சோதனைக் காலம், ஆற்றாமை, காத்திருப்பு, மாயை, ஆன்மா, மரணம் என அனைத்தும் அவரின் வாழ்வின் அனுபவம் சார்ந்த உணர்வுகளுடன் அளிக்கப்பட்ட பாடல்களாகவே காணப்படுகின்றன.

  நான்காம் பாடலில்

  ‘இது என் வாழ்வின்
  வாழ்வைப் பற்றிய வரலாறு’ என அவரே சொல்கிறார்.

  ‘தமஸோமா ஜ்யோதிர் கமய’
  இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்.

  இது அவர் மனதில் ஆழப் பதிந்து பல பாடல்களில் வெவ்வேறு ரூபமாக வெளிப்படுகிறது.

  அப்படியே மரணம் குறித்த பல பாடல்களும் திரும்பத் திரும்ப வருகின்றன.

  ‘ஏழைகளின் தோழன் நீ’ பாடலில்
  ‘பாதை காண முடியாத
  ஒதுக்குப்புறங்களில்
  ஒடுங்கி வரும்
  துணையற்ற எளியோரிடம்
  கீழே அமுக்கப்பட்ட மக்களிடம்
  ஏழை மாந்தரிடம் என்றென்றும்
  தோழமை
  கொண்டுள்ளாய் நீ’ வரிகளும்,

  ‘சிறைக்கைதி’ பாடலில்
  மெய்வருத்தி
  இறுகிப் போன வயலை
  உழவன் எங்கே
  உழுது கொண்டிருக்கிறானோ,
  வேர்வை சிந்தி
  நடைபாதை போடுபவன்
  எங்கே கல்லுடைத்து வருகிறானோ
  அங்கே உள்ளான் இறைவன்!
  வெட்ட வெளியிலும்
  கொட்டும் மழையிலும்
  தூசி படிந்த ஆடையுடன்
  உழைப்பாளி
  கூடவே குடியுள்ளான் இறைவன்!

  மெய் வருத்திப் பணிசெய்யும்
  உழைப்பாளியை
  சந்தித்து
  நில் அவனருகே நீ,
  நெற்றி வியர்வை நிலத்தில்
  சிந்தி!

  பாடல் வரிகளும் சிறந்தவை. மற்ற பாடல்களை விட இவை சொல்லும் மனிதம் மீதான அன்பின் நுட்பம் நெஞ்சை கொள்ளை கொள்கிறது.

  ‘எங்கிருந்து வந்ததோ’ என்னும் குழந்தையின் பாடல்கள் நம்மை குழந்தை உலகத்தில் குதூகலிக்கச் செய்திடும் ஆற்றல் மிக்கவை.

  இதோ தமிழில் கீதாஞ்சலியை அளித்துள்ளார் திரு.ஜெயபாரதன். அவரின் உழைப்பு போற்றுதலுக்குரியது. தாகூரை இடைவிடாது மனதில் சுமந்து சீரிய முயற்சியுடன் தமிழ் கீதாஞ்சலியினை அர்ப்பணிப்புணர்வுடன் தாகூரின் உள்ளம் தன்னுள் ஏந்தி தமிழில் படைத்தளித்துள்ளார். கீதங்களின் உலகுக்கு தமிழ் வாசகர்களை அழைத்துச் செல்லும் பணியினை சிரத்தையாய் செய்துள்ளார். மென்மேலும் சிறந்த நூல்கள் அவர் படைக்கட்டும். அவர் தம் வாழ்வு பொன்னேட்டில் பொறிக்கப்படட்டும்.

  அன்புடன்
  மதுமிதா,

  தமிழ்நாடு, இந்தியா
  10.02.2007

  Liked by 1 person

 8. ஜோதிர்லதா கிரிஜாவின் அணிந்துரை

  திரு ஜெயபாரதன் அவர்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகமானவர் எனும் ஒரே காரணத்தாலேயே அணிந்துரை எழுத ஒப்புக்கொண்டே.ன். நான் விமரிசகர் அல்லேன். தவிர, ஓர் எழுத்தாளர் மற்றோர் எழுத்தாளரை விமர்சிப்பது (என்னைப் பொறுத்தவரையில்) சம்மதமில்லாத ஒன்று. எனக்கு நானே விதித்துக்​ ​கொண்டுள்ள இவ்விதியை ஜெயபாரதன் விஷயத்தில் நான் மீறுவதற்கு நட்பு மட்டுமே காரணம்.

  மேலும் விமர்சிப்பது என்பது ஒரு கலை. அது எனக்குக் கைவராத கலையாகும். ஒரு படைப்பு நன்றாக இருந்தது, சுவையாக இருந்தது என்று சொல்லுவதற்கு மட்டுமே அறிந்தவள் நான். அதனை அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து முழுமையாக விமர்சிப்பது நா‎ன் துளியும் அறியாத கலை.

  ஜெயபாரதன் அவர்களே தமது முன்னுரையில் கூறியுள்ளது போல், ‏ரவீந்திரநாத் தாகூர் தம்மோடும் நம்மோடும் ஆண்டவனோடும் உரையாடுகிறார் எ‎‎ன்றே தோ‎‎ன்றுகிறது. ‘சில சமயங்களில் அவர் பேசுவது கடவுளிடமா, அல்லது காதலியிடமா எ‎‎ன்று தெரிந்து கொள்ளுவது சிரமமாக உள்ளது’ எ‎ன்பதாய் ஜெயபாரத‎ன் அவர்களுக்கு ஏற்பட்ட எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. எவருக்குமே அது ஏற்படும்தான். .

  கீதாஞ்சலியில் கடைசியாக வரும் கவிதைகள் மரணத்தைப் பற்றியதாகவே உள்ளன. படிக்கும் போது ஒரு சோர்வு பற்றிக் கொள்ளுகிறது.

  எது எப்படி ‏இருந்தாலும், ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பும், கவிதை நயமும் அருமை. விமர்சனத்துக்கு நாம் எடுத்துக்கொண்டுள்ளது தாகூர் அல்லர், ஜெயபாரதனே எ‎ன்பதால் அவரது மொழிபயர்ப்பை மட்டுமே பார்ப்போம்.

  மூலத்துக்குக் குந்தகம் வராத முறையில் அவரது மொழியாக்கம் அமைந்துள்ளது.

  ‘அந்திமக் காலமி‎‎ன்றி எ‎ன்னை ஆக்கியுள்ளாய் நீ’ எனத் தொடங்கும் முதல் பாடலிலேயே களை கட்டிவிடுகிறது எனலாம். ‏‏ அவ்வரிகளில் தாகூரி‎ன் சுயமதிப்பீடு வெளிப்படுகிறது. ஜெயபாரதனின் மொழியாக்கம் அருமையாய்த் தொடங்குகிறது.

  “எ‎‎ன் வாழ்வில் கட்டுப்பாடு”

  ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்,
  என் உடம்பைத்
  தூயதாய் வைத்திருக்க

  “மாலையில் சேராத மலர்” /

  உனக்குப் பூமாலை சமர்ப்பித்து
  வணங்கும் நேரம் தவறிப்போய்,
  இன்றைய பொழுதும்
  எனக்குத் தெரியாமல்
  முடிந்து போய்விடும் என்று
  நடுங்கும் என் நெஞ்சம்

  “இறைவன்‎ எங்கிருக்கிறா‎ன்?”

  மெய் வருந்தி இறுகிப்போன
  வயலை உழவன் எங்கே
  உழுதுகொண்டிருக்கிறானோ,
  வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
  எங்கே கல்லுடைத்து வருகிறானோ,
  அங்கே உள்ளான் இறைவன்

  “எங்கிருந்து வந்ததோ?”

  மதலையின் இதழ்களில்
  மலர்ந்திடும் முறுவல்
  எங்கிருந்து வருவதென்று
  எவரேனும் அறிவரோ ?

  “ஆடும் குழந்தை”

  தழுவிச் செல்லும்
  வேனிற்தென்றல்
  வீசும்போதென்
  மேனியின் சிலிர்ப்பு
  எப்படி எனச் சொல்வேன்,
  உன் முகப் புன்னகை மலரக்
  கன்னத்தில்
  நான் முத்தமிடும் போது

  “உன்னோடு என் கலப்பு”

  பாடுபட்டுப் பணி புரிதற்கு
  ஈடுபடுத்த வேண்டும்
  முழுமையாய் என்னை நான்

  “மனவலியைத் தாங்குவேன்”

  வணிக உலகிலே
  மணிக்கணக்காய்
  ஊழியத்தில் உழன்று
  தினமும் செல்வம் சேர்த்து,
  எனது பை நிரம்பி வழிந்தாலும்
  எதுவும் முடிவில்
  சம்பாதிக்க​ ​வில்லை
  எனும் உணர்ச்சி
  வெம்பி மேவுகிறது என்னிடம்

  “என் கண்ணீர் முத்தாரம்”

  அன்னையே ! சோகத்தில்
  சிந்துமென் கண்ணீர்த்
  துளிகளை எல்லாம்
  ஒரு முத்தாரமாய்க் கோத்துச்
  சூடுவேன் உன் எழில் முகத்தில்,

  “மரணதேவனுக்கு வரவேற்பு”

  வெறுமையான என் வீட்டில்
  புறக்கணித்த தனி ஆன்மா மட்டும்
  எஞ்சி நிற்கும்
  என் இறுதிக்கொடையாக
  உனக்கு,

  “அவளைத் தேடிச் செல்கிறேன்”

  இதில் வரும் ‘அவள்’ யார்?
  சக்தியா – அதாவது கடவுளா – காதலியா ?

  ஆகியவற்றைப் பெரிதும் ரசிக்க முடிந்தது.

  அடையாளமிட்ட வரிகள் அந்தந்தப் பாடலுக்கு உரியன.

  102 ஆம் பாடலான “உன் மர்மங்களை அறிவேன்” என்பதில்,

  “அவை கூறும் அர்த்தமென்ன
  என்றெனைக் கேட்கிறார்,
  பதில் தர முடியாது அவர் முன்
  பரிதவிப் படைவேன்”

  என்று தாகூரே சொல்லுகையில், நாம் அதைப் புரிந்து கொள்ளுவதாவது!

  கடைசியாக வரும் 103 ஆம் பாடல் கடவுளுக்கு நன்றி நவிலலுடன் முடிகிறது.

  மிகச்​ ​சிலவற்றையே எடுத்துக்காட்டியுள்ளேன். ஒவ்வொரு பாடலும் சத்தானதுதான். மொத்தத்தில், ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பு அருமையாக உள்ளது. நம் பாராட்டுகள்!

  ஜோதிர்லதா கிரிஜா
  சென்னை 600 101
  ஜூலை 12, 2008.

  ​++++++++++++++++++++++++++++++++++++++++++++++++​

  Like

 9. From: Kalyanaraman ravi

  Date: 2014-10-06 12:43 GMT-04:00

  Subject: Re: தமிழில் கீதாஞ்சலி – விமர்சனம்

  To: “சி. ஜெயபாரதன்”

  i read your ​Tamil translation on 103 verses of Geethanjali. An excellent work, sir. I salute you. You have rendered each verse in chaste ​T

  amil and at the same time bringing out the spirit of the original. There are numerous poetic sparks like the following:

  ஆலமரங்களின் பாதங்களிலே

  ஆற்றங் கரைகளின் தோள்களிலே

  எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!

  என்னரும் தாயகமே!

  கண்ணீர் அருவிகள் ஆறுகளாய்ப்

  பொங்கி

  “எங்கே? எங்கே?” என்று

  கேள்வியும் கூக்குரலும்

  கேட்ட போது,

  உலகை வெள்ளம் மூழ்கி யடித்து,

  “இங்கே நான்” என்னும்

  சங்க நாதம்,

  எங்கும் உனை

  உறுதிப் படுத்தும்!

  வேட்கை மீறிக் கீதம்

  வெளிவரத் துடிக்கும்

  வேதனையே வாட்டும் என் நெஞ்சை!

  பூரண மாகக் கீதம்

  பூத்து விரிய வில்லைச்

  சீராக இன்னும்!

  அருகில்

  பெருமூச்சு விடுகிறது

  காற்று மட்டும்!

  ++++++++++++

  I thank you for sending me this file. i shall preserve it like a treasure.

  K Ravi
  Advocate,
  Raja Annamalai puram
  Chennai : 600096

  Like

 10. கோவை கவி சொல்கிறார்:

  கவியோகி தாகூர் பற்றி கவிதை எழுத இன்று தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலியைத் தேடி வாசித்தேன்.

  அருமை..அருமை . முன்பும் திண்ணையில் [www.thinnai.com] வாசித்தேன்.
  இறையாசி நிறையட்டும்.

  வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.

  19ம் நூற்றாண்டின் நவஇந்தியக் கலாச்சாரப் பிரதிநிதி
  ரவீந்திரநாத்தாகூர் மாபெரும் தேசியக்கவி. காந்தி
  விக்டர் கியூகோவிற்கு இணையாகக் கணிக்கப்பட்டார்.
  பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறித்திட
  அரிதான ராக்கிபந்தன் விழாவை அங்கறிமுகமாக்கினார்.
  வங்காளப் பிரிவினையை எதிர்த்து எழுதிய வரிகள்
  ” அமர் சோனார் பங்களா ” வங்காள தேசியகீதமானது.
  இன்னிசைக் கனிவுடைய உணர்வுப் பாடலானது.

  வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டம் தந்தார்.
  வங்காள பாரம்பரிய நாட்டுப் புறப்பாடல்
  பாரம்பரிய இசைத் தொகுப்பாக 2000ற்கும் மேலாக்கினார்.
  இரவீந்திர சங்கீத் என்றிது அழைக்கப் பட்டது.
  தாகூர் காந்திக்கு ” மகாத்மா ‘ வை இணைத்தார்
  இந்திரா காந்திக்கு ” பிரியதர்சினி ” யைச் சூட்டினார்.
  தாகூரை காந்தி மாபெரும் காவலனென்றார் (Great sentinal).
  அறிவுஜீவியாம் தாகூர் இந்தியத் தேசியகீதமாக்கினார்.

  1913ல் வங்கமொழி கீதாஞ்சலியின் ஆங்கில
  மொழிபெயர்ப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
  ஆசிய முதல் நோபற் பரிசாளரிவரே!
  ஆங்கில கீதாஞ்சலியைத் தமிழில் கனடா சி. ஜெயபாரதன்
  தமிழில் மொழி பெயர்த்த பெருமையாளர் – 2004ல்
  1915ல் பிரித்தானியா ” செவ்வீரர் ” (knight hood)பட்டமளித்தது.
  1940ல் இலக்கிய முனைவர் பட்டம் பெற்ற
  குழந்தைப் பிரியர் 7-9-1941ல் இயற்கையெய்தினார்.

  (பிரியதர்சி – அமைதியான பார்வை.)

  Like

 11. Dear Mr. Vaa. Manikadan,

  Please read all the lessons you need to know from the various comments on your defaming mathippuari in mathippurai.com website.

  Everyone knows you are afraid to put out or face any comment on your half-baked products in your Nisaptam website which is a burial place rather than a Poonga.

  Bring out, if you can, to show that some one like you is there to write like you about the great Gitanjali with half-baked knowledge.

  You must be the only Tamil Genius who can do. Your name is in the top of mathippurai.com under Gitanjali.

  If you have any wisdom at all, you will delete your sarcastic remarks in your mathippurai at once, as you insult Ravindranath Tagore by defaming me.

  S. Jayabarathan

  Like

 12. தமிழில் கீதாஞ்சலி

  பதிப்புத்துறையில் தனிச்சிறப்பான இடம் வகிக்கும் கிழக்குப் பதிப்பகம் நடத்தும் மதிப்புரை.காம் மூலம் வா. மணிகண்டன் என்பவர் உலகறிந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் அறிவியல் மேதையுமான திரு. சி.ஜெயபாரதன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த கீதாஞ்சலி நூலைக் குறித்து, முழுமையாகப் படிக்காமலும் வேண்டுமென்றே சி.ஜெயபாரதன் அவர்கள் புகழை மங்கச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும் அவர் மனத்தை இந்த 80 வயதில் புண்படச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும் கடுமையாகச் சாடி விமர்சனம் செய்திருக்கிறார்.

  நமது நோக்கம் விமர்சனத்தை விமர்சனம் செய்வதல்ல.அதே நூல் மற்றும் அதன் மொழி பெயர்ப்பு குறித்து தினமலர், தினத்தந்தி, குமுதம் ஆகிய பத்திரிகைகள் என்ன கூறின? வாசித்தவர்கள் அந்த நூலின் தரம் மற்றும் மொழிபெயர்ப்புத் திறன் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதற்கப் பின்வரும் பதிவை வெளியிடுகிறோம்.பதிப்புத்துறையில் இருந்து கொண்டே மற்ற பதிப்பாளர்கள் வெளியிடும் நூல்கள் குறித்து எழுதியவர் யார், அவர்கள் புலமைப் பின்னணி என்ன என்று அறியாத நபர்களிடம் விமர்சனம் செய்வித்து அப்படியே வெளியிடுவது கிழக்கு பதிப்பகத்திற்கு இழுக்கு தேடுமே தவிர அவர்கள் உழைப்புக்கு மரியாதை தராது என்பதைச சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

  – வையவன்

  From: Kalyanaraman ravi

  Date: 2014-10-06 12:43 GMT-04:00
  Subject: Re: தமிழில் கீதாஞ்சலி – விமர்சனம்
  To: “சி. ஜெயபாரதன்”

  I read your ​Tamil translation on 103 verses of Geethanjali. An excellent work, sir. I salute you. You have rendered each verse in chaste ​T
  amil and at the same time bringing out the spirit of the original. There are numerous poetic sparks like the following:

  ஆலமரங்களின் பாதங்களிலே
  ஆற்றங் கரைகளின் தோள்களிலே
  எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
  என்னரும் தாயகமே!

  கண்ணீர் அருவிகள் ஆறுகளாய்ப்
  பொங்கி
  “எங்கே? எங்கே?” என்று
  கேள்வியும் கூக்குரலும்
  கேட்ட போது,
  உலகை வெள்ளம் மூழ்கி யடித்து,
  “இங்கே நான்” என்னும்
  சங்க நாதம்,
  எங்கும் உனை
  உறுதிப் படுத்தும்!

  வேட்கை மீறிக் கீதம்
  வெளிவரத் துடிக்கும்
  வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
  பூரண மாகக் கீதம்
  பூத்து விரிய வில்லைச்
  சீராக இன்னும்!
  அருகில்
  பெருமூச்சு விடுகிறது
  காற்று மட்டும்!

  ++++++++++++

  I thank you for sending me this file. i shall preserve it like a treasure.

  K Ravi
  Advocate,
  Raja Annamalai puram
  Chennai : 600096
  +++++++++++++++++++++++++++++

  Like

 13. Ramkumar says:

  Jeyabarathan,

  I feel pity for you!

  Like

 14. லாயர் நோட்டீஸ் வந்திச்சா, இல்லையா? 😉

  Liked by 1 person

 15. pvramaswamy says:

  மீதியெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நூலின் தலைப்பு சரியாயிருக்கா?
  “தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி” – எதோ வித்தியாசமாக இடிக்கிறதே!

  1) அது, ‘Kithanjali” அல்ல. “Gitanjali”
  2) நூலின் பெயர், தாகூரே தமிழில் எழுதினது போல த்வனிக்கிறதே!

  எனவே, “தமிழில் தாகூரின் கீதாஞ்சலி” என்றிருந்தால், பொருத்தமாயிருக்குமோ? 🙂

  Liked by 1 person

 16. pvramaswamy says:

  One more submission. Once a work has been published, it moves to the public domain. Good that the translator has released so many praising letters. Why should he feel so upset about one more view, which is not flattery. I really wonder what will be the outcome, if those students and teachers who have to use this book as a “Text Book”, are interviewed and asked to register their true views! What do the Salem Govt. Arts College -M.A.Students & teachers say about this book!

  Like

 17. Mani says:

  Dear Jeyabarathan,

  Please try to learn “I” statement and “You” statement in English. That would give you some civility. You should have some social responsibility before you attempt to translate. Please leave tamil readers… let us and the language escape from your empowerment.

  Thank you for your understanding!

  K. Mani

  Like

 18. கீதாஞ்சலி (31)
  சிறைக் கைதி!

  மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

  “சிறைக் கைதியே!
  என்னிடம் சொல்லிடு,
  உன்னைத் தண்டித்து
  சிறையில் தள்ளியவன் யார்?”
  “எனது மேலதிகாரி”
  என்று பதிலுரைத்தான் கைதி.
  “பணம் திரட்டி ஆளும் திறத்திலும்
  உலகை மிஞ்சி
  மேலோங்கி
  அனைவரையும் அமுக்கலாம் என்று
  நினைத்தேன்!

  மன்னவன் துணையால்
  ஏராளமாய்
  செல்வக் குவியலைத்
  திரட்டி என்
  புதையல் களஞ்சியத்தை
  நிரப்பினேன்!
  மரணம் கொண்டு போனபின் எனது
  பிரபுவின்
  படுக்கையில் கிடந்தேன்!
  விழித்ததும் கண்டது என்ன
  வென்றால் நான் கட்டிய
  புதையல் களஞ்சிய மாளிகை
  என்னும்
  சிறைச் சாலையிலே கைதியாய்
  நானே
  சிக்கிக் கொண்டதை!”

  “சிறைக் கைதியே!
  என்னிடம் சொல்லிடு,
  உன் கைவிலங்கின் உடைக்க முடியாத
  இந்த இரும்புச் சங்கிலியை
  மெய்வருந்தி
  உருவாக்கியவன் யார்?”
  “மிகக் கவனமாய்
  இரும்பு விலங்கை
  உருக்கக் காய்ச்சி
  பட்டறையில்
  வார்த் தடித்தவன் நானேதான்!
  சேர்த்த செல்வாக்கும்
  தோற்காத என் தீரமும்
  தரணியை
  எனக்குக் கீழாக்கி
  தங்கு தடையின்றி தனியாக
  என்னை
  விடுதலை மனிதனாய் விட்டுவிடும் என்று
  பெருமிதம் கொண்டேன்!

  கடும் சூட்டுக் கனலில்
  இரவு பகலாய்
  காய்ச்சி
  இரும்புச் சங்கிலியை
  கடியதாய் ஓங்கி அடித்து
  வடித்தேன்!
  இறுதியில்
  என் வேலை முடிந்து,
  முறியாத கைவிலங்கு முழுதாய் ஆனதும்,
  நான் கண்டதென்ன,
  சங்கிலி
  பற்றிக் கொண்டது
  கெட்டியாய்
  முற்றிலும் என்னை!

  *****************

  Shylaja : Shylaja Narayan

  shylaja01@gmail.com

  Reply to all
  to தமிழ், mintamil, vallamai, tamilmantram, vannan

  சிறந்த மொழிபெயர்ப்பு.. கெட்டியாய் முற்றிலும் என்னை என முடித்தவிதம் அருமை !

  ++++++++++++++

  தேமொழி

  தேமொழி

  Reply to all
  to mintamil, vallamai

  சிறந்த மொழிபெயர்ப்பு ஐயா, முன்னர் உங்கள் நூலிலும் படித்திருக்கிறேன்(பக்க எண் # 62) , நன்றி.

  எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துகள் பாடலை அழியா நிலைக்கு உயர்த்துகிறது.

  ++++++++++++++

  Tthamizth Tthenee

  Tthamizth Tthenee

  Reply to all
  to தமிழ், mintamil, vallamai, tamilmantram, vannan

  அருமையான மொழி பெயர்ப்பு

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  Like

 19. P.Dhakshinamoorthy Says:
  மதிப்பிற்குரிய ஐயா,

  வணக்கம்.

  தங்களின் கட்டுரைகள் [http://jayabarathan.wordpress.com/ நெஞ்சின் அலைகள்] ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாகவும், ஒவ்வொரு இந்தியனுக்கும் பல செய்திகளை ஒருங்கிணைத்து தரக்கூடியதாகவும், ஆழமான சிந்தனை செய்யக்கூடிய கருக்களையும் கருத்துக்களையும் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. தாங்கள் ஒரு அணு விஞ்ஞானி என்பதோடு மட்டுமல்லாது, ஒரு தேசப்பற்று மிக்க இந்தியராக, ஒரு சிறந்த சிந்தனையாளராக, எழுத்தாளராக, மொழி மாற்றம் செய்யும் திறனாளராக, கவிஞராக இப்படிப் பல முகங்களைக் கண்டு வியப்படையச் செய்கிறது!

  தாங்கள் மொழியக்கம் செய்த “கீதாஞ்சலி” மிகவும் உணர்வுப் பூர்வமாக அப்பெரும் ஞானக்கவி ரபீந்திர நாத் தாகூர் அவர்களின் உணர்வுகளைச் சிறிதும் மாறாமல், மிக நேர்த்தியாகச் செய்திருப்பதை எண்ணி வியந்து போகிறேன். அச் சிறப்பை எடுத்துரைக்கும் அளவிற்கு எனக்கு மொழித்திறன் போதவில்லை என்றே உணர்கிறேன்! என்னை அது மிகவும் கவர்ந்தது!

  தங்களின் அயரா உழைப்பை உணர்ந்து வியக்கிறேன்.

  தங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடலும், நீண்ட ஆயுளும் மற்றும் எல்லா வளங்களும் இறைவன் அளிக்க வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

  அன்புடன்,
  பெ.தக்‌ஷிணாமூர்த்தி
  (திருச்சி – சொந்த ஊர்)
  சிங்கப்பூர்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: